சுதந்திர தினம், குடியரசு தினம், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ரம்ஜான் உட்பட மிகச்சில கொண்டாட்டங்களின் போது மட்டும் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளும் சிறப்பு திரைப்படங்களும் இடம்பிடிக்கும்.
அந்த வரிசையில், காதலர் தினம் இன்னும் சில ஆண்டுகளில் வந்துவிடலாம். அதற்குப் பதிலாக, திரையரங்குகளில் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் திரைப்படங்களை வெளியிடும் வழக்கம் சில ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
வரும் பிப்ரவரி 14ஐ முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மிகச்சில நகரங்களில் டைட்டானிக் படத்தின் 3டி பதிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களில் பிரேமம், ஹ்ருதயம் என்ற இரு மலையாளப் படங்களோடு ஷாரூக் கானின் தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கேவும் மாதவனின் மின்னலே படமும் திரையிடப்பட்டிருக்கின்றன.
இந்த படங்களைப் பார்க்க நிச்சயம் ஜோடி ஜோடியாய் இளம் காதலர்கள் திரள்வார்கள் என்பது திரையரங்கு நிர்வாகிகளின் நம்பிக்கை. சில ஆண்டுகளாகத் தொடரப்பட்டு வரும் இந்த வழக்கம் நிச்சயம் புதிதல்ல. இதற்கான முன்மாதிரிகள் நம்மூரிலேயே இருக்கின்றன.

அடுத்தடுத்து இரண்டு படங்கள்!
ஏகாதசி, சிவராத்திரி போன்ற பண்டிகைகளின்போது டூரிங் டாக்கீஸ்களில் நள்ளிரவு முழுவதும் அடுத்தடுத்து படங்கள் திரையிடும் வழக்கம் இருந்தது. இரவு 10 மணிக்கு தொடங்கினால் அடுத்த படம் 1 மணிவாக்கில் திரையிடப்படும். இரண்டையும் பார்த்துவிட்டு கண்களைக் கசக்கும்போது மணி ஐந்தாகியிருக்கும்.
டூரிங் டாக்கீஸ்கள் இல்லவே இல்லை என்றானபோதும், சிறு நகரங்களில் இந்த வழக்கம் இன்னும் இருக்கிறது. ‘ஒரே டிக்கெட்டில் மூன்று படம் பார்த்ததாய் சொன்னவர்களும் உண்டு.
எஃப்எம் ரேடியோவில் இப்போதெல்லாம் ‘அடுத்தடுத்து இரண்டு பாட்டு’ என்று தொகுப்பாளருக்கு வேலை தராமல் இரண்டு பாடல்களை ஒலிபரப்புகிறார்களே, அதற்கும் மூலம் இதுதான்.
முக்தியை முன்னிறுத்தும் பக்தியை வலியுறுத்துகிற ஒரு நாளன்று திரைப்படங்கள் பார்க்கும் உத்தியைக் கொண்டு வந்தவர் மாபெரும் வர்த்தக வித்தகராகத்தான் இருக்க வேண்டும் ஆடித் தள்ளுபடி வரிசையில் சேர்க்கப்பட வேண்டிய அற்புதமான கருத்தாக்கம் இது.
இதேபோல ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நட்சத்திரங்களின் புதிய படங்கள் வெளியாகும் நேரத்தில், அவர்களது ஹிட் படமொன்றைத் திரையிடும் வழக்கமும் அப்போதிருந்தது. அதாவது, புதிய படத்தைப் பார்க்கும் முனைப்போடு இருக்கும் ரசிகர்களின் உத்வேகத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் உத்தி இது.
நட்சத்திரங்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் ரசிகர் மன்றங்களை ஈர்க்கும்விதமாக, சம்பந்தப்பட்ட நடிகர்களின் படங்களை மீண்டும் திரையிடுவதும் அப்போதே நிகழ்ந்திருக்கிறது. அதன் நீட்சியாகத்தான், இன்று மல்டிப்ளெக்ஸ்களில் ரஜினி, விஜய், கமல், அஜித் உள்ளிட்ட நட்சத்திரங்களின் வெற்றிப் படங்கள் அவர்களது பிறந்தநாளையொட்டி திரையிடப்படுகின்றன.

