கதாபாத்திரங்களை வடிவமைத்துவிட்டு அதற்கு ஏற்ப திரைக்கதை எழுதுவது இயக்குநர் பாலாவின் பாணி. தனக்கு திருப்தி ஏற்படும்வரையில் காட்சிகளை படமாக்கி அதில் சிறந்த ஷாட்டுகளை தொகுப்பது பாலாவின் வழக்கம்.
இதனால் பாலா இயக்கத்தில் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. வணிக லாப நோக்கத்துடன் இயங்கும் சினிமாவில் படைப்பாளி, படைப்பை சார்ந்து படங்களை தயாரிக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் மிக குறைவு. இதனால் புதிய படங்களை இயக்கும் வாய்ப்புகள் இன்றி இருந்து வந்தார் பாலா.
இந்த நிலையில் இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் தான் வணங்கான்.
இப்படத்தில் சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஹீரோ, ஹீரோயினாக நடிக்க பிரம்மாண்ட பொருட்செலவில் 2டி நிறுவனம் தயாரித்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்றது.
சூர்யா – பாலா இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்துவது தடைப்பட்டது. அதனால் சூர்யா – பாலா இருவரும் பரஸ்பரம் இப்படத்தை தொடர்வதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்
இருப்பினும் வணங்கான் கதையை கைவிட விரும்பாத இயக்குநர் பாலா, அதனை வேறு ஹீரோவை வைத்து எடுக்க முடிவெடுத்து, அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை மீண்டும் தொடங்கினார்.
அதுமட்டுமின்றி இப்படத்தை சுரேஷ் காமாட்சி உடன் சேர்ந்து தன்னுடைய பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இயக்குநர் பாலாவே தயாரித்துள்ளார்.
https://twitter.com/arunvijayno1/status/1706164216640553012
இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி என்கிற இளம் நடிகை நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்த நிலையில், வணங்கான் படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் சேறும் சகதியுமாக இருக்கும் அருண் விஜய், ஒரு கையில் சிதிலமடைந்த பெரியார் சிலையையும், மற்றொரு கையில் பிள்ளையார் சிலையையும் வைத்திருக்கிறார்.
அமானுஷ்யமான கதாபாத்திரங்களின் வழியே கதை சொல்லி வந்த இயக்குநர் பாலாவின் படங்களில் அரசியல் இருக்காது.
சமகால இந்திய அரசியலில் விவாத பொருளாக இருந்து வரும் பெரியாரும், விநாயகரும் கதாநாயகனின் கரங்களில் இருப்பது போன்ற முதல் பார்வை அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தும்.
இராமானுஜம்