விக்ரமனுக்கு ஆதரவாக ட்விட்டரில் வாக்கு கேட்ட விசிக தலைவர் தொல் திருமாவளவனை, நடிகை வனிதா விஜயகுமார் விமர்சித்து இருந்தார். இதனையடுத்து குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த சிலர் தன்னை மிரட்டுவதாக அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தொடங்கியது.
21 நட்சத்திர போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களாக அசீம், அமுதவாணன், நந்தினி, விக்ரமன், ஷிவின் ஆகியோர் என 5 பேர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.
போட்டியின் இறுதிநாளில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் ஐவரில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். இதனால் ரசிகர்கள் தீவிரமாக வாக்களித்து வரும் நிலையில் , 5 பேரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
விக்ரமனுக்காக ஓட்டுக்கேட்ட திருமா
போட்டியில் கலந்துகொண்டுள்ள விக்ரமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வரும் அவருக்கு அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஆதரவு தெரிவித்தார்.
அத்துடன் ”தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். அறம் வெல்லும்” என்று ட்விட் செய்திருந்தார்.
எப்படி அவரால் கேட்க முடியும்?
இதற்கு நடிகையும், முந்தைய பிக்பாஸ் சீசனில் பங்கேற்றவருமான வனிதா விஜயகுமார் எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதற்கு என்ன சொல்கிறீர்கள். இதெல்லாம் அரசியல் தந்திரம். மரியாதைக்குரிய ஒரு அரசியல் கட்சித் தலைவரும் இன்னாள் எம்பியுமான ஒருவர் ரியாலிட்டி ஷோவில் குறிப்பிட்ட போட்டியாளருக்கு வாக்களிக்குமாறு தனது தொண்டர்களிடம் எப்படி கேட்க முடியும்? மிகவும் சாமர்த்தியமான அரசியல் விளையாட்டு.” என்று கூறியிருந்தார்.
அதேநேரத்தில் தனது ஆதரவை, மற்றொரு போட்டியாளாரான ஷிவினுக்கு தெரிவித்து மக்களை வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் வரும் போது என்னலாம் செய்வாங்க?
இந்நிலையில் குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த சிலர் யூடியூப் சேனல்களை தொடர்பு கொண்டு தனக்கு மிரட்டும் வகையில் எச்சரிக்க முயல்வதாக வனிதா தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “உங்க அரசியல் புத்தி என்னனு காலம் காலமா பாத்திருக்கோம். நேர்மையா மக்களுக்கு நல்லது பண்ணி முன்னேற பாருங்க.
ஒரு பிக்பாஸில் ஜெயிக்கிறதுக்கே இவ்வளவு அராஜகம்னா, தேர்தல் வரும் போது இவங்க என்னலாம் செய்வாங்க? என்று வனிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
உண்மையில் தன்னை குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் மிரட்டியதாக கூறும் வனிதா விஜயகுமார் இதுவரை அதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
எமர்ஜென்சி கதவு திறந்த விவகாரம் : அண்ணாமலை விளக்கத்தால் புது குழப்பம்! குந்தவைக்கும் நாட்டியம் கற்றுக் கொடுத்தவர் வழுவூரார்: முதல்வர் உரை!