இடஒதுக்கீடு முறை குறித்து வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லுரி கூறிய கருத்துகள் சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், சம்யுக்தா ஆகியோர் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை மற்றும் வியாபாரமாகி வரும் கல்வி குறித்து இத்திரைப்படத்தில் பேசப்பட்டுள்ளது.
தெலுங்கிலும் ’சார்’ என்ற பெயரில் வெளியாகியுள்ள இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் படத்திற்கான விளம்பர பணிகளில் ஈடுபட்டுவரும் இயக்குநர் வெங்கி அட்லுரி நேர்காணல் ஒன்றில் இட ஒதுக்கீடு குறித்து அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் அவரிடம், “கல்வி சீர்திருத்தம் குறித்து வாத்தி திரைப்படத்தில் பேசியுள்ள நீங்கள் மத்திய கல்வித்துறை அமைச்சரானால் என்ன செய்வீர்கள்?” என்று தொகுப்பாளர் கேட்டுள்ளார்.
அதற்கு இயக்குநர் வெங்கி அட்லுரி, “நான் ஒருவேளை மத்திய அமைச்சரானால் இட ஒதுக்கீட்டை ஒழித்து விடுவேன். இட ஒதுக்கீட்டை ஜாதி அடிப்படையில் வழங்காமல் பொருளாதார அடிப்படையில் வழங்க உத்தரவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு தான் தற்போது அமலில் உள்ளது. இதனால் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
வலதுசாரிகளின் குரல்
எனினும் அண்மைக் காலமாக இந்தியாவில் ஜாதி ரீதியான இடஒதுக்கீட்டிற்கு எதிரான பேச்சுகள் அதிகமாகி வருகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இது வலதுசாரிகளின் குரலாக உள்ளது என்று தீர்ப்புக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதலில் நீங்கள் படிக்க வேண்டியது அவசியம்
இந்நிலையில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு முறைக்கு ஆதரவாக இயக்குநர் வெங்கி அட்லுரி கருத்து தெரிவித்துள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வெங்கி அட்லுரியின் சர்ச்சைக்குரிய பேச்சை பகிர்ந்த ட்விட்டர் பயனர் ஒருவர் “கல்வி முறையைப் பற்றி திரைப்படம் எடுப்பதற்குப் பதிலாக, முதலில் நீங்கள் படிக்க வேண்டும். அம்பேத்கரைப் படியுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனரோ, “ஆச்சரியப்படுவதற்கில்லை. தெலுங்கு திரைப்பட இயக்குநர்களிடம் இருந்து இதைவிட சிறந்ததாக வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?.” என்று கேட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
துப்பாக்கிச் சூட்டில் தமிழர் பலி : தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்!