தமிழ் சினிமாவில் விநியோகம், திரையரங்க உரிமையாளர் என 40 ஆண்டுகளை கடந்து பயணித்துவரும் திரைத்துறை சார்ந்த சிலரில் திருப்பூர் சுப்பிரமணியும் ஒருவர்.
சரியோ, தவறோ நேரடியாக பதில் கூறிவிடுபவர். அதனாலேயே புதிய படங்கள் வெளிவரும் போதெல்லாம் ஊடகங்கள் தொடர்புகொள்ளும் முதல்நபராக திருப்பூர் சுப்ரமணி உள்ளார்.
ஜனவரி 11 அன்று வெளியான வாரிசு, துணிவு படங்களில் அதிகம் வசூல் செய்த படம் எது என்பதை பற்றி சம்பந்தபட்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் கவலைப்படவில்லை.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு முடிந்தவரை கல்லா கட்டுவதில் கவனத்தை செலுத்தின.
ஆனால் அஜித்குமார், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாரிசை துரத்தியடித்த துணிவு, வாரிசிடம் மண்டியிட்டு மண்ணை கவ்விய துணிவு என போஸ்டர்களை வெளியிட்டு அவரவர் வசதிக்கு ஏற்ப வசூல் கணக்கை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் துணிவு படத்தை முழுமையாகவும், வாரிசு படத்தை ஐந்து விநியோக பகுதிகளிலும் வெளியிட்டுள்ள ரெட் ஜெயண்ட் மூவீஸ் வட்டாரத்தில் விசாரித்தால்,
‘தமிழ்நாட்டில் எத்தனை திரையரங்கங்கள் இருக்கிறது, அதில் புதிய படங்களை திரையிடும் திரைகளின் எண்ணிக்கை, இருக்கைகள் எண்ணிக்கை, மொத்த வசூல், நிகர வசூல் போன்ற அடிப்படை தகவல்களில் குறைந்தபட்ச புரிதல், அறிவு இல்லாதவர்கள் எல்லாம் சமூகவலைதளங்களில் ஒன்றான டிவிட்டரில் வசூல் கணக்கை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இவர்கள் தங்களை சினிமா வர்த்தக வல்லுனர்கள், சினிமா கிரிட்டிக், விமர்சகர்கள் என கூறிக்கொள்கின்றனர். இவர்கள் பதிவிடும் தகவல்களை மேற்கோள் காட்டி தொலைக்காட்சி, மற்றும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.
ஒரு நடிகனின் ரசிகன் அல்லது பணத்துக்காக திரை துறையினர் சொல்கிற தகவல்களை முன்னிலைப்படுத்துபவர்களை ஊக்குவிக்கும் போக்கை திரைதுறையினர் செய்வதால் தவறான தகவல்கள் ஆவணங்களாக மாறும் அபாயம் தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது.
துணிவு படத்தின் உலகளாவிய மொத்த வசூல் 150 கோடி ரூபாய் என அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார். ஆனால் ட்விட்டரில் ஒருவர் தமிழ்நாட்டில் 149 கோடி ரூபாய் என பதிவிடுகிறார்.
இதை என்னவென்று கூறுவது. எங்களுக்கே முதல் வாரத்திற்கான முழுமையான வசூல் தகவல் திரையரங்குகளில் இருந்து தலைமைக்கு வந்து சேராத நிலையில் கூலிக்கு வேலை செய்யும் சமூகவலைதள செயல்பாட்டாளர்களின் தகவல்கள் தவறு என சுட்டிக்காட்டி வருகிறோம். இருந்தபோதும் இது போன்ற தவறான தகவல்கள் வருகிறது” என்றனர்
தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணி அவர்களிடம் பேசியபோது
ஒரு திரைப்படத்தின் மொத்த வசூல், லாப நஷ்ட தகவல்களை தயாரிப்பாளர் மட்டும்தான் கூற முடியும்.
படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் அவரது ஏரியா மொத்த வசூலை மட்டுமே கூற முடியும். திரையரங்கு உரிமையாளர் அவரது தியேட்டரில் வசூலான தகவலை கூற முடியும். இதுதான் யதார்த்த நிலைமை. சமூக வலைதளங்களில் வருகின்ற வசூல் விபரங்களை நான் காமெடியாக பார்த்து கடந்துவிடுகிறேன். அதனை சீரியசாக நான் கருதுவதில்லை” என்றார்.
அவரிடம் துணிவு, வாரிசு படங்களின் வசூல் நிலவரத்தை கேட்ட போது,
“தமிழ்நாடு முழுக்க ‘வாரிசு’, ‘துணிவு‘ இரண்டு படங்களும் சமமான வசூலைத்தான் குவித்து வருகின்றன. எவ்வளவு வசூல் என்பதை அறிய முன்பு போல் தியேட்டருக்குச் சென்று கேட்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
அனைத்து நிலவரங்களும் ஆன்லைனிலேயே கிடைக்கின்றன. விஜய், அஜித்குமார் இருவருமே முன்னணி நடிகர்கள்தான். அதனால், வசூலில் எந்த வித்தியாசமும் இல்லை.
