தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கான வேர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் காலத்திற்கு முன்னிருந்தே தொடங்குகிறது. ஆனால், அதனை நம் மரபில் இருந்து எடுத்துவந்த அவரது குழுவினரின் நகைச்சுவை பாணியைப் பின்னாட்களில் வந்த பல கலைஞர்கள் அடியொழுகினர்.
அதனோடு மேற்கத்திய பாணி நகைச்சுவையையும் குறிப்பிட்ட அளவில் கலந்து தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ் என்று பலரும் ரசிகர்களைச் சிரிக்க வைத்தனர்.
சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ் என்று தொடரும் அந்த வரிசையில் தொண்ணூறுகளில் தன்னை இணைத்துக் கொண்டவர் வடிவேலு.
தனக்கு முன்னும் பின்னும் இருந்த நகைச்சுவை கலைஞர்களின் நடிப்பு பாணியில் இருந்து ஓரளவுக்கு வேறுபட்டிருந்தது அவரது நகைச்சுவைகள். காரணம், அப்போதிருந்த அவரது உடல்வாகு. அது மட்டுமல்லாமல் ‘அலப்பறை பண்ணி அடி வாங்குவோம்ல’ என்கிற தொனியில் அமைந்த நகைச்சுவைக் காட்சிகளோடு நூறு சதவிகிதம் பொருந்தியிருந்தது வடிவேலுவின் நடிப்பு.
தன்னைத்தானே கிண்டல் செய்வதுதான் மிகச்சிறந்த நகைச்சுவை என்ற சார்லி சாப்ளின் சென்ற வழிக்கும் அதற்கும் பெரிய வித்தியாசமில்லை. அதனாலேயே, வடிவேலுவின் காமெடி நம் கவலையைக் கரைக்கிற சிரிப்பு மருந்தாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வைகைப்புயல் வடிவேலு இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
33 ஆண்டுகளுக்கும் மேலாக..!
டி.ராஜேந்தர் இயக்கிய ‘என் தங்கை கல்யாணி’ படத்தில் ஒரு ஷாட்டில் தலைகாட்டியதன் வழியே திரையுலகில் கால் பதித்தார் வடிவேலு. ஆனால், 1991இல் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ படமே அவரது உருவத்தை நம் மனதில் பதியச் செய்தது.
ஒல்லியான தோற்றம், உழைப்பின் களைப்பினால் ஒடுங்கிப்போன முகம், கருத்த நிறம், ரப்பர் போன்று வளையும் உடல்வாகு, அனைத்துக்கு மேலாக எல்லாம் தெரிந்தது போன்ற பேச்சை வெளிப்படுத்துகிற வெள்ளந்தித்தனம் இவை அனைத்தையுமே சரியாகப் பிரதிபலித்து ‘வடிவேலு இப்படித்தான்’ என்று திரையில் காட்டினார்.
அந்த காலகட்டத்தில் மிகப்பிரபலமாக இருந்த கவுண்டமணி, செந்தில் உடன் நடித்தார் வடிவேலு. என்னதான் கவுண்டமணியிடம் அடிவாங்கினாலும், செந்திலின் பாத்திரங்கள் குயுக்தியைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டன. அதனால் விளையும் இன்னல்களில் சிக்கித் தவிப்பதே கவுண்டமணி பாத்திரத்தின் வேலையாக இருக்கும். ஆனால், கவுண்டமணி தான் படம் முழுக்க ‘தெனாவெட்டாக’ பேசுவார். அவ்விரண்டையும் ஒன்றாகக் குழப்பியடித்து தனது பாணியாக்கிக் கொண்டார் வடிவேலு. சவடாலாகப் பேசி செம்மையாக அடி வாங்குவதைத் திரையில் வழக்கமாக்கினார்.
‘சின்ன கவுண்டர்’, ‘கோயில் காளை’, ‘கிழக்கு சீமையிலே’, ’, ‘அரண்மனை கிளி’ போன்ற படங்களில் அசல் கிராமத்தான் ஆகத் தோன்றிய வடிவேலு, ‘மகராசன்’, ‘கோகுலம்’, ‘சிங்கார வேலன்’ போன்றவற்றில் நடுத்தரமான நகரத்து வர்க்கப் பிரதிநிதியாக வந்து போனார்.
