வாரிசு, துணிவு வசூல்: டிக்கெட் விலை குறைக்கப்படுமா?

சினிமா

விஜய் நடிப்பில் வாரிசு, அஜித்குமார் நடிப்பில் துணிவு இரண்டு படங்களும் கடந்த ஜனவரி 11 அன்று உலகம் முழுவதும் வெளியானது.

நீயா நானா போட்டியில் இரு தரப்பு ரசிகர்களும் தங்கள் மானசீக நடிகரின் படத்தை பற்றியும், அந்தப் படத்தின் மொத்த வசூல் கணக்கையும் சமூக வலைதள பக்கங்களில் உயர்த்தி பதிவிடுவதை தீவிரமாக செய்து வந்தனர்.

படத்திற்கு முதலீடு செய்தவர்களை காட்டிலும் நடிகர்களின் ரசிகர்கள் வசூல் கணக்கில் கவனம் செலுத்தினார்கள்.

இது மட்டுமல்லாது உண்மையான வசூல் கணக்கை இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் அறிவிக்காமல் நடிகர்கள் கௌரவத்திற்காக அறிவிப்பதுபோல் துணிவு படம் உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வசூல் என அறிவிக்கப்பட்டவுடன் வாரிசு 210 கோடி ரூபாய் என தயாரிப்பாளர் தில்ராஜு அறிவித்தார்.

இது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. தமிழ்நாட்டில் ஜனவரி 11 அன்று வாரிசு வெளியானது, போன்று ஆந்திரா, தெலங்கானாவில் படத்தை ரிலீஸ் செய்ய தில்ராஜு முயற்சிக்கவில்லை.

ஏற்கனவே திட்டமிட்டபடி சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா நடித்த படங்கள் ஜனவரி 12 அன்று வெளியாகி முதல் இரண்டு நாட்களும் சுமார் 150 கோடி ரூபாய் வசூல் வேட்டையை முடித்த பின் ஜனவரி 14 அன்று ஆற அமர பொறுமையாக வாரிசு படத்தை ரிலீஸ் செய்தார் தில்ராஜு.

இதனால் அவர் மீது விஜய் கடுமையான கோபத்தில் இருப்பதை திசைதிருப்பவே 210 கோடி மொத்த வசூல் என அறிவித்தார் என்கின்றனர் தமிழ், தெலுங்கு திரையுலக வட்டாரத்தில்.

ஆனால் நேற்று வரையில் கூட துணிவு, வாரிசு இரண்டு படங்களும் தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய் மொத்த வசூலை கடக்க முடியாமல் தடுமாறி வருகிறது என்பதே திரையரங்குகள் வட்டார தகவலாக இருக்கிறது.

என்ன காரணம் என தியேட்டர் வட்டாரத்தில் விசாரித்தால், ”பொங்கல் விடுமுறை வரை இரண்டு படங்களுக்கும் கூட்டம் இருந்தது விடுமுறை முடிந்த பின் டிக்கெட் வியாபாரம் இரண்டு இலக்கத்திற்கு போய்விட்டது.

பொதுவாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் அதிகரிக்க வேண்டும் ஆனால் நேற்று, இன்றும் தமிழ்நாடு முழுவதும் வாரிசுக்கு மோசமாகவும், துணிவு படத்திற்கு மிக மோசமாகவும் வசூல் நிலவரம் உள்ளது.

நகர்புறங்களில் வசதியான, ஆடம்பரமான தியேட்டர்களில் மட்டும் டிக்கெட் விற்பனை திருப்திகரமாக உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலையில் டிக்கெட் விற்பனை செய்யுமாறு தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும் (குறைந்தபட்சம் 200 ரூபாய்) கூறியிருப்பதால் அதற்கு தகுதியான திரையரங்குகளில் மட்டும் கூட்டம் வருகிறது.

மற்ற திரையரங்குகளுக்கு மக்கள் வருகை குறைந்திருப்பதால் வசூல் மோசமாக உள்ளது.

இந்த சரிவில் இருந்து இரண்டு படங்களும் மீண்டு வர வேண்டும் என்றால் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும்” என்கின்றனர்.

இராமானுஜம்

வேங்கைவயல் நீர்தேக்கத் தொட்டியை இடிக்க உத்தரவு!

டிஜிட்டல் திண்ணை: இடைத்தேர்தலில் போட்டியிட கட்சிக்குள் எதிர்ப்பு- எடப்பாடியா, பன்னீரா? என்ன செய்வார் அண்ணாமலை?

+1
0
+1
2
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0