பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ் சினிமா முன்னணி நடிகர்களான நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும், நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படமும் ஜனவரி 12 வெளியாகும் என வெளிநாடுகளில் அறிவிக்கப்பட்டு அதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டு நடந்துவந்தன.
இந்த நிலையில் இரண்டு படங்களின் தணிக்கை முடிந்து சான்றிதழ் பெற்றபின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்த்திருந்தனர்.
நேற்று மாலை வாரிசு படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களில் துணிவு படம் ஜனவரி 11 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார்.

இதனால் திரையரங்குகள் வட்டாரத்தில் குழப்பம் ஏற்பட்டது. அந்த சமயம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் இடம் பெயரக்கூடிய நாட்களாகும். அதோடு அன்றைய தினம் வேலை நாள்.
ஜனவரி 12 வெளியீடு என்பதே தவறான முடிவு என விமர்சனங்கள் இருந்து வந்த நிலையில் போனி கபூர் அவசரப்படுகிறார் என கூறி வந்த நிலையில் துணிவு வரும் அன்றே வாரிசு வெளியிடப்பட வேண்டும் என விஜய் கூறியதால் இன்று காலை, ஜனவரி 11 அன்று வாரிசு வெளியீடு என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நடிகர்களின் திரைப்படங்களுமே வியாபாரரீதியாக தங்களது இருப்பை இப்போதே நிலைநிறுத்திக் கொண்டுள்ளன.
பண்டிகை காலத்தை முன்வைத்து வெளியாகும் திரைப்படங்கள் வெற்றிபெறுவதும், வசூலை குவிக்கவும் குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கு நோக்கி வர வேண்டும்.
அதற்கேற்றார்போல தயாராகியுள்ளது நடிகர் விஜய்யின் வாரிசு. தொழில் வளர்ச்சி அடைந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் விஜய் தனது குடும்பத்தின் தொழில் போட்டியாளரான நடிகர் பிரகாஷ் ராஜை எப்படி வென்றார் என்பதே வாரிசு திரைப்படத்தின் ஒருவரி கதை என்பதை நேற்று வெளியான டிரைலர் மூலம் உணரமுடிகிறது.
தெலுங்கு திரையுலகின் வழக்கமான அதே வகையிலான கதையம்சம் கொண்ட இந்தப் படம் முழுக்க முழுக்க நடிகர் விஜய்யை நம்பி மட்டுமே களமிறங்குகிறது.
பீஸ்ட் தோல்விக்குப் பிறகு குடும்பங்களிடம் சரணடையும் நடிகர் விஜய்க்கு எந்தவகையிலும் இது புதுவித கதையம்சம் கொண்ட படமாக இருக்கப் போவதில்லை என்பதே டிரைலரில் இடம்பெற்ற காட்சிகளும், வசனங்களும் கூறுகிற செய்தி.
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு மங்காத்தா திரைப்படத்திற்குப் பிறகு அவர் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படமாக இருக்கும் என்பதை அதன் டிரைலர் உணர்த்துகிறது.
எதிர்மறை கதாபாத்திரத்திற்கு தேவையான வசனங்களே படத்தின் டிரைலரை ஆக்கிரமித்திருந்தது. வங்கிக் கொள்ளை கதை கொரோனா காலத்தில் மணி ஹெயிஸ்ட் எனும் வெப் தொடராக பழகிய பார்வையாளர்களுக்கு அதே எண்ணத்தையே துணிவும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

வலிமை திரைப்படத்தில் அம்மா செண்டிமெண்டில் ரசிகர்களை நோகடித்த அஜித்குமார் அதிலிருந்து மாறி தற்போது வங்கிக் கொள்ளை கதையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
அதிரடிக் காட்சிகளை நம்பியிருக்கும் இந்தப் படத்திற்கு ஆறுதல் அதுமட்டும்தானா இல்லை வேறு ஏதாவது கதைக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறதா என்பது ஜனவரி 11ஆம் தேதிதான் தெரியும்.
வணிக வளாகத்தை கைப்பற்றிய கொள்ளையர்கள் கதையிலிருந்து அம்மா செண்டிமெண்டிற்க்கு விஜய் மாறியிருக்க அம்மா செண்டிமெண்டிலிருந்து வங்கிக் கொள்ளை கதைக்கு நடிகர் அஜித்குமார் மாறியிருக்கிறார்.
ஆக மொத்தம் அவரது மேல் சட்டையை இவரும், இவரது மேல் சட்டையை அவரும் மாற்றிக் கொண்டு ரசிகர்களின் பாக்கெட்டுகளை குறிவைக்கும் வேட்டையாக இருக்கப் போகிறது இந்தப் பொங்கல் பண்டிகை.
ப்ரொபஷனல் கொரியர்: இரண்டாவது நாளாக ரெய்டு!
வார் ரூம்: அண்ணாமலையை கிழித்து தொங்க விட்ட மாரிதாஸ்