அதே வடிவேலு ‘காதலன்’ படத்தில் ‘டேக் இட் ஈஸி ஊர்வசி’ என்று பிரபுதேவா உடன் ‘அட்ராசிட்டி’ செய்தபோதும் ஏற்றுக்கொண்டார்கள் ரசிகர்கள். காதல் தேசம், லவ் பேர்ட்ஸ், ரட்சகன் படங்களிலும் அப்படித்தான் அமைந்தது அவரது நகைச்சுவை.
இப்படி வெவ்வேறுபட்ட பின்னணியைக் கொண்ட மக்களின் மனங்களில் நுழையும் வாய்ப்புகள் வடிவேலுவுக்குக் கனகச்சிதமாகக் கிடைத்தன. ஆர்.வி.உதயகுமார், ராஜ்கிரண், வி.சேகர், பாரதிராஜா தொடங்கிப் பல இயக்குனர்கள் அதற்கான பாதை அமைத்து தந்தனர். அந்த படங்களில் சிறப்பாக நடித்த காரணத்தால் மட்டுமே, இன்று வரை நம் நினைவிலும் நிற்கிறார்.
அதேநேரத்தில், வடிவேலு நடிக்க வந்து 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன என்பது நம்மை ஆச்சர்யப்படுத்துகிற விஷயம்.
’வெரைட்டி’ நடிப்பு!
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு தொடங்கி அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பிரசாந்த், விஜய், அஜித்குமார், அருண்விஜய், விக்ரம், சூர்யா என்று பல இளம் நாயகர்களோடு நடித்தவர் வடிவேலு.
அதற்கடுத்து வந்த தலைமுறையில் பல புதுமுகங்களோடு இணைந்தவர், இப்போது நான்காம் தலைமுறையையும் சிரிக்க வைக்கத் தயாராகி வருகிறார்.
‘தேவர் மகன்’ போன்று மிக ‘சீரியசாகவும்’ வடிவேலுவுக்கு நடிக்கத் தெரியும். வி.சேகர் படங்களில் வருவது போன்று, ஒரே நேரத்தில் நகைச்சுவையையும் குணசித்திர அம்சங்களையும் கலந்து வெளிப்படுத்தவும் தெரியும். ஏன், வில்லத்தனத்தை நகைச்சுவையுடன் கலந்து வெளிப்படுத்தவும் தெரியும்.
95களில் தொடங்கி 2005 வரை அப்படிப் பல படங்களில் ஒரு கதாபாத்திரமாக மட்டுமே தோன்றியிருக்கிறார் வடிவேலு. சில படங்களில், நாயகனோடு இணைந்து ‘தனி ட்ராக்’கில் நகைச்சுவையைத் தந்திருக்கிறார். சேரன் இயக்கிய ‘பாரதி கண்ணம்மா’ படத்தில் பார்த்திபனிடம் ‘உன் கைய காலா நினைச்சுக்குறேன்’ என்று அவர் வசனம் பேசியது அந்த ரகம் தான்.
ஹீரோக்களிடம் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிற வகையில் விஜய், சரத்குமார், பிரசாந்த், சிபிராஜ், அர்ஜுன் ஆகியோரோடு முறையே வசீகரா, சச்சின், அரசு, வின்னர், ஜோர், கிரி, ஆணை படங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதேநேரத்தில், தனது ‘லந்து’களால் பிறரை வாட்டும் பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் வடிவேலு.
’போ.. போ..’ என்று பஞ்சாயத்தில் கூடி நிற்கும் மக்களை விரட்டும் ‘கண்ணாத்தாள்’ சூனா பானாவையும், அதே போன்றதொரு பஞ்சாயத்தில் விசாரணை மேற்கொள்கிற சங்கிலி முருகனிடம் ‘என்ன கைய பிடிச்சு இழுத்தியா’ என்று கேட்டு அவரையே கிறுகிறுக்க வைக்கிற ‘நேசம் புதுசு’ காமெடியையும் ரசிகர்களால் மறக்க முடியுமா?
மகளிர்க்காக, கம்பீரம் போன்ற படங்களில் கான்ஸ்டபிளாக வருவது, வெற்றிக்கொடி கட்டு படத்தில் ‘துபாய் ரிட்டர்ன்’ மனிதராக உலா வருவது, மாயி படத்தில் மனைவியிடம் மாட்டிக்கொண்டு அடிவாங்குகிற கணவனாக இருப்பது, என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில் அலப்பறைகளை அள்ளியிறைக்கும் அல்லக்கையாக வருவது என்று கதையோடு இணைந்த காமெடிகளால் நம் கவலைகளைக் கரைத்தவர் வடிவேலு.
