வல்லான் : விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

Vallan Tamil Movie 2025 Review

டைட்டிலுக்கு என்ன அர்த்தம்? Vallan Tamil Movie 2025 Review

‘குற்றம் நடந்தது என்ன’ பாணியில் காவல் துறை விசாரணை தொடர்பான தகவல்கள் அடங்கிய காணொளிகள் சில காலமாகப் பெரும் கவனிப்பைப் பெற்று வருகின்றன.

யூடியூப் போன்ற தளங்களில் கூட அம்மாதிரியான உள்ளடக்கத்திற்கு வரவேற்பு அதிகம். அப்படியொரு சூழலில், ‘இம்மாதிரியான த்ரில்லர் கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் ரசிக்கப்படாதா’ என்ற கேள்வியோடு பல படைப்புகள் வெளியாகின்றன. அவற்றுள் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது ‘வல்லான்’.

சுந்தர்.சி, தான்யா ஹோப், ஜெயகுமார், சாந்தினி, கமல் காமராஜு, ஹெபா படேல், தலைவாசல் விஜய், டிஎஸ்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை மணி சேயோன் எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார்.

எப்படி இருக்கிறது ‘வல்லான்’ தரும் காட்சியனுபவம்? Vallan Tamil Movie 2025 Review

குற்ற விசாரணை!

உயரதிகாரியைத் தாக்கியதற்காக ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுகிறார் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், இப்படியொரு நிலைக்கு அவர் ஆளாகிறார்.

அதையடுத்து, அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் காணாமல் போகிறார். அதனால், தனக்கு வேண்டிய அதிகாரியை நாடிச் சில தகவல்களைப் பெறுகிறார். தானே அது பற்றி விசாரிக்க முயற்சிக்கிறார்.

அப்போது, அப்பெண் பணியாற்றிய நிறுவனத்தின் தலைமை அதிகாரி கொலையாகிறார். ஒரு பண்ணை வீட்டில் அது நிகழ்கிறது.

சம்பவம் நிகழ்ந்தபோது, அந்த நபருடன் ஒரு பெண் இருந்திருக்கிறார். அவர் சினிமாவில் நாயகியாக வாய்ப்பு தேடி வருபவர்.

அவரைப் பிடித்து விசாரிக்கையில், சில தகவல்கள் கிடைக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, நடனமாடும் பணியில் ஈடுபடுகிற ஒரு பெண் காணாமல் போன விஷயம் தெரிய வருகிறது.
அதன்பின்னே செல்கையில், மகாபலிபுரம் செல்லும் சாலையில் காணாமல்போன பெண்ணின் பிணம் கிடைக்கிறது. கூடவே, அழுகிய நிலையில் இன்னொரு சடலமும் கிடைக்கிறது. அதில், நிச்சயதார்த்தம் நடந்தபோது அந்த இன்ஸ்பெக்டர் அணிவித்த மோதிரம் இருக்கிறது.

ஆனாலும், தனக்கு மனைவியாக வரவிருந்த பெண் அல்ல இது என்று அவர் உறுதியாக நம்புகிறார். கொலையான தொழிலதிபரின் குடும்பத்தில் ஏதோ ஒரு தவறு நிகழ்வதாக உணர்கிறார்.

அதன்பிறகு என்னவானது? நடந்த குற்றம் எத்தகையது? உண்மையான குற்றவாளி யார் என்று அந்த இன்ஸ்பெக்டர் கண்டறிந்தாரா என்று சொல்கிறது ‘வல்லான்’ படத்தின் மீதி.

கதை சொல்லல் ‘ஓகே’!

அடுத்தடுத்த சம்பவங்கள், ஒவ்வொன்றின் முடிவிலும் ‘கொக்கி’ போன்று இணைப்பை ஏற்படுத்துகிற தகவல்கள் என்று ‘த்ரில்லர்’ வகைமை திரைக்கதையைக் கொண்டிருக்கிறது ‘வல்லான்’. ஆனால், இரண்டாம் பாதியில் அவ்வாறு புகுத்தப்பட்ட திருப்பங்கள் திருப்தியைத் தருவதாக இல்லை. அதுவே இப்படத்தின் பெருங்குறை.

