படம் வெளியாவதற்கு இன்னும் 3 நாட்கள் தான் இருக்கிறது என்று வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனம் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபலி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்துள்ளார்.
மேலும் குஷ்பு, சங்கீதா, பிரகாஷ் ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற விஜய் பட இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/ZachHI68-varisu-audio-launch.jpg)
தொடர்ந்து வாரிசு பட டிரெய்லரை படக்குழு ஜனவரி 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட்டது. வெளியான 1 மணி நேரத்திற்குள்ளேயே 43 லட்சம் பார்வைகளையும் கடந்தது.
இந்நிலையில் பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு படம் ஒரே நாளில் (ஜனவரி 11) வெளியாகவுள்ளதால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் அவர்களுக்குப் பிடித்த ரசிகர்களின் போஸ்டர்களை சமூக வலைத்தளம் வாயிலாகப் பகிர்ந்து புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/thunivu-vs-varisu-16703830104x3-1.jpg)
திரையரங்குகள் வெளியில் கட் அவுட் மற்றும் போஸ்டர்களை ஒட்டி படம் வெளியாவதைக் கொண்டாடுவதற்குத் தயார் நிலையில் இருக்கின்றனர்.
இந்நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வாரிசு படத்தின் குடும்ப போஸ்டரை வெளியிட்டுள்ளது.
படம் வெளியாவதற்கு இன்னும் 3 நாள் தான் இருக்கிறது என்ற தலைப்புடன் படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள போஸ்டரை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
வாரிசு படத்தின் டிரெய்லரில் நடிகை குஷ்பு மற்றும் நடிகர் பிரபு நடித்திருக்கும் காட்சிகள் இடம்பெறவில்லை. ஆனால் இன்று வெளியாகியுள்ள போஸ்டரில் நடிகர் பிரபு இடம்பெற்றாலும் நடிகை குஷ்பு போஸ்டரில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மோனிஷா