உலகம் முழுவதும் ‘பிப்ரவரி 14’ காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது காதலர்கள் தங்கள் காதலை கூறவும், காதல் உறுதியானவர்களும், காதல் திருமணம் செய்து கொண்டவர்களும் தங்களுக்கான கொண்டாட்ட நாளாக கடைப்பிடித்து வருகின்றனர் காதலர் தினத்தை.
காதலை சொல்லாமல் போனவர்கள், காதல் நிறைவேறாமல் வெவ்வேறு திருமணம் செய்து கொண்டவர்கள் தங்கள் காதல் நினைவுகளை நினைவு கூறும் நாளாக காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
காதலர் தினம் என்கிற நாளை அடையாளப்படுத்தி, அதனை பொது சமூகம் அங்கீகரித்து கொண்டாட தொடங்குவதற்கு முன்பாகவே நூற்றாண்டு கடந்த தமிழ் சினிமா காதலை வற்றாத ஜீவநதியாக பதிவு செய்திருக்கிறது.
சினிமாவின் பிரதான திரைக்கதை கருவாக காதலை வைத்து ஆயிரக்கணக்கான திரைப்படங்களை படைத்திருக்கிறது. காதலை நாகரிகமாக” சம்மதமா நான் உங்களோடு வர சம்மதமா” என்கிற நாகரிக வார்த்தை தொடங்கி தற்போதைய சினிமா பல வடிவங்களை பார்த்து விட்டது.
இருந்த போதிலும் காதலை, காதல் உணர்வுகளை, காதல் பிரிவை நாகரிகமாக 1970 வரையிலான காலகட்டங்களில் திரையிசை பாடல்கள் மூலம் பதிவு செய்திருக்கிறது தமிழ் சினிமா . காதல் தற்காலத்தில் இணையத்தின் வழியே பலரது செல்போன்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
காதலுக்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் இன்றுள்ள சமூக வலைதளங்கள் பூர்த்தி செய்துவிடுகின்றன. நட்பு வேண்டுதலில் தொடங்கி, அதன் வழியே காதலுக்கான ஒப்புதலை பெறுவது, தொடர்ந்து பேச மொபைல் ரீசார்ஜ், செலவுக்கு பணம், பெட்ரோலுக்கு பணம் என தங்கள் காதலை உறுதிப்படுத்த GPay இன்றைய காதலர்களுக்கு பயன்பட்டு வருகிறது.
ஆனால், சமூகவலைதளம், மொபைல் போனும் காதலை இத்தனை சுலபமாக்குவதற்கு முன்பு, காதலர்கள் ரொம்பவே சிரமப்பட்டனர். குறிப்பாக காதலர்கள் அவ்வளவு எளிதாக சந்திக்கவோ பேசிக்கொள்ளவோ, உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளவோ முடியாது.
இத்தகைய சூழலில், பண்டைய காலம் முதல் நவீனத்துவமாகும் வரை காதலுக்கு தூது பிரதானமாக பயன்பட்டது. அன்னப்பறவை, புறா, நண்பர்கள், வீட்டு வேலைக்காரி, மாணவர்கள் மூலம் தங்கள் காதலை தெரிவிக்கவும், ஒப்புதல் ஆன காதலை தொடரவும் இவர்கள் மூலம் கடிதம், பரிசுப்பொருட்கள் என பல்வேறு பரிமாணங்களில் காதலை தமிழ் சினிமா பதிவு செய்திருக்கிறது.
இதில் கடித வகை தூது உணர்வுப்பூர்வமாக காதலர்களால் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. காதல் எப்படி வரும்? எப்போதெல்லாம் வரும்? வந்தால் என்ன செய்யும்? காதலியிடம் எப்படி பேசுவது? காதலை இப்படி எளிதாக விளக்கி கூறியதில் சினிமாக்களுக்கு மிக முக்கிய பங்குண்டு.
காதல் கடிதம் எப்படியெழுதுவது? என்பதை காதலர்களுக்கு கற்றுக் கொடுத்ததில் தமிழ் சினிமாவுக்கு பெரும்பங்கு உண்டு. திரையிசை பாடல்கள் மூலம் அதை இன்னும் சுலபமாக்கியது.
