பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு.
முன்னதாக இந்தத் திரைப்படத்தில் முதலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தது நடிகர் சூர்யா தான். ஆனால், படத்தில் இருந்து பாதியிலேயே அவர் விலகினார். படப்பிடிப்பின் போது சூர்யாவுக்கும் பாலாவுக்கும் நடந்த கருத்து மோதலே இதற்கு காரணம் என திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டது.
இதையடுத்து இந்தப் படத்தில் நடிகர் அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டு அவரை வைத்து படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பாலாவின் டிரேட் மார்க் கதாநாயகன் கதாபாத்திரத்தில் அருண் விஜயை இந்தப் படத்தில் காண முடியும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.
இந்த நிலையில், தற்போது இந்தப் படத்திற்கு யு / ஏ சான்றிதழ் தணிக்கைக் குழுவால் வழங்கப்பட்டுள்ளது என அப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்தப்.படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தில் ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசை வேலைகளை இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பார்த்துள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தத்திரைப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருமா பிறந்தநாள்.. ராகுல், ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!