‘வாரிசு’ தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் கேட்டால் ‘விஜய் படம் நம்பர் ஒன்’ என்பார். போனி கபூரிடம் கேட்டால் ‘அஜித்குமார் படம் நம்பர் ஒன்’ என்பார். வியாபாரத்துக்காக தங்கள் படத்தின் கதாநாயகனை முன்னிலைப்படுத்திப் பேசுவது இயல்பான ஒன்று” என கூறினார்.
படம் வெளியாகும் முன்பே தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் விஜய் என்கிற விவாதம் கிளம்பியது பற்றி கேட்ட போது
“’நம்பர் ஒன் நடிகர்’, ‘சூப்பர் ஸ்டார்’ என்றால், அவர் ரஜினிகாந்த்தான். கடந்த 40 வருடங்களாக அவர் அப்பட்டத்தை தக்கவைத்து வருகிறார். ரஜினி படங்களுக்கு உலகளவிலான வியாபாரம் உள்ளது. விஜய், அஜித் படங்களுக்கு அப்படி இல்லையே?
இருவரும் கடந்த பத்து வருடங்களாகத்தான் முன்னணியில் இருக்கிறார்கள். தொடர்ந்து 40 வருடங்கள் முன்னணியிலிருந்துவிட்டு சொல்லட்டும். எம்.ஜி.ஆர் என்றால் ஒரு எம்.ஜி.ஆர்தான். இன்னொரு சிவாஜி பிறக்க முடியாது. அதேபோல், ரஜினியும் ஒரு ரஜினிதான். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, அது வேறு யாருக்கும் கிடையாது.
அதனால், விஜய், அஜித்துக்கு வெவ்வேறு பெயர்களைச் சூட்டிக்கொள்ளுங்கள். இங்கு பட்டங்களுக்கு என்ன பஞ்சமா? மற்றபடி விஜய், அஜித் இரண்டு பேரும் திறமையான நடிகர்கள். ‘வாரிசு’தான் அதிக வசூல் என்று விஜய் ரசிகர்களும், ‘துணிவு’தான் நம்பர் ஒன் என்று அஜித் ரசிகர்களும் சொல்லிக்கொள்ளலாம்.
இந்த இரண்டுமே உண்மையில்லை. இரண்டு படங்களுக்கும் முதல் வாரம் சமமான வசூல் கிடைத்திருக்கிறது” என்றார்.
துணிவு, வாரிசு படங்களின் உள்ளடக்கம் பற்றி கேட்டபோது,
‘துணிவு’ க்ளாஸ் படம். புரிகிறவர்களுக்கும் கொஞ்சம் விவரமான ஆடியன்ஸுக்கு மட்டும் பிடித்திருக்கும். சாதாரண ஆடியன்ஸுக்கும் பெண்களுக்கும் ‘வாரிசு’தான் ஓகேவாக உள்ளது. தியேட்டர்களில் ‘துணிவு‘ படத்துக்கு ஆன்லைனில் ஹவுஸ் ஃபுல்லாகவும், ‘வாரிசு’ படத்துக்கு கவுன்ட்டர் புக்கிங் இருக்கிறது.
விஜய் படத்தை விரும்பி பார்க்கும் சாதாரண மக்கள் இன்னமும் நேரில்தான் டிக்கெட் வாங்குகிறார்கள். அதனால் வாரிசு படத்தின் வசூலை ஆன்லைன் முன்பதிவை வைத்து கணிக்க முடியாது.
அதனால்தான், வசூல் சமமாக வந்துகொண்டிருக்கிறது என்கிறேன். அதேநேரம், இரண்டு படத்திலும் கன்டென்ட் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருந்தால், வசூலும், வரவேற்பும் அதிகம் இருந்திருக்கும். படத்தின் கதைக்குள் கதாநாயகன் இருக்க வேண்டும் ஆனால் இந்த படங்களில் ஹீரோ மேல் கதையைக் திணித்திருக்கிறார்கள்.
கதைக்குத் தகுந்தமாதிரி நடிப்பதில்லை. இவர்களுக்குத் தகுந்தமாதிரி கதையை மாற்றிக்கொள்கிறார்கள். கதைக்குத் தகுந்தமாதிரி நடித்தால் இன்னும் மெகா ஹிட்டாகி வசூலைக் குவிக்கும்” என்றார்.
நியூசிலாந்து பிரதமர் பதவியிலிருந்து விலகும் ஜெசிந்தா ஆர்டென்
ஈரோடு: இரவோடு இரவாக தலைவர்கள் சிலைகள் மூடல்!
வடிவேலு வீட்டில் திடீர் சோகம்!