கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் நடிகர் வடிவேலுவிடம் விவாதமாகி வரும் இந்தியா, பாரத் பெயர் மாற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் ”அந்த அரசியலுக்கே போகவில்லை, அப்படி போகும்போது சொல்கிறேன்” என கூறினார்.
இந்த நிலையில், நேற்றையதினம் அதே மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, மறைந்த நடிகர் மாரிமுத்து குறித்து சோகத்துடன் பேசினார்.
அவர் பேசுகையில், “மாரிமுத்து இறந்த செய்தியை கேள்விப்பட்டபோது மிகவும் கஷ்டமாகி விட்டது. ராஜ்கிரண் அலுவலகத்தில் இருந்தபோது நானும், அவரும் நெருங்கி பழகியுள்ளோம்.
அவருடைய ‘கண்ணும் கண்ணும்’ படத்தில் நகைச்சுவை காட்சியில் ’அடித்துக் கேட்டாலும் சொல்லாதீர்கள்’ என்ற வசனம் வரும். அது மாரிமுத்துவுடையது. ’கிணற்றை காணோம்’ நகைச்சுவையையும் அவர்தான் உருவாக்கினார்.
மிகப்பெரிய சிந்தனையாளர், மனம் விட்டு சிரிப்பார். அவர் மறைந்தது திரையுலகுக்கு பெரிய அதிர்ச்சி, இழப்பு” இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவரிடம், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், “திறந்த கதவுதானே. யார் வேண்டு மானாலும் வரலாம். நீங்க கூட வரலாம்” என்று சிரித்தபடியே அங்கிருந்து வடிவேலு சென்றார்.
இராமானுஜம்