காதலர் தினக் கொண்டாட்டம்!
2000களுக்கு முன்னர் பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் பலரிடமும் இருந்தது. உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்லாமல் லேசுபாசாய் தெரிந்தவர்களுக்கும் பேனா நண்பர்களுக்கும் கூட வாழ்த்துகள் அனுப்புவார்கள். சேட்டிலைட் தொலைக்காட்சிகளின் வரவுக்குப் பிறகு, அந்த பரபரப்பு அடங்கிப் போனது.
இப்போது பிப்ரவரி 14 அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. தபால் துறையைப் புறக்கணித்து வாழ்த்து அட்டைகள் நேரிலேயே பரிமாறப்படுவதும், பாலின ஈர்ப்பும் காதலும் கொண்டவர்களால் மட்டுமே அது கைக்கொள்ளப்படுவதும் காதலர் தின வழக்கங்கள். அதன் வரலாறை அறிவது நமது நோக்கமில்லை.
வழக்கமாக தீபாவளி, பொங்கலன்று எப்படி கணவன், மனைவி, குழந்தைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து திரையரங்குக்குச் சென்று படம் பார்த்துவிட்டு வெளியே உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு ஜாலி மூடில் வீடு திரும்புவார்களோ, அதேபோன்ற அனுபவத்தை இளம் தலைமுறைக்கு வழங்குகிறது காதலர் தினம்.
அன்றைய தினம் ரொம்பவும் சீரியசான படத்தைப் பார்க்க யார் தான் விரும்புவார்கள்? அதேநேரத்தில், காதலை கிள்ளுக்கீரையாக முன்வைக்கிற கமர்ஷியல் சிடுக்குகளைத்தான் யார் விரும்புவார்கள்? அதற்குத்தான் ‘காதல் காவியங்களாய்’ கொண்டாடப்பட்ட சில படங்கள் இருக்கின்றனவே. இன்று திரையரங்குகளில் அந்த உத்திதான் பின்பற்றப்படுகிறது.
அதற்காக கல்யாணப்பரிசு தொடங்கி மரோசரித்ரா, வாழ்வே மாயம், குணா, காதல், 7ஜி ரெயின்போ காலனி போன்ற சோகச் சித்திரங்களை காட்ட முடியுமா? ‘பீல்குட் ரொமான்ஸ்’ என்று சொல்லப்படும் சுபமான கிளைமேக்ஸ் கொண்ட காதல் படங்கள் எத்தனை இருக்கின்றன. அதைப் பார்க்கத்தானே காதலர்கள் திரள்வார்கள் என்று விளக்கங்கள் பல சொல்லலாம்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாகத்தான் டைட்டானிக் முதற்கொண்டு சில படங்கள் தற்போது மீண்டும் திரைக்கு வந்திருக்கின்றன.

சோகமும் சுகமே!
காதல்கள் ஆணவக்கொலைகளுக்கு உட்படும் அபாயமுள்ள காலகட்டத்தில், அவை குறித்த உண்மைகளை அப்படியே முன்வைக்கும் படங்களைப் பார்க்க யாரும் தயாராக இருப்பதில்லை. அதேநேரத்தில், காதலை இழந்து தன்னையே வருத்திக் கொள்ளும் ‘தேவதாஸ்’களும் கூட இன்றைய தலைமுறைக்குப் பிடிப்பதில்லை. சோகமும் ஒரு சுகமே என்று நெஞ்சில் காதலைச் சுமப்பவர்களின் கதைகளே இன்றைய காதலர்களுக்கு ‘க்ரிஞ்ச்’ ஆகத் தெரிவதில்லை.
டைட்டானிக், பிரேமம், ஹ்ருதயம் போன்ற படங்களைத் திரையிடுவதை அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இம்மூன்றுமே காதலை துறந்துவிட்டு அல்லது தவறவிட்டு வருந்தும் மனங்களின் வலிகளைச் சொல்வது. ஏதோ ஒருவகையில் காதலை மதிப்புமிக்கதாகக் கருத வைக்கின்றன இந்த திரைப்படங்கள். கவுதமின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ சென்னையிலுள்ள திரையரங்குகளில் தொடர்ந்து திரையிடப்பட்டு வருவதும் இதையே பிரதிபலிக்கிறது.
மாறாக, ‘லவ் பண்ண ரெண்டு பேரும் பல கஷ்டங்களுக்குப் பிறகு ஒண்ணா சேர்ந்தாங்க’ என்று சொல்லும் படங்களும் வெற்றியடைகின்றன. மீண்டும் மீண்டும் காதலர்களால் ரசிக்கப்படுகின்றன. தற்போது திரைக்கு வந்திருக்கும் மின்னலே, தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே இரண்டும் அந்த வகையறா தான். அடுத்த ஆண்டு முதல் இந்த வரிசையில் ‘லவ் டுடே’வும் கூட சேரலாம்.
ஒரு காதல் உருவாவதிலும் அதனைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதிலும் அதன்பின்னர் அதைப் பராமரிப்பதிலும் இருக்கும் பிரச்சனைகளை மட்டுமே இப்படங்கள் பேசும். இது போன்ற காதல் திரைப்படங்களைக் காதலர்கள் கொண்டாடவும் அதுவே காரணம். அதையும் மீறி சில படங்களில் காதலர்களின் பிரிவால் அவர்களது காதல் அமரத்துவம் பெறுவதாகக் காட்டப்பட்டிருக்கும். அதேநேரத்தில் அந்த பிரிவு பெற்றோராலோ, உறவினர்களாலோ, பிளவுகளை முன்வைக்கும் சமூகத்தாலோ நிகழ்வதை மட்டும் அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது.
இந்த உண்மையைப் புரிந்துகொண்டால், காதலர் தின கொண்டாட்டத்தன்று காதல் படங்களைப் பார்க்கப் பிரியப்படுபவர்களிடம் காதல் குறித்த கனவுகளே மிகுந்திருக்கிறது என்பதை உணர முடியும்!.
உதய் பாடகலிங்கம்
தொடங்குகிறது மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் போட்டியில் இந்தியாவுடன் மோதும் பாகிஸ்தான்
“நாடாளுமன்றத்தில் நாடகம் போடும் மோடி”: ஸ்டாலின் கடும் தாக்கு!