நடிகர் மாரிமுத்து காலமானதற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ட்ரெண்டிங் ஸ்டாராக வலம் வந்தார். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 8) காலை சீரியலுக்கு டப்பிங் கொடுத்து விட்டு படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால் டப்பிங் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே வடபழனியில் இருக்கும் சூரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மாரிமுத்துவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மாரிமுத்துவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது
சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது
என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்
என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்
தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன்
குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா