கல்வி என்பது லாப நோக்கு இல்லாத ஒரு சேவை என்று சொல்வார்கள். ஆனால், அதை வியாபாரமாகவே ஆக்கிவிட்டார்கள். அது குறித்து வாத்தி படம் அழுத்தமாக பேசும் என்கிறார் அப்படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி.
தனுஷ், சம்யுக்தா ஜோடி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாத்தி’. தெலுங்கு திரைப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த படம் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
அதன்பின்னர் வடபழநியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இயக்குநர் வெங்கி அட்லூரி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது படம் பற்றி அவர் கூறுகையில், “2020-ல் கொரோனா தாக்கம் துவங்கிய பிறகு கிடைத்த இடைவெளியில் அடுத்த படத்திற்கான சில ஐடியாக்களை யோசிக்க துவங்கினேன். அந்த சமயத்தில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த முடியாததால் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கினார்கள்.
ஆனால், கட்டணத்தை பாதியாக குறைப்பதற்கு பதிலாக முன்பை விட அதிக அளவில் உயர்த்தினார்கள். பள்ளிப் பேருந்துகளை இயக்காமலேயே பேருந்துக்கான கட்டணங்களை வசூலித்தார்கள்.
தொண்ணூறுகளின் இறுதியில் ஐடி கம்பெனிகள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் இந்தியாவில் உருவாக ஆரம்பித்த சமயத்திலேயே அரசாங்கம் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லூரிகளை அதிகப்படுத்தியது. சில பேர் இதை பயன்படுத்தி கோச்சிங் சென்டர், தனி பயிற்சி வகுப்புகள் என பயனடைய ஆரம்பித்தனர்.
கல்வி என்பது எப்போதும் மக்களின் உணர்ச்சி பூர்வமான ஒரு விஷயமாகவே இருக்கிறது. தங்களது பிள்ளைகளுக்கு தரமான கல்வியை தரவே பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.
அதனால் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களை நம்பி நடுத்தர வர்க்கத்து பெற்றோர்கள் கூட, தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டினார்கள்.
அதேசமயம் அரசு பள்ளிகளிலும் கொஞ்சம் தரம் குறைய ஆரம்பித்தது. ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திறமையில்லை என்பதால் அல்ல.. அவர்களுக்கான சரியான ஊதியம் தரப்படவில்லை என்பது தான் முக்கியமான காரணம்.
கல்வி என்பது லாப நோக்கு இல்லாத ஒரு சேவை என்று சொல்வார்கள். ஆனால் அதை வியாபாரமாகவே ஆக்கிவிட்டார்கள். இன்னொரு பக்கம் அறக்கட்டளை துவங்கி படிப்புக்கு உதவி செய்வதாக ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள்.
கல்வியை அதில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பட்டவர்த்தனமான வியாபாரமாக்கி விட்டார்கள். இதையே முழுப்படமாக சொல்லாமல் அதேசமயம் மக்களுக்கு சொல்லவேண்டிய சில செய்திகளையும் சேர்த்து ஒரு பொழுது போக்கு படமாக சொல்லும்போது அவர்களை எளிதாக சென்றடையும்.
நான் எப்போதும் பொழுதுபோக்கு படங்களையே விரும்புகிறேன். இந்த படத்தில் கல்வி முறை மாற வேண்டுமா? அல்லது பெற்றோர்கள் மாற வேண்டுமா என்பதை விட இதற்கு ஒரு நல்ல தீர்வு ஒன்றை சொல்லி இருக்கிறோம். இது துவக்கத்தில் இருந்தே இருமொழி படமாகவே துவங்கப்பட்டது.
தமிழ் எங்களுக்கு புதிது என்பதால் படத்தின் வசனங்களில் மிகுந்த கவனம் செலுத்தினார் தனுஷ். தமிழில் ஏதாவது வசனங்களை மாற்றம் செய்ய வேண்டுமானால் கூட அவற்றை எங்களுக்கு தெலுங்கில் எழுதிக்காட்டி இறுதி செய்து அதன்பிறகு தமிழில் அந்த வசனங்களை பேசினார்.
படத்தின் கதைக்கரு, களம் என தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் ஒன்றுதான் என்றாலும் சில விஷயங்களில் கொஞ்சம் மாறுதல்களை செய்துள்ளோம். அந்த வகையில் தெலுங்கு படத்தை விட தமிழ் படத்தின் நீளம் இரண்டு நிமிடங்கள் கூடுதலாகவே இருக்கும்.
சமுத்திரக்கனி இந்த படத்தில் பள்ளிகள் மற்றும் கோச்சிங் பயிற்சி நிறுவனங்களை நடத்துபவராக ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமுத்திரக்கனியிடம் இந்த கதை பற்றி கூறியபோது மீண்டும் ஒரு நெகட்டிவான கதாபாத்திரமா என்று ஆரம்பத்தில் தயங்கினார். ஏனென்றால் எப்போதுமே அவர் இந்த கல்வி முறை குறித்து பல படங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்.
இருந்தாலும் இந்தக் கதை அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. தனுஷுக்கும் அவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. ஏற்கெனவே தந்தை – மகன் கதாபாத்திரங்களில் அவர்கள் நடித்திருந்தாலும் இந்த படத்தில் இவர்கள் எதிர் எதிராக நடித்துள்ளது நிச்சயம் வித்தியாசமாக இருக்கும்.
பாரதிராஜா இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். அவர் இயக்கிய படங்களில் ‘வேதம் புதிது’ எனக்கு ரொம்பவே பிடித்த படம். சமீப காலமாக தெலுங்கு இயக்குநர்கள் தமிழில் படம் பண்ண விரும்புகிறார்கள்.
இது இந்த கோவிட் காலகட்டம் ஏற்படுத்திய மாற்றம். கோவிட் அனைத்து திரையுலகினரையும் ஒன்றாக்கி விட்டது. இந்த காலகட்டத்தில் வெளியான அசுரன், கர்ணன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் தெலுங்கு திரையுலகில் அதிகம் வரவேற்பை பெற்றன.
90களின் கல்வி முறையில் நடைபெற்ற சில விஷயங்களை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருந்தாலும் இப்போது வரை அந்த விஷயங்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்றால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்வேன்” என்று கூறினார்.
–இராமானுஜம்
விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்!
சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதி: முதல்வருக்கு வைகோ கடிதம் – இன்று விசாரணை!