வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஜனவரி 1-ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமானது வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வாரிசு திரைப்படத்திலிருந்து ரஞ்சிதமே ரஞ்சிதமே, தீ தளபதி, இட்ஸ் ஃபார் யூ அம்மா ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தநிலையில், வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (டிசம்பர் 24) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கான டிக்கெட்டுகளை கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
இந்த டிக்கெட்டுகளின் விலை ரூ.4000 வரை வசூலிப்பதாகவும், பல ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றும் இணையத்தில் விஜய் ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.
இதனால், வாரிசு இசை வெளியீட்டு விழாவை நேரில் பார்க்க முடியாத விஜய் ரசிகர்கள் தொலைக்காட்சிகளில் பார்ப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
வாரிசு இசை வெளியீட்டு விழாவின் ஒளிபரப்பு உரிமத்தை சன் டிவி வாங்கியுள்ளது. இதனால் புத்தாண்டு விழாவை முன்னிட்டு ஜனவரி 1-ஆம் தேதி வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சன் டிவி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்