துணிவு, வாரிசு ஆகிய இரண்டு படங்களில் பொங்கல் வின்னர் யார் என்பதை கண்டுபிடிக்க விஜய், அஜித் ரசிகர்கள் பதைபதைப்போடு, ஆர்வத்தோடு விவாதம் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு மாத காலமாக ஊடகங்களை ஆக்ரமித்திருந்த விவாதம் துணிவா? வாரிசா? என்பதுதான்.
நாட்டில் அரசாங்கம் சார்ந்து, அரசியல் சார்ந்து, மக்கள் நலன் சம்பந்தமான பிரச்சினைகள், போராட்டங்கள் எல்லாவற்றையும் கடந்து இரண்டு தனிநபர்களில் வணிகரீதியாக முதல் இடம் யாருக்கு என்பதை தொலைக்காட்சி, வலைத்தள சேனல்கள், இணையதளங்கள் முதன்மை செய்தியாக வெளியிட்டு வந்தன.
வாரிசு, துணிவு இரண்டு படங்களும் அறிவிக்கப்பட்ட நாள் முதல் படம் வெளியாகும்வரை சம்பந்தபட்ட படங்களில் நடித்துள்ள அஜீத்குமார், விஜய் அல்லது படக்குழுவினர் பத்திரிகையாளர்களை மரியாதை நிமித்தம் கூட சந்திக்கவில்லை.
படம் சம்பந்தமான செய்திகள், புகைப்படங்களை கூட முறைப்படி ஊடகங்களுக்கு வழங்கவில்லை. இருப்பினும் இரண்டு படங்கள் பற்றிய செய்திகளை பரபரப்பு குறையாமல் ஊடகங்கள் வெளியிட்டது.
இதன் காரணமாக அஜீத்குமார் – விஜய் ரசிகர்கள் இரு பிரிவாக பிரிந்து நின்று சமூக வலைதளங்களில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை எதிர்கொள்ளும் ரசிகர்கள் மனநிலைக்கு உள்ளானார்கள்.
இந்த நிலையில் இருந்துதான் வாரிசு – துணிவு படங்களின் வசூலை நாம் பார்க்க வேண்டியுள்ளது. அஜீத்குமார் நடிப்பில் வெளியான துணிவு படத்தை வெளியிடும் உரிமையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட்ஜெயண்ட் மூவீஸ் வாங்கியது.
இதனால் அதிகமான திரைகள் அப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
வாரிசு படத்தை திரையிட உரிமையாளர் விரும்பினாலும் என்ன படம் தியேட்டர்களில் போட வேண்டும் என்பதை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவன அதிகாரிகளே தீர்மானித்தனர். இதனால் 417 திரைகளில் துணிவு படம் திரையிட ஒப்பந்தம் செய்ய முடிந்தது.
வாரிசு படத்தின் தமிழ்நாடு உரிமையை 7 ஸ்கீரீன் மூவீஸ் வாங்கி இருந்தது. ஆனால் பெரும்பான்மையான திரைகளில் வெளியிடும் ஏரியா உரிமை ரெட் ஜெயண்ட்க்கு வழங்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 398 திரைகளில் வாரிசு படத்தை திரையிட ஒப்பந்தமானது.
அடிப்படையான இந்த வேலைகள் எல்லாம் முடிந்த பின்னர் திரைக்கதையில் நடைபெறும் எதிர்பாராத திருப்பம் போன்று முதல்நாள் நள்ளிரவு துணிவு படம் மட்டுமே சிறப்பு காட்சியாக திரையிட அனுமதிக்கப்பட்டது. இது வாரிசு படத்திற்கு பின்னடைவாக அமைந்தது.
கடந்த பல வருடங்களாக முன்னணி கதாநாயகர்கள் நடிப்பில் வெளியான படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்ததில்லை. அதனால் போட்டிக்கு படங்கள் இல்லாமல், அதிகமான திரைகளில் வெளியிடப்பட்டு அதிகமான வசூல் குறுகிய நாட்களில் கிடைத்ததே சாதனையாக கூறப்பட்டு வந்தது.
