உதய் பாடகலிங்கம்
மிளிரும் இளையராஜாவின் மேதைமை!
ஒரு படத்திற்கு பின்னணி இசை ஆற்றும் பங்கு என்ன? இந்த கேள்விக்கான பதிலைத் தமிழ் சினிமா ரசிகர்கள் எளிதாக அறியலாம். எண்பதுகளுக்குப் பிறகு இளையராஜா இசையமைப்பில் வெளியான ஏதாவது ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து, அதனை ‘ம்யூட்’ செய்தும் செய்யாமலும் பார்த்தால் அந்த வித்தியாசம் எளிதாகப் புரியும். மற்ற இசையமைப்பாளர்களின் படங்களிலும் இதனை உணரலாம் என்றபோதும், அவர் உருவாக்கும் மலைப்பு அளப்பரியதாக இருக்கும்.
அப்படியொரு வியப்பை உருவாக்கும் விதமாக அமைந்திருக்கிறது விஜயபிரகாஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கிற ‘உலகம்மை’ திரைப்படம். சரி, ஒரு சுவாரஸ்யமிக்க படைப்பாக அது அமைந்திருக்கிறதா?
ஒரு பெண்ணின் கதை!
மாயாண்டி ஒருகாலத்தில் பனை மரம் ஏறி நுங்கு, பதநீர், ஓலை விற்பனை செய்து வந்தவர். ஒருமுறை மரத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்ததில், அவரது உடல் செயலிழந்து போகிறது. அதற்கான வைத்தியச் செலவுக்காக, ஊர் பெரிய மனிதர் மாரிமுத்துவிடம் (மாரிமுத்து) அவர் கடன் வாங்குகிறார்.
மாயாண்டி தனது மகள் உலகம்மையுடன் (கவுரி கிஷன்) ஒரு குடிசை வீட்டில் வாழ்கிறார். அந்த வீடு அமைந்திருக்கும் நிலத்தை உரிமை கொண்டாடுகிறார் மாரிமுத்துவின் மைத்துனரான பலவேசம் (ஜி.எம்.சுந்தர்).
மாரிமுத்துவின் வயலில் கூலி வேலை செய்துவரும் உலகம்மைக்கு இந்த பிக்கல் பிடுங்கல்களுக்கு நடுவில் கல்யாணம் பற்றிய சிந்தனையே எழுவதில்லை.
ஒருநாள் உலகம்மையை அழைத்துச் சென்று பட்டுச்சேலை அணிவித்து, தனது மகள் சரோஜா உடன் கோயிலுக்கு அனுப்புகிறார் மாரிமுத்து. இருவரும் நடந்து செல்வதை, சரோஜாவை பெண் பார்க்க வந்த லோகநாதனும் (வெற்றி மித்ரன்) அவரது குடும்பத்தினரும் பார்க்கின்றனர். அவர்கள் அனைவருமே, உலகம்மைதான் மணப்பெண் என்று முடிவு செய்கின்றனர். மாரிமுத்து எதிர்பார்த்ததும் அதுதான். காரணம், சரோஜாவுக்கு வயது அதிகம்; அழகு குறைவு.
ஆனால், பக்கத்து ஊரில் இருக்கும் லோகநாதனைச் சந்தித்து நடந்த உண்மையைச் சொல்லிவிடுகிறார் உலகம்மை. இதனால், சரோஜா திருமணப் பேச்சு நின்று போகிறது.
அதேநேரத்தில், உலகம்மையைச் சந்திக்கும் லோகநாதன் அவரை விரும்புவதாகத் தெரிவிக்கிறார்; தனது சென்னை முகவரியை கொடுத்துவிட்டுச் செல்கிறார்.
அதையடுத்து, உலகம்மை மீது மாரிமுத்து எரிச்சலைக் கொட்டுகிறார். அதற்கு, அவரும் பதிலடி தருகிறார். இது தொடர்கதையாக, மாயாண்டியும் உலகம்மையும் அவமானப்பட்டு அந்த ஊரை விட்டுச் செல்ல வேண்டும் என்ற நிலையை உருவாக்குகிறார் மாரிமுத்து.
