சினிமா மூலம் பிரபலமான திரைக்கலைஞர்கள் பலரும் பொருளாதார ரீதியாக முன்னேற்ற நிலையில் இல்லை என்பது அவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படும் போதுதான் வெளியுலகிற்கு தெரிய வருகிறது.
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கொடி கட்டி பறந்த ஸ்டண்ட் இயக்குநரும், நடிகருமான பொன்னம்பலம் சிறுநீரக பாதிப்புக்குள்ளான போது அன்றாட மருத்துவ செலவுகளுக்கே தடுமாறியபோது வீடியோ மூலம் சக திரை கலைஞர்களிடம் உதவி கேட்டார். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அவரது மொத்த மருத்துவ செலவையும் ஏற்றார்.
அதே போன்று போண்டாமணி, பாவா லட்சுமணன், போன்ற அடிதட்டு காமடி நடிகர்கள் பாதிக்கப்பட்ட போதும் சமூகவலைதளங்கள் மூலம் உதவிகள் கோரப்பட்டது. அதற்கு சில நடிகர்கள் உதவிகளும் செய்தனர்.
ஆனால் அவர்களுடன் நடித்த நடிகர் வடிவேலு எந்தவொரு உதவியும் செய்வதில்லை என்கிற விமர்சனம் இருந்து வந்தது.
தமிழ்நாடு அரசு பொது நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி போன்றவற்றுக்கு வேண்டுகோள் விடுக்கும் போது நன்கொடை வழங்கும் வடிவேலு, தன்னுடன் நடித்த சக நடிகர்கள் உதவி கேட்கும் போது, அவர் பாராமுகமாக இருந்து வந்தது பலரையும் திகைக்க வைத்தது.
இந்த நிலையில் தன்னை கஞ்சன், கருமி, பிறருக்கு உதவ மனமில்லாதவர் என்கிற விமர்சித்தவர்களுக்கு தற்போது நடிகர் வெங்கல்ராவுக்கு உடல் சிகிச்சைக்காக ஒரு லட்சம் ரூபாய் வழங்கியதன் மூலம் முடிவு கட்டியுள்ளார் நடிகர் வடிவேலு.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் வெங்கல் ராவ். கந்தசாமி, தலைநகரம், எலி உள்ளிட்ட படங்களில் வெங்கல் ராவின் காமெடிக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் ஒளிபரப்பாகும் வடிவேலு இடம்பெறும் பிரபலமான காமெடி காட்சிகளில் நடிகர் வெங்கல்ராவ் தவிர்க்க முடியாதவராக இருப்பார்.
தற்போது வெங்கல் ராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஒரு கை, ஒரு கால் செயலிழந்து வீட்டில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி சினிமா தொழிலாளர்கள் தனக்கு உதவ வேண்டுமென்று வீடியோ வெளியிட்டு இருந்தார் வெங்கல் ராவ்.
அதனைத்தொடர்ந்து நடிகர் வெங்கல் ராவின் சிகிச்சைக்கு நடிகர் சிலம்பரசன் முதல் ஆளாக 2 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்தார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் துணைத் தலைவர் பூச்சி முருகன் தொடர்பு கொண்டு பேசி மருத்துவ உதவிகளுக்கு நடிகர் சங்கம் ஏற்பாடு செய்யும் என்று உறுதி அளித்தார். அத்துடன் நடிகர் சங்கம் சார்பில் வெங்கல்ராவுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. “கலக்கப்போது யாரு” புகழ் நடிகர் பாலாவும் வெங்கல்ராவுக்கு ரூ.1 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் தான் நடிகர் வடிவேலு ஒரு லட்சம் ரூபாயை வெங்கல் ராவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதன்மூலம் சக நடிகர்கள் யாருக்கும் உதவி செய்ய மாட்டார் என அவர் மீதான விமர்சனங்களுக்கு வடிவேலு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
மேலும் வெங்கல் ராவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய வடிவேலு, அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியதுடன் கூடுதல் உதவிகள் தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
கள்ளச்சாராய மரணங்களைத் தடுக்க ’மலிவு விலையில் மது’: ஸ்டாலின் திட்டம்?
டாப் 10 நியூஸ் : மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் முதல் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை!