தமிழ் திரையுலகில் சக நடிகர்கள் அனைவராலும் இன்றுவரை பாராட்டப்படுபவர் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்.
‘இனிக்கும் இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் 1978-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான அவர், 1980-ல் வெளியான ‘தூரத்து இடி முழக்கம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
அதன்பின்னர் அதிரடி நாயகனாக விஜயகாந்த் உருவெடுத்தது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய முதல் படமான ‘சட்டம் ஒரு இருட்டறை’ மூலம் தான்.
அதன்பின்னர் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வந்த விஜயகாந்த் 80 -90 களில் எண்ணற்ற வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
ஹீரோ என்ற பிம்பத்துடன் மட்டும் வாழாமல் தன்னை சுற்றி இருக்கும் அனைத்து மனிதர்களிடமும் எந்த வித்தியாசமும் இல்லாமல் விஜயகாந்த் பழகுவார் என்று சக நடிகர்களே பலமுறை விஜயகாந்தை பாராட்டியுள்ளனர்.
பின்னர் அரசியலிலும் களமிறங்கிய அவர் சில ஆண்டுகளிலேயே தனது தேமுதிக கட்சிக்கு தமிழ்நாட்டின் எதிர்கட்சி என்ற அந்தஸ்தை பெற்று கொடுத்தார்.
தற்போது உடல்நிலை சரியில்லாத நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். எனினும் விஜயகாந்த் குறித்து மூத்த நடிகர்களான சத்யராஜ், ராதாரவி போன்றோர் உருக்கமுடன் பேசும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், அரசியல்வாதியுமான வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ள கருத்து பலரையும் உருக வைத்துள்ளது.
நடிகர் சித்ரா லட்சுமணன் உடனான சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய வாகை சந்திரசேகர், “ஒரு இரும்பு மனிதராக நான் பார்த்த விஜயகாந்த்தின் இப்போது இருக்கும் நிலைமையை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது.
நான் அவரை பார்க்கச் சென்றால் எனக்கு அழுகையே வந்துவிடும். இதனால் தான் விஜயகாந்தை சந்திப்பதை தவிர்த்து வருகிறேன்.
என் மகள் திருமணத்திற்கு கூட அவரை அழைக்க வேண்டும் என்று ஆசை தான் ஆனால் இப்போது இருக்கும் நிலையை பார்த்து தவிர்த்துவிட்டேன்.
அந்தக் காலத்தில் விஜயகாந்த்தின் உடம்பு இரும்பு போன்ற பலம் கொண்டதாகவும், தேக்கு வலிமையுடன் இருக்கும். திரையில் சண்டை போடுவது போல் நிஜத்தில் ஆயிரம் பேர் வந்தாலும் எதிர்த்து நிற்கும் தைரியம் கொண்டவர்.
இன்று இருக்கும் நிலையைப் பார்த்து மனதிற்கு வருத்தம் அளிக்கிறது.” என்று வாகை சந்திரசேகர் விஜயகாந்த் குறித்து பேசியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
முதல் டெஸ்ட் போட்டி : 3வது நாளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா
ஈரோடு கிழக்கு: ஸ்டாலினுடன் மேடை ஏறுவாரா கமல்?