அப்படி காலத்தால் அழிக்க முடியாத, இப்போதும் தலைமுறை கடந்து இரவு நேரங்களில் தனிமையை சுகமாக்கும் பாடல்கள் தமிழ் சினிமாவில் குவிந்து கிடக்கிறது. அவற்றில் குறிப்பிட்ட சில பாடல்கள் வாசகர்களுக்காக.
1. அன்புள்ள மான்விழியே
கருப்பு வெள்ளைக் காலத்திலேயே எவர்கிரீன் கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் ஜெய்சங்கர் அவருடன் ஜோடியாக ஜமுனா நடித்த படம் 1965 ஆம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான “குழந்தையும் தெய்வமும்”காதலிக்கு காதல் கடிதம் எழுதும் முறை வழக்கத்தில் இருந்ததை சித்தரிக்கும் வகையில் ‘அன்புள்ள மான்விழியே’ பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாலி எழுதியிருக்கும் இந்தப் பாடலில், ‘அன்புள்ள மான்விழியே’ என்று காதலியை குறிப்பிட்டிருப்பார். அதேபோல, ‘ஆசையில் ஓர் கடிதம், நான் எழுதுவதென்னவென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை’ என்று எழுதியிருப்பார்.
மேலும், காதலின் இணக்கத்தை விவரிக்கும் வகையில் ‘அதை கைகளில் எழுதவில்லை, இரு கண்களில் எழுதி வந்தேன்’ என்று காதலை பொழிந்திருப்பார். 58 வருடங்களை கடந்த பின்னும் தலைமுறை கடந்து “அன்புள்ள மான்விழியே” பாடல் ரசிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது.
2. நான் அனுப்புவது கடிதம் அல்ல
சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடிப்பில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் V.K.ராமசாமி தயாரித்த படம் ‘செல்வம்’. கே.வி.மஹாதேவன் இசையமைப்பில்1966-ம் ஆண்டு வெளிவந்த ‘செல்வம்’ படத்தில் கவிஞர் வாலி எழுதி இடம்பெற்ற பாடல் இது.
‘நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்,
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்,
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள’
என்று முதல் மூன்று வரிகளிலேயே கடிதம் சென்றடைந்தோரை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்திருப்பார். பாடலின் இரண்டாவது சரணத்தில்,
‘நிலவுக்கு வான் எழுதும் கடிதம், நீருக்கு மீன் எழுதும் கடிதம், நிலவுக்கு வான் எழுதும் கடிதம், நீருக்கு மீன் எழுதும் கடிதம்’
என்று காதலன் காதலியை ஒப்பீடு செய்திருக்கும் அழகு இன்றளவும் காதலர்கள் மனதில் தலைமுறை கடந்து வசந்தத்தை வாரி வழங்கி வருகிறது.
3. கண்மணி அன்போடு காதலன்
சந்தானபாரதி இயக்கத்தில், இளையராஜா இசையில் 1991-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘குணா’. இந்தப் படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டு, தான் நினைக்கும் கற்பனை நிகழ்வுகளை நிஜமாக எண்ணி நடக்கும் கதாநாயகனாக கமல்ஹாசன் நடித்திருப்பார்.
பொதுவாக காதலன் தனது மனதில் தோன்றுவதை யாரிடமாவது கூற, அதை ஒருவர் அவனுக்கு எழுதி கொடுக்கும் வழக்கத்தில் இருந்து இந்தப் பாடல் எழுதப்பட்டிருந்தது. தனது காதலியிடமே, மாசற்ற தனது காதலை நேரடியாக வெளிப்படுத்த அதை காதலி உள்வாங்கிக் கொண்டு எழுதுவதுபோல் உருவாக்கப்பட்டிருக்கும்.
இளையராஜாவின் இசையில் இந்தப் பாடலை வாலி எழுதியிருப்பார்.
‘கண்மணி அன்போடு காதலன், நான் எழுதும் கடிதமே,
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா,
நான் இங்கு சௌக்கியமே’
என்று உரையாடல் நடையிலேயே இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கும். பாடலின் ஜீவனாக
‘மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனிதக் காதலல்ல,
அதையும் தாண்டிப் புனிதமானது’
என்ற வரியில் காதலின் புனிதத்தை இந்த உலகிற்கு உணர்த்திய பாடல். வணிக ரீதியாக படம் வெற்றி பெறவில்லை என்றாலும்கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையில் தவிர்க்க முடியாத படமாக ‘குணா’ உள்ளது.
இன்றளவும் காதலர்களுக்கிடையே சந்தேக எண்ணம் தலைதூக்கும்போது காதலியிடம், காதலன் இந்தப் பாடல் வரிகளை அழுத்தம் கொடுத்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது தவிர்க்க முடியாத உண்மை.
4. காதல் கடிதம் வரைந்தேன்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், சௌந்தர்யன் இசையமைப்பில் சரத்குமார், விஜயகுமார், ஆனந்த்பாபு, ஸ்ரீஜா ஆகியோர் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான படம் “சேரன் பாண்டியன்”.
கதாநாயகன், கதாநாயகிகளுக்கு இடையிலான காதல் பாடல்கள் இடம்பெற்று வந்ததை மாற்றிய படம் ‘சேரன் பாண்டியன்’. இந்தப் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆனந்த் பாபு, ஸ்ரீஜா இருவருக்கு இடையிலான காதலை பாடல் மூலம் சொல்லும் வகையில் எழுதப்பட்ட பாடல் இது.
இன்றும் தமிழக புறநகர், மற்றும் மலைக்கிராமங்களில் பயணிக்கும் மினி பேருந்துகள் சில ஊர்களின் ஷேர் ஆட்டோக்களிலும், கிராமங்களில் மைக்செட் கட்டி கொண்டாடப்படும் ஊர் திருவிழாக்களிலும் தவிர்க்க முடியாமல் உயிர்ப்புடன் இருந்துவரும் பாடல்.
‘காதல் கடிதம் வரைந்தேன்
உனக்கு வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா’
என்ற கேள்வியோடுதான் பாடல் தொடங்கியிருக்கும்.
‘உள்ளம் துள்ளுகின்றதே,
நெஞ்சை அள்ளுகின்றதே,
உங்கள் கடிதம் வந்ததால்,
இன்பம் எங்கும் பொங்குதே,
உண்மை அன்பு ஒன்றுதான்
இன்ப காதலில் என்றும்
வாழ்ந்திடும் இனிய சீதனம்’
என்றெல்லாம் காதல் கடிதத்தின் அழகை விவரித்திருப்பார் பாடலை எழுதி இசையமைத்திருப்பார் சௌந்தர்யன் .
5. நலம் நலமறிய ஆவல்
பார்க்காமலே காதல் என்பதை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய படம் ‘காதல் கோட்டை’. இயக்குநராக அறிமுகமான முதல் படத்தில் முதல் முறையாக தேசிய விருதை தமிழ் சினிமாவுக்கு பெற்றுத் தந்த அகத்தியன் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘காதல் கோட்டை’.
தேவாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் காதலர்கள் மட்டுமின்றி, ஒரு கடிதம் எப்படியெழுத வேண்டும் என்பதை அத்தனை சிறப்பாக சொல்லியிருக்கும். இப்பாடலை படத்தின் இயக்குநர் அகத்தியன் எழுதியிருந்தார்.
‘நலம் நலமறிய ஆவல்,
உன் நலம் நலமறிய ஆவல்,
நீ இங்கு சுகமே,
நான் அங்கு சுகமா?’
என்பதுதான் எல்லா கடிதங்களின் தொடக்க வரிகளாக இருந்தாலும், காதலில் அது ஆழமான அர்த்தத்தைக் கொடுக்கிறது.
‘கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே…
என் இதழ் உனையன்றி பிறர் தொடலாமா?
உன் முகம் நான் பார்க்க
கடிதமே தானோ,
வார்த்தையில் தெரியாத வடிவமும் நானோ,
நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே,
நிஜமின்றி வேறில்லை என்னிடமே’
என்ற வரிகள் எல்லாம் காதலின் உன்னதத்தை, உயர்வை, உயிர்ப்புடன் கூறியவை என்றால் மிகையல்ல. இப்படத்தில் நடித்த அஜித்குமார், தேவயானி இருவருக்கும் தமிழ் சினிமாவில் வணிக முக்கியத்துவத்தை வழங்கிய படம்.
தமிழ்நாடு முழுவதும் 100 நாட்களை கடந்து ஓடிய ‘காதல் கோட்டை’ திரையிசை பாடல் அடுத்த பத்தாண்டுகள் காதலர்களின் தாய் மொழியானது என்று சொன்னால் அது மிகையாகாது.
6.காதல் கடிதம் தீட்டவே
பிரவீண் காந்த் இயக்குநராக அறிமுகமான படம் ‘ஜோடி’. நடிகை த்ரிஷா துணை நடிகையாக அறிமுகமான இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மியூசிக்கல் ஹிட்டடித்த ‘ஜோடி’ படத்தில் இந்தப் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார்.
‘காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்,
வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும்,
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்,
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்’
என்று காதலுக்கும், வானத்துக்கும் இடையிலான தூரத்தை பேனா மூலம் குறைத்திருப்பார் வைரமுத்து.
‘கடிதத்தின் வாா்த்தைகளில்
கண்ணா நான் வாழுகிறேன்,
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ,
பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்,
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ…’
இதுபோன்ற வரிகள் மூலம் காதலையும், கடிதங்களையும் உயர்ந்த நிலைக்கு உயிர்ப்புடன் கொண்டு சேர்த்திருப்பார் வைரமுத்து. 1999 ஆம் ஆண்டு வெளியான இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் இளைய சமூகத்திடம் தாக்கத்தை ஏற்படுத்திய படம் என கூற முடியும்.
7. நிலா… நீ வானம் காற்று
சேரன் நடித்து இயக்கிய ‘பொக்கிஷம்’ படத்தில் அவருக்கு ஜோடி பத்மப்ரியா.2009-ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் சபேஷ்-முரளி இசையில் யுகபாரதி இப்பாடலை எழுதியிருக்கிறார். மனிதர்களின் வாழ்வில் கடிதங்களின் முக்கியத்துவத்தை உரக்கப் பேசியது இத்திரைப்படம். ரஷ்யப் புரட்சி தலைவர் லெனினும், நதீராவும் கடிங்களின் வழியே கொண்டிருந்த ஆழமான, அன்பான, இலக்கியத் தரமான, ரசனையான, கவித்துவமான, பண்பான, பகட்டில்லா காதல் தான் இந்தப் பாடல்.
‘நிலா நீ வானம் காற்று, மழை
என் கவிதை மூச்சு,
இசை துளி தேனா மலரா,
திசை ஒலி பகல்’
என்று பாடலை தொடங்கியிருப்பார்.
‘அன்புள்ள மன்னா,
அன்புள்ள கணவா,
அன்புள்ள கள்வனே,
அன்புள்ள கண்ணாளனே,
போன்ற வரிகளும்
அன்புள்ள படவா,
அன்புள்ள திருடா,
அன்புள்ள ரசிகா,
அன்புள்ள கிறுக்கா,
அன்புள்ள திமிரே,
அன்புள்ள தவறே,
அன்புள்ள உயிரே,
அன்புள்ள அன்பே’
உள்ளிட்ட வரிகள் மூலம் 2000-க்குப் பிறகான காதல் சொல்லாடல்களைப் பயன்படுத்தி காதலின் புதிய பரிமாணத்தை பதிவு செய்திருக்கும் பாடல்.
தொழில்நுட்ப வளர்ச்சி, மேற்கத்திய நாட்டு கலாச்சாரங்களின் பாதிப்பால் இன்றைய காதலர்களிடம் நவீனத்துவம் பொங்கி வழிந்தாலும்திருமணம் என்று வருகின்ற போது மணமேடையில் பாரம்பர்ய உடையில் அமர்வது தலைமுறை கடந்தும் நிலைத்து வாழ்கிறது.
அது போன்று தான் காதலை கடிதம் வாயிலாக சொன்ன திரையிசை பாடல்களும் காலத்துக்கும் என்றென்றும் நிலைத்து நிற்கிறது.
-இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலெக்ஷன் ப்ளாஷ்: உதயநிதி சொன்னதை செய்யும் அண்ணாமலை
நேற்று கட்சி தாவிய அசோக் சவான் : இன்று எம்.பி. சீட் கொடுத்த பாஜக
அன்வேஷிப்பின் கண்டதும் – திரைப்பட விமர்சனம்!