இந்த ஆண்டின் முதல் பிரம்மாண்ட படங்களாக ஜனவரி 11 அன்று வெளியான வாரிசு, துணிவு என இரண்டு படங்களின் முதல் நாள் வசூல் தொடங்கி, மூன்றாம் நாள் வசூல் வரை உற்றுநோக்குகிறபோது கதாநாயகர்களின் வசூல் சாதனை பிம்பங்கள் சுக்குநூறாக உடைந்திருப்பதை அறியமுடிகிறது.
ஓட்டப்பந்தயத்தில் ஊக்கமருந்து செலுத்தப்பட்டு வெற்றிபெற்றது போன்றே துணிவு, வாரிசு படங்களின் வசூல் உள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக ஊடகங்களால் இலவசமாக கிடைத்த பிரம்மாண்ட விளம்பர வெளிச்சம், இரு மடங்கு, மும்மடங்கு டிக்கட் விலை, சிறப்புக்காட்சிக்கு பத்து மடங்கு விலை உயர்வு என டிக்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டதால் ஜனவரி 11 அன்று துணிவு படம் 21.58 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது.
அடுத்தடுத்த நாட்களில் இப்படத்தின் வசூல் 8 கோடி ரூபாய், 9 கோடி ரூபாய் என குறைந்து மூன்று நாட்களில் சுமார் 39 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது துணிவு படம்.
வாரிசு படத்தை பொறுத்தவரை, துணிவு படத்தை காட்டிலும் குறைவான திரைகள், குறைவான காட்சிகள் என திரையிடப்பட்டாலும் முதல்நாள் மொத்த வசூல் 19.58 கோடி ரூபாய், இரண்டாம் நாள் 7.18 கோடி ரூபாய், மூன்றாம் நாள் 8. 50 கோடி ரூபாய் என 35.26 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகியுள்ளது.
இந்த வசூல் கணக்கை சம்பந்தபட்ட தயாரிப்பு நிறுவனம், அல்லது விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களால் அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியவில்லை.
தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள டிக்கெட் விலை அடிப்படையில் குக்கிராமம் முதல் நகர்புறம் வரை வாரிசு – துணிவு படங்களின் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவில்லை.
ஒவ்வொரு ஊர், நகரம் சார்ந்து சூழலுக்கு ஏற்ப குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிறப்புக்காட்சிக்கு பெருநகரங்களில் ஒரு டிக்கெட் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவற்றின் காரணமாகவே முதல் நாள் வசூல் இரண்டு படங்களுமே 20 கோடி ரூபாயை கடக்கவும், நெருங்கவும் முடிந்திருக்கிறது.
வாரிசு – துணிவு நேரடி போட்டியில் வசூல் நிலவரம் இது என்றால், அஜீத்குமார் நடிப்பில் 2022 பிப்ரவரி 24 அன்று 600க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான வலிமை 36.17 கோடி ரூபாயும், விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் 600க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான பீஸ்ட் 31.4 கோடி ரூபாய் முதல் நாள் வசூல் செய்துள்ளது.
இந்த வசூல் அவரவர் படங்களுக்கு சாதனை அளவாக கூறப்பட்டு வருகிறது. சமபல போட்டியாளர் களத்தில் இருந்தால் வசூல் குறையும் என்பதை உணரமுடியும்.
நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடிக்க வாங்கிய 125 கோடி ரூபாயும், துணிவு படத்தில் அஜீத்குமார் நடிக்க வாங்கிய 70 கோடி ரூபாயும் திரையரங்குகளில் தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள விலை அடிப்படையில் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு வருடமாவது இவர்களது படங்கள் சுமார் 500 திரைகளில் அரங்கு நிறைந்து ஓடவேண்டும் என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.
ராமானுஜம்
”80 வயது முதியவனாக பார்க்கிறார்கள்” – முரளிவிஜய் வேதனை
“பெண்தான் சிறுநீர் கழித்தார்” – கதையையே மாற்றிய ஷங்கர்!