’அடுத்து என்ன நடைபெறப் போகிறது’ என்று அறிந்துகொள்ள ஆர்வம் காட்டும்விதமான கதை சொல்லலைக் கொண்டிருக்கிறது ’வல்லான்’. இயக்குனர் மணி சேயோன் அதற்கேற்ப எழுத்தாக்கம் செய்திருக்கிறார்.

இக்கதையில் நாயகன் சுந்தர்.சிக்கு தந்த முக்கியத்துவத்தை இதர பாத்திரங்களுக்குத் தரவில்லை. போலவே, நாயகியாக வரும் தான்யா ஹோப் குறித்த விளக்கமும் பின்பாதியில் தான் இடம்பெற்றுள்ளது. அவற்றைக் கொஞ்சம் கவனித்து சில மாற்றங்களைப் புகுத்தியிருக்கலாம்.

பெரிதாகச் சிரிக்காமல், உணர்வுகளை வெளிக்காட்டாமல், குற்ற விசாரணையை மேற்கொள்ளும் ஒரு போலீஸ் அதிகாரியாகத் தோன்றுவதென்பது நல்ல விஷயம் தான். ஆனாலும், ‘இன்னும் சிறப்பாக நடிக்கலாம்’ எனும் விமர்சனத்தைப் பெறும்விதமாகவே உள்ளது சுந்தர்.சியின் இருப்பு.

’தான்யா ஹோப் நல்ல நடிகையா’ என்ற கேள்வி எழும் வகையிலேயே தமிழில் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் உள்ளன. அவ்வாறில்லாத வகையில் அவரைத் திரையில் காட்ட முயற்சித்திருக்கிறது இப்படம்.

ஹெபா படேல் இதில் சட்டென்று கவனத்தைப் பெறும்விதமாகத் தோன்றியிருக்கிறார். கமல் காமராஜ், அபிராமி வெங்கடாச்சலம், சாந்தினி தமிழரசன், ஜெயகுமார், தலைவாசல் விஜய், கேபிஒய் டிஎஸ்கே என்று பலர் இதில் நடித்திருக்கின்றனர். அவர்களுக்கான காட்சிகளைக் கொஞ்சம் அதிகப்படுத்தியிருந்தால் இத்திரைக்கதையில் சில லாஜிக் குறைபாடுகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஒளிப்பதிவாளர் மணி பெருமாள், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ் என்று இதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் இயக்குனர் திரையில் காட்ட விரும்பிய உலகை சிருஷ்டிக்க முயன்றிருக்கின்றனர்.

சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை காட்சிகளை மேலுயர்த்த உதவியிருக்கிறது. அந்த அளவுக்கு இதன் பாடல்கள் அமையவில்லை.

ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் ஒரு த்ரில்லர் கதையைத் திரையில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் மணி சேயோன். அதில் வழக்கமான கமர்ஷியல் படத்திற்குரிய அம்சங்கள் என்று சிலவற்றைத் திணிக்க முற்பட்டிருக்கிறார். அது போன்ற விஷயங்களே இதில் துருத்தலாகத் தெரிகின்றன.

‘வல்லான்’ என்பதற்கு ‘வல்லவன்’ என்று அர்த்தம் கொண்டால் இந்த டைட்டிலுக்கான தேவை என்னவென்பது புரியும். தமிழில் ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் பெரும்பாலான படங்களுக்கு இதனைச் சூட்டலாம்.

அதனால், அவற்றில் இருந்து வேறுபட்டு டைட்டிலுக்கு அர்த்தம் சேர்க்கும் விதமாகச் சிறப்பான விஷயங்களைப் படத்தில் இடம்பெறச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அது நிகழாத காரணத்தால், ‘சுமார்’ என்று சொல்லும்படியாக அமைந்திருக்கிறது ‘வல்லான்’.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share