நடிகர் வடிவேலு குறித்து இனி அவதூறான கருத்துகளை தெரிவிக்க மாட்டேன் என்று அவருடன் இனைந்து பல படங்களில் நடித்த சிங்கமுத்து நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளார்.
வடிவேலுவும் சிங்கமுத்துவும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நகைச்சுவை காட்சிகள் மக்களிடம் வெகு பிரபலம். அதுவும் பிரசாந்த் கதாநாயகனாக நடித்த ‘வின்னர்’ படத்தில் வரும் இவர்களது நகைச்சுவை காட்சிகளை பார்த்தால் இன்றும் மக்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
அப்படி இருந்த நிலையில் 2015 வருடத்தில் இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உண்டானது. இதனையடுத்து இருவரும் சேர்ந்து நடிப்பதை நிறுத்தினர்.
அப்போது இருந்து சிங்கமுத்து வடிவேலுவுக்கு எதிராக பல யூடியூப் சேனல்களில் பேசி வந்தார். இதனால் வேதனை அடைந்த வடிவேலு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்தார்.
அதில் தன்னை பற்றி அவதூறாக பேசியதற்கு சிங்கமுத்து தனக்கு நஷ்ட ஈடாக ரூ.5 கோடி வழங்கவேண்டும் மற்றும் இனி நிரந்தரமாக தன்னை பற்றி சிங்கமுத்து அவதூறு பரப்பக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மேலும் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை தன்னை பற்றி சிங்கமுத்து அவதூறாக பேசாமல் இருக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் வடிவேலு தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீகா ராமன், வடிவேலு குறித்து இனி அவதூறாக பேச மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்து வழக்கை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது சிங்கமுத்து தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட உத்தரவாத மனுவில் “நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ தெரிவிக்க மாட்டேன்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை பதிவு செய்துகொண்ட பின், பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
4 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் அறிவிப்பு!
பெரியார் நினைவகம் திறப்பு : கேரளா சென்ற ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!