கேமிரா, ஸ்டண்ட் சூப்பர்.. அது மட்டும் போதுமா?!
’வெளிநாடுகள்ல வர்ற மாதிரியெல்லாம் இங்க படமெடுக்க முடியாதுப்பா’ என்று சொல்பவர்களை இப்போது அரிதாகத்தான் காண முடிகிறது. ஏனென்றால், மேற்கத்திய தாக்கத்தில் குறிப்பிட்ட வகைமைகளில் நம்மூரிலும் படமெடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.
அந்த வகையில், ‘பழிக்குப் பழி’ வகையறாவில் ‘வயலண்ட் ஆக்ஷன்’னில் பின்னிப் பெடலெடுக்கிற படங்களும் வந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட்டில் வெளியான ‘கில் பில்’ தொடங்கி ‘ஜான் விக்’ சீரிஸ் படங்கள் உட்படச் சில படங்கள் அதற்கான முன்னுதாரணங்களாகத் திகழ்கின்றன.
இந்தியில் கூட ‘கில்’ எனும் படம் இந்த ஆண்டு வெளியாகி மரண பீதியைத் தந்தது.
’அந்த வகையறாவில் அடுத்த கட்டத்துக்கு நகர்வோமே’ என்று மலையாளத் திரையுலகைச் சேர்ந்த இயக்குனர் ஹனீப் அடேனி தந்திருக்கும் படமே ‘மார்கோ’.
ஒரு புதிய முயற்சியில் இறங்கியதில் தவறில்லை. ஆனால், படம் பார்க்கும் ரசிகன் ‘ஏண்டா இந்த படத்தைப் பார்க்க வந்தோம்’ என்கிற அளவுக்குத் திரையில் ஒரு படத்தை ஓட விடுவது ரொம்பவே தவறானது.
அந்த தவறை எந்த வகையில் இழைத்திருக்கிறது இந்த ‘மார்கோ’?

யார் இவர்?!
தங்கக் கடத்தலில் ஈடுபட்டு வருகிறது அடாட்டு குடும்பம். அதன் மூத்த வாரிசான ஜார்ஜ் (சித்திக்) அதனைத் தொடர்ந்து வருகிறார். கேங்க்ஸ்டராக இருக்கும் அவரது அதிகாரத்தின் கீழ் சில குடும்பங்கள் அந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
ஜார்ஜுக்கு விக்டர் எனும் தம்பியும் ஒரு தங்கையும் உண்டு. தங்கைக்குத் திருமணமாகிவிட்டது.
விக்டர் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுகிறார். அவர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. அவர் ஒரு பெண்ணைக் காதலித்து வருகிறார்.
ஜார்ஜின் அதிகாரத்திற்கு உட்பட்டு டோனி ஐசக் (ஜகதீஷ்), அவரது மகன் ரஸ்ஸல் (அபிமன்யு), தேவராஜ் (அன்சன் பால்) உள்ளிட்ட பலர் அவ்வாறு தங்கக் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், ஜார்ஜை கீழே தள்ளிவிட்டு அந்த பீடத்தைக் கைப்பற்ற டோனி நினைக்கிறார். மற்ற குடும்பத்தினர் அதற்குத் துணையாக இருக்கின்றனர்.
இந்த நிலையில், விக்டர் கொலை செய்யப்பட்ட தகவல் ஜார்ஜ் குடும்பத்தை வந்தடைகிறது. அதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அந்தக் குடும்பம் தவிக்கிறது. அதையெல்லாம் விட, ’அந்த தகவல் கேள்விப்பட்டதும் மார்கோ என்ன செய்வான்’ என்பதே அவர்களது கேள்வியாக இருக்கிறது. அவரைத் தெரியாதவர்கள் மத்தியில் ‘யார் இவர்’ என்ற கேள்வி எழுகிறது.
மார்கோ, அந்த குடும்பத்தின் தத்துப் பையன். நான்காவது வாரிசு.
ஜார்ஜுக்கு இன்னொரு சகோதரனைப் போன்றவர். ‘சைக்கோ கொலையாளி’யைப் போன்ற குணாதிசயங்கள் கொண்டவர். அந்தக் குடும்பத்தின் நலனுக்காக எதையும் செய்யத் தயங்காதவர். முக்கியமாக, விக்டரைத் தனது உயிராகக் கருதியவர்.
விக்டரின் இறப்பு எப்படி நிகழ்ந்தது என்பதை மார்கோ அறிய முற்படும்போது, டோனி தானாக முன்வந்து தனது மகனையும் இதர நபர்களையும் அவருடன் அனுப்புகிறார். அவர்கள் சேர்ந்து விசாரிக்கும்போது, சில விஷயங்கள் முரணாக இருப்பதைக் கண்டறிகிறார் மார்கோ.
