வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே பாடல் வெளியான 10 நாட்களில் 5 கோடி பார்வையாளர்களை இன்று யூடியூபில் (நவம்பர் 16) கடந்துள்ளது.
பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு வம்சி இயக்கத்தில் விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத் குமார், யோகி பாபு, குஷ்பூ உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) பொங்கலுக்கு வெளியாகும் என்று ஸ்ரீ வெங்கடேஷ்வரா தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில், வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் 5 ஆம் தேதி வெளியானது.
வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே என்ற முதல் பாடலை நடிகர் விஜய் மற்றும் பாடகி மானசி ஆகியோர் பாடியிருந்தனர். ரஞ்சிதமே பாடல் வரிகளை விவேக் எழுதியிருந்தார்.
இந்த பாடல் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. பலரும் ரீல்ஸ் ஆக வெளியிட்டனர். தொடர்ந்து ரஞ்சிதமே பாடல் யூடியூபில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
அதே நேரத்தில் ரஞ்சிதமே பாடல் வெளியான போது மொச்ச கொட்ட பல்லழகி பாடலின் மெட்டுக்களைக் காப்பி அடித்ததாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.
இந்நிலையில், ரஞ்சிதமே பாடல் வெளியாகி 10 நாட்களில் 5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். ரஞ்சிதமே ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
செல்வம்