எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் ’வடக்கன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 23 ) துவங்கியது. இந்த படத்தை வேடியப்பனின் டிஸ்கவரி சினிமாஸ் தயாரிக்கிறது.
‘எம்டன் மகன்’, ‘வெண்ணிலா கபடி குழு’, ’நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ உள்ளிட்ட படங்களின் வசனகர்த்தாவும், ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தின் கதாசிரியருமான பாஸ்கர் சக்தி ‘வடக்கன்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படம் குறித்து வேடியப்பன் கூறுகையில், “இன்று அதிகமாக பேசப்படும் ஒரு விஷயத்தை பற்றிய கதை இது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் பாஸ்கர் சக்தி சிறந்த வசனகர்த்தா விருது பெற்றவர். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களுக்கும், பல வெற்றி படங்களுக்கும் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இப்படத்தில் புதுமுக நடிகர்களான குங்குமராஜ் மற்றும் வைரமாலா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் தோன்றுபவர்கள் அனைவரும் மண்ணின் மக்களாக இருப்பார்கள். முன்னணி ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்,” என்றார்.
‘வடக்கன்’ படத்தை பற்றி இயக்குநர் பாஸ்கர் சக்தி கூறுகையில், “எழுத்தாளனாக எனது பணியை துவங்கினேன், பின்பு பத்திரிகையாளனாக, அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களின் வசனகர்த்தாவாக, திரைப்படங்களின் வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளேன். தற்போது முதன் முறையாக ஒரு இயக்குநராக ‘வடக்கன்’ மூலமாக எனது திரைப் பயணத்தை தொடர்கிறேன்.
எனக்கு உறுதுணையாக எனது நீண்ட நாள் நண்பர் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருடன் இந்த படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இருபது வருடங்களாக நாடகத் துறையில் பயிற்சி பெற்ற குங்குமராஜ் இந்த கதையின் நாயகனாக நடிக்கிறார். கதையின் நாயகியான வைரமாலா தேனி மண்ணின் மனம் சார்ந்த பெண் ஆவார். பாரதிராஜாவின் கண்டுபிடிப்பு அவர்,” என்றார்.
மேலும் “இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு முக்கியமான விஷயத்தை இப்படம் பேசுகிறது. படம் சிறப்பாக உருவாகி மிகுந்த வரவேற்பை பெறும் என்று கதையின் மீது நம்பிக்கை கொன்டு இந்தப் படத்தை துவங்கியுள்ளோம்” என்று தெரிவித்தார் பாஸ்கர் சக்தி.
வட இந்திய மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை தென் இந்திய மாநிலங்களில் அதிகரித்துள்ளது. சமீப காலங்களாக வட இந்தியர்கள் சாரை சாரையாக ரயில்களில் வந்து இறங்குவதை காணமுடிகிறது. அவர்களின் வருகையால் தமிழகத்தில் ரயில்வே, அஞ்சல் துறை வேலைவாய்ப்புகள் தொடங்கி கட்டட பணி வரை வட இந்தியர்களின் ஆதிக்கம் உள்ளது.
இதனால் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்து வருவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கூறி வரும் நிலையில் ‘வடக்கன்’ தலைப்பில் படம் உருவாகிறது. இது எந்த அளவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
வடமாநிலத்தவர்கள் குறித்தனா சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, “வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்” என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
”கேப்டன் மில்லர்” கெட்டப்பில் தனுஷ்: ரசிகர்கள் கொண்டாட்டம்!