அதன் தொடர்ச்சியாக, விக்டரின் கொலையில் டோனிக்கும் ரஸ்ஸலுக்கும் சம்பந்தம் இருப்பதை அறிகிறார். ‘மார்கோ பழி வாங்கக் கிளம்புவதற்குள் நாம் முந்திக்கொள்ள வேண்டும்’ என்று எதிர்தரப்பு நினைக்கிறது. அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
இந்தக் கதையில் புதிய விஷயம் என்று எதுவுமில்லை. திரைக்கதை ட்ரீட்மெண்டிலும் பெரிதாகப் புதுமையில்லை. ஆனால், தாங்க முடியாத அளவுக்கு வன்முறையும் அதனைத் திறம்படக் காட்டும் அளவுக்குத் தொழில்நுட்ப அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
இளகிய மனம் கொண்டவர்கள் இப்படத்தைப் பார்த்தால் அதிர்ச்சியின் உச்சத்தை அடைவது நிச்சயம் என்பது இதன் பலவீனம்.

ஏன் இப்படியொரு முயற்சி?
மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி, திலீப் போன்றவர்கள் ஆக்ஷன் படங்களில் நடித்தால் எப்படி கேமிரா கோணங்கள் அமைக்கப்படுமோ, அதனைப் பெற்றவாறு திரையில் நுழைகிறார் நாயகன் உன்னி முகுந்தன்.
சண்டைக்காட்சிகளில் அவர் மெனக்கெட்டிருக்கும் விதம் அபாரம். அதனைத் தவிர இப்படத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
சித்திக், ஜகதீஷ் போன்ற பழைய முகங்கள் தவிர்த்து அபிமன்யூ, அஜித் கோஷி, அர்ஜுன் நந்தகுமார், அன்சன் பால், லிஷோய், தினேஷ் பிரபாகர், இஷான் சௌகத், ஸ்ரீஜித் ரவி, கபீர் துகான் சிங் என்று சுமார் இரண்டு டஜன் பேர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.
யுக்தி தரேஜா இதில் நாயகியாகச் சில காட்சிகளுக்கு வந்து போகிறார். அவர் தவிர துர்வா தாக்கரும் இதிலுண்டு.
இவர்கள் தவிர்த்து நாயகனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகச் சில பெண்கள், குழந்தைகள் இதில் தோன்றியிருக்கின்றனர்.
வில்லன்களின் அடியாட்களாகச் சில நூறு பேராவது வந்து போயிருக்கக்கூடும்.
சில குறிப்பிட்ட காட்சிகளில் சந்துரு செல்வராஜின் ஒளிப்பதிவு பிரமாதமாக இருக்கின்றன. குறிப்பாக, ஸ்டண்ட் கொரியோகிராபர் கலை கிங்சனோடு கைகோர்த்து அவர் அமைத்துள்ள சண்டைக்காட்சிகள் ‘ஆஹா’ ரகம்.
படிக்கட்டுகளில் ஏறி வந்து சண்டையிடுவதாக ஒரு காட்சி இதிலுண்டு. இடைவிடாமல் கேமிராவில் அக்காட்சி பதிவு செய்திருப்பதை உணரும்போது, அக்காட்சியின் பின்னிருக்கும் உழைப்பு புரிகிறது.
ரவி பஸ்ரூரின் பின்னணி இசை, ‘இது போதுமா இன்னும் வேணுமா’ என்று கேட்கும் அளவுக்கு ‘கூஸ்பம்ஸ்’ ஆக இருக்கிறது. ஆனால், ஒருகட்டத்தில் அதுவே திகட்டலாக மாறுகிறது.
சுனில் தாஸின் தயாரிப்பு வடிவமைப்பு, சுதி சுரேந்தரின் ஒப்பனை ஆகியனவும் அப்படிப்பட்ட சிறப்போடு அமைந்திருக்கின்றன.
’ஒரு படத்திற்கு அவை மட்டுமே போதுமா’ என்கிற அளவுக்கு இதில் இதர தொழில்நுட்ப அம்சங்கள் பலவீனமாக அமைந்திருக்கின்றன.
படத்தொகுப்பாளர் சமீர் முகம்மது தேவையற்ற காட்சிகளை வெட்டத் தவறியிருக்கிறார். அதனால், படம் இரண்டரை மணி நேரம் வரை ஓடுகிறது.