அந்த நேரத்தில், உலகம்மைக்கு உதவ முன்வருகிறார் கீழத்தெருவைச் சேர்ந்த அருணா (பிரணவ்). அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
அதையடுத்து, தனிப்பட்ட இரு நபர்கள் இடையேயான பிரச்சனை ஒரு சாதி சார்ந்ததாக மாறுகிறது. அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது ‘உலகம்மை’ படத்தின் மீதி.
இது முழுக்க முழுக்க உலகம்மை என்ற ஏழைப்பெண்ணைக் குறித்த கதை. அறுபதுகளில் நடப்பது போலக் காட்டியிருப்பதால், இந்தப் படத்தில் சமகால அடையாளங்கள் எதுவுமில்லை; போலவே, சமகாலப் பிரச்சனைகளும் இல்லை. ‘உலகம்மை’யின் பலமும் அதுதான், பலவீனமும் அதுதான்.
அதுவொரு காலம்!
படம் முழுக்க உலகம்மையாக நடித்த கவுரி கிஷனை சுற்றியே நகர்கிறது. அதற்கு ஈடுகொடுத்து அவரும் நடித்திருக்கிறார். ஆனாலும், ’இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்’ என்ற எண்ணத்தைச் சில இடங்களில் உருவாக்கியிருக்கிறார். இஸ்திரி இட்ட சேலை மடிப்பு கசங்காமல் வயல்வெளியில் அவர் நடந்துவருவது ஏற்புடையதாக இல்லை.
சமீபத்தில் மறைந்த மாரிமுத்து, இந்த படத்திலும் மாரிமுத்து என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள், அளவான முகபாவனைகளிலேயே அப்பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்த எண்ணியிருக்கிறார் இயக்குனர் வீ.ஜெயபிரகாஷ். ஆனால், ரசிகர்களான நமக்கு அது போதுமானதாக இல்லை.
ஜி.எம்.சுந்தர், அருள்மணி, ஜேம்ஸ் என்று பலர் இதில் நடித்துள்ளனர். சுந்தருக்கு வேறு யாரோ குரல் இரவல் தந்திருப்பது துருத்தலாகத் தெரிகிறது.
மாரிமுத்துவின் மனைவியாக வருபவரும் மகளாக நடித்தவரும் நம் கவனத்தைக் கவர்கின்றனர். முதல் பாதியில் ஐந்தாறு காட்சிகளோடு லோகநாதனாக நடித்த வெற்றி மித்ரன் ‘டாடா’ காட்டிவிடுகிறார்.
மாயாண்டி வேடம் ஏற்ற ஜெயபிரகாஷ், அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுக்க ஊர்க்காரர்களாகச் சிலர் வருகின்றனர்; அவர்களில் பலர் தொழில்முறை நடிகர்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
கே.வி.மணியின் ஒளிப்பதிவில் பனங்காடும் பாலைவெளியும் கூட பசுமையாகத் தெரிகிறது. குறும்படமோ என்ற நினைப்பைத் தூண்டாதது அதன் மிகப்பெரும் பலம்.
அறுபதாண்டுகளுக்கு முந்தைய கிராம வாழ்வைக் காட்ட, திருநெல்வேலி வட்டாரத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்களை ஆங்காங்கே பயன்படுத்தியிருக்கிறது வீரசிங்கத்தின் கலை வடிவமைப்பு
சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு கதை சொல்லலுக்கு உதவினாலும், ஆங்காங்கே சில ஷாட்கள் திடீரென்று தலைகாட்டி நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.
வெற்றிமித்ரன் உறவினர்கள் மாரிமுத்துவைப் பார்த்துச் சண்டையிடும் காட்சிக்கு முன்பாகவே, மாரிமுத்துவின் மனைவியாக நடித்தவர் கவுரி கிஷனிடம் அது குறித்துப் பேசும் காட்சி வந்துவிடுகிறது. அதனைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
டாக்டர் குபேந்திரனின் வசனங்கள் பல இடங்களில் பளிச்சிடுகின்றன. அவற்றில் பல வட்டாரச் சொற்களாக இருப்பது, படத்தின் செழுமைக்குப் பலம் சேர்க்கிறது.
எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ நாவலைத் தழுவி இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. நாவலாசிரியரின் வாழ்வனுபவத்திற்கு நெருக்கமாக இருக்கும் கதை, இன்றைய தலைமுறையினருக்கோ, தற்போதைய வாழ்வியல் பிரச்சனைகளுக்கோ நெருக்கமானதாக இல்லை என்பதே இதன் ஒரே பலவீனம்.
லோகநாதன் தரப்புக்கோ, அருணாவின் செயல்பாடுகளுக்கோ கதையில் முக்கியத்துவம் தராமல் தவிர்க்கப்பட்டிருக்கலாம்; ஆனால், அதையே திரைக்கதையிலும் வழி மொழிந்திருப்பது ஏற்புடையதாக இல்லை. முக்கியமாக, சாதிக்கு எதிரான நாயகியின் நிலைப்பாட்டுக்கு அழுத்தம் சேர்க்கும் காட்சிகள் இதில் இல்லை. போலவே, மாரிமுத்து மற்றும் பலவேசம் பாத்திரங்களின் குயுக்திகளையும் திரையில் விரிவாகக் காட்டத் தவறியிருக்கிறார் இயக்குனர்.
தூணாகத் தாங்கும் இளையராஜா!
திரையில் யதார்த்தம் மிளிரவும், சில ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கிராமத்தின் வாழ்வைக் காட்டவும் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் விஜய்பிரகாஷ். படத்தின் பட்ஜெட் அதற்குப் பெரிய தடையாக இருந்திருப்பதைத் திரையில் காண முடிகிறது.
ஆனால், அந்தக் குறைகள் எல்லாவற்றையும் ஒருவரால் சரி செய்துவிட முடியும் என்று மலையாக நம்பியிருக்கிறார். அது வீண் போகவில்லை.
‘உலகம்மை’ படத்தின் தூணாக நின்று மொத்தச் சுமையையும் வெற்றிகரமாகச் சுமந்திருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா. அவரது பின்னணி இசை, மிக எளிதாக இந்தக் கதையை நம் மனதுக்கு நெருக்கமானதாக மாற்றுகிறது.
அதேநேரத்தில், உலக சினிமாக்களின் தாக்கத்தில் கதைக்கும் அது நிகழும் களத்திற்கும் கதாபாத்திரங்களுக்கும் அந்நியமானதாக அமையவில்லை. அதனை நன்குணர்ந்தே, பாடல்களைப் போலவே பின்னணி இசையையும் தனியாக வெளியிட்டிருக்கிறது ‘உலகம்மை’ படக்குழு.
ஒருவர் செய்யும் வேலையை வைத்து ஒரு சாதியைச் சேர்ந்தவர்களே தங்களுக்குள் வித்தியாசம் பாராட்டியதையும், அதனால் ஒரு பெண்ணும் அவரது தந்தையும் பாதிக்கப்பட்டதைச் சொல்கிறது ‘உலகம்மை’. இந்தக் கதையமைப்பு சிலருக்குப் பிடிக்கலாம்; சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்; படத்தின் உள்ளடக்கத்திலும் கூட குறைகளைக் கண்டுபிடிக்கலாம். அவற்றை மீறி, இளையராஜாவின் பின்னணி இசை பிடிக்கும் என்பவர்கள் தாராளமாக இந்த படத்தைக் கண்டும் கேட்டும் ரசிக்கலாம். அந்த விஷயத்தில் ‘உலகம்மை’ எந்தக் குறையும் வைக்கவில்லை..!
பள்ளி சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்: காரணம் என்ன?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!