’எம்டன் மகன்’ படத்தில் மளிகைக்கடை உரிமையாளராக வரும் நாசரின் மச்சான் ஆக வந்து நகைச்சுவையை வாரியிறைப்பவர், கிளைமேக்ஸில் ‘ஒருபக்கம் அக்கா பையன், இன்னொரு பக்கம் அண்ணன் பொண்ணு’ என்று பரத்தையும் கோபிகாவையும் பார்த்து கண்ணீர் வடிப்பார். அப்போது பல ரசிகர்கள் கண் கலங்கியது உண்மை. சிரிக்க வைக்கும் கலைஞனால் எளிதாக நம்மை அழ வைக்க முடியும் என்பதற்கு அக்காட்சி ஒரு சான்று.
இப்படி ‘வெரைட்டி’ நடிப்பை வெளிக்காட்டும் வடிவேலு, சில பல இடைவெளிகளுக்குப் பிறகு அவ்வப்போது தலைகாட்டுவது ரசிகர்களான நமக்கு வருத்தம் தரும் விஷயம் தான்.
’மீம்ஸ்’ கருப்பொருள்!
சமகால வாழ்வில் நாம் சந்திக்கும் எந்தவொரு அவலத்துடனும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை, வசனங்களைப் பொருத்திப் பார்க்கிற வழக்கம் சமீப ஆண்டுகளாக நிலவி வருகிறது. அந்த வகை ‘மீம்ஸ்கள்’ எளிதில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை, அதன் விளைவுகளை உணர்த்த உதவுகின்றன.
இப்படிக் காலம் கடந்தும் வடிவேலுவின் காமெடிகள் ‘மீம்ஸ்’ கருப்பொருளாக விளங்குவது சாதாரண விஷயமல்ல. தனித்துவமான நகைச்சுவையைத் தந்த எந்தவொரு கலைஞரும் இப்படித்தான் கொண்டாடப்படுவார்கள். வடிவேலுவும் அவர்களில் ஒருவர்.
சாதாரண மனிதர்களின் தினசரி உரையாடல்களிலும் கூட, இன்று வடிவேலுவின் உடல்மொழியும் வசனங்களும் மேற்கோள் காட்டப்படுகின்றன. அதுவே, அவர் எந்தளவுக்குப் புகழ் அடைந்திருக்கிறார் என்பதற்கான சான்று.
‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்திலேயே நம்பியார், நாகேஷ், சந்திரபாபுவைக் கலந்து கட்டியது போன்று புலிகேசியாக வருவார். எம்ஜிஆர், சிவாஜி பாணியில் உக்கிரபுத்தனாகவும் திரையில் கம்பீரமாக நிற்பார். ரசிகர்களின் கண் கொண்டு ஒரு பாத்திரத்தை நோக்குகிற வித்தை தெரிந்தால் மட்டுமே அது சாத்தியம்.
அதுவே, ‘மாமன்னன்’ ஆகவும் அவரை இன்று நாம் நினைவில் கொள்ளக் காரணமாகியிருக்கிறது.
இதோ இப்போது, சுந்தர்.சியின் ‘கேங்கர்ஸ்’ படத்தில் மீண்டும் ‘கமர்ஷியல் பட காமெடியன்’ ஆக திரும்பியிருக்கிறார் வடிவேலு. அது போன்ற வாய்ப்புகளை மட்டுமே தேடாமல், கதையில் ஒரு தூணாக விளங்குகிற குணசித்திர பாத்திரங்களை அவர் ஏற்க வேண்டும். வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன் போன்று முதுமையிலும் நகைச்சுவையை வெளிப்படுத்துகிற வேடங்களில் தோன்ற வேண்டும்.
வாருங்கள் வடிவேலு! திரையில் உங்களைப் பார்த்து சிரிக்கவும், அழவும், புளகாங்கிதம் அடையவும் காத்திருக்கிறது அடுத்த தலைமுறை ரசிகக்குஞ்சுகள்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
ஸ்ருதி வாழ்க்கையில் விளையாடும் எமன்… நிலச்சரிவில் குடும்பமே பலி… விபத்தில் வருங்கால கணவரும் இறப்பு!
விலை குறைந்த தங்கம்.. வாங்குவதற்கு சரியான நேரம்!