இயக்குனர் ஹனீப் அடேனி இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார். ’ஏன் இப்படியொரு முயற்சி’ என்று முகத்திலடித்தாற் போலக் கேட்கும் அளவுக்கு, இதில் அவரது கைவண்ணம் அமைந்திருக்கிறது.
கதை, காட்சியமைப்பு, கதாபாத்திர வார்ப்பு போன்றவற்றில் மருந்துக்குக் கூட புதுமையோ, சுவாரஸ்யமான அம்சங்களோ கலக்காமல் ரொம்பவும் வறட்சியானதொரு ஆக்கத்தைத் தந்திருக்கிறார்.
இந்திப்படமான ‘கில்’ பாணியில் அதீத வன்முறையும் அதனைக் காணும் பார்வையாளர்களின் அதிர்ச்சியுமே இப்படத்தின் ப்ளஸ் என்று எண்ணியிருக்கிறார்.
அதில் தவறில்லை.
பல மொழிப் படங்கள் தற்போது அந்த வகைமையில் வந்து ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்று வருகின்றன. அந்த ரசிகர்கள் பெருவாரியானவர்கள் அல்ல என்பது தனிக்கதை.
அதேநேரத்தில், அந்த படங்களின் மையக்கதையும் காட்சியமைப்பும் ரசிகர்களை நரம்பு புடைக்கச் செய்யும் விதத்தில் இருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
குறிப்பாக, வில்லனுக்கும் நாயகனுக்குமான வித்தியாசங்களை அவர்கள் உணர வேண்டும். ஒரு தரப்பின் பக்கம் அவர்கள் நிற்க வேண்டும்.
மார்கோவில் அப்படி எந்த பக்கமும் நிற்க நமக்கு இயக்குனர் வாய்ப்பைத் தரவில்லை. இரு தரப்புமே ஒரேமாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன. அதுவே படத்தின் மிகப்பெரிய பலவீனம். படத்தோடு ஒரு பிரேமில் கூட நம்மால் ஒட்ட முடிவதில்லை.
அனைத்துக்கும் மேலாக, ஒரு விஷயம் தான் இப்படத்தைக் கொண்டாடவிடாமல் நம்மைத் தடுக்கக்கூடியதாக இருக்கிறது. நிச்சயமாக, அந்த தகவல் ‘ஸ்பாய்லர்’ தான்.
ஒரு நாயகனின் முக்கியமான வேலை, ‘அவரைச் சார்ந்தவர்களைக் காப்பது அல்லது காக்க முடியாமல் போனால் அதற்கு ஈடான ஒரு காரியத்தைச் செய்வது’. ‘பழிக்குப் பழி’ வகையறா படங்களில் அதுவே அழுந்தச் சொல்லப்பட்டிருக்கும்.

இந்தப் படத்தில் அந்த வேலைக்கு ‘வேலையே’ இல்லாமல் பண்ணுகிறது வில்லன் தரப்பு. அதன்பிறகும் படம் அரைமணி நேரம் வரை ஓடுகிறது. அப்போது ஏற்படும் அயர்ச்சி, ‘கேமிராவும் ஸ்டண்டும் மட்டும் நல்லாயிருந்தா போதுமா’ என்று நம்மைக் கேட்க வைக்கிறது.
சாதாரணமாக, சண்டைக்காட்சிகளில் ரத்தத்தைப் பார்த்தாலே கண்களைக் கசக்குகிற பார்வையாளர்கள், ‘மார்கோ’ பார்த்தால் ரத்த வாந்தியே எடுப்பார்கள். படம் உருவாக்கும் அருவெருப்புணர்வைச் சில நாட்களாவது சுமப்பார்கள். அந்த வகையில், ’இந்த ஆண்டின் மிக மோசமான படம்’ என்ற அந்தஸ்தை அவர்கள் இப்படத்திற்குத் தர வாய்ப்பிருக்கிறது.
‘நாங்கள்லாம் ஜான் விக் சீரிஸையே நாப்பது தடவை பார்த்தவங்க’ என்போர், இந்த மார்கோவை ஒருமுறை பார்க்கலாம். ஆனால், ’பிடிக்குமா’ என்பது அவரவர் திரைப்பட ரசனையைப் பொறுத்தது.
‘பிடிக்குதுன்னு சொல்லுங்க பார்ப்போம்’ என்று நம்மைச் சொல்லவிடாமல் தடுப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது இந்த ‘மார்கோ’!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
பாஜக நிர்வாகி கொலை… திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது : அண்ணாமலை கண்டனம்!