வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படம் கைவிடப்படவில்லை என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீஷா பதானி நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இதற்கு முன்னதாக நடிகர் சூர்யா 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் “வணங்கான்” படத்தில் நடித்து வந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாகப் பாலா – சூர்யா கூட்டணி முடிவுக்கு வந்தது. இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகவும் மாறியது.
”வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒரு மனதாக முடிவெடுத்திருக்கிறோம்” என்று இயக்குநர் பாலா கூறியிருந்தார். தொடர்ந்து வணங்கான் படத்தில் சூர்யாவிற்கு பதில் நடிகர் அருண் விஜய் நடிப்பார் எனத் தகவல் வெளியானது.
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த வாடிவாசல் படம் கைவிடப்படுவதாகச் சமீபத்தில் தகவல் வெளியானது. இது ரசிகர்களை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால் வாடிவாசல் படம் கைவிடப்படவில்லை என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து தாணு பிங்க்வில்லா சேனலுக்கு அளித்த பேட்டியில், ”இது போன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். மக்கள் தங்கள் 10 நிமிட புகழுக்காக இதுபோன்ற செய்திகளைப் பரப்புகின்றனர்.
ஆனால் இந்த செய்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். வாடிவாசல் படம் கைவிடப்படவில்லை. ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகின்றன” என்று கூறியுள்ளார்.
மோனிஷா
8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!
முதல் இஸ்லாமிய பெண் போர் விமானி: இந்தியாவின் இன்னொரு சானியா மிர்சா