‘உலக நாயகன்’ பட்டத்தை துறந்த கமல்

Published On:

| By Minnambalam Login1

ulaga nayagan title kamal

மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இனி தன்னை ‘உலக நாயகன்’ என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கமல்ஹாசன் திரைத்துறையில் புரியாத சாதனைகளே இல்லை. ஐந்து வயதில் ”களத்தூர் கண்ணம்மாவில் நடிக்கத் தொடங்கிய அவர், இன்று வரை தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள கமலின் 234 படமான ‘தக் லைஃப்’  2025 ஆண்டு ஜூன் 5 அன்று வெளியாக உள்ளது.

திரைத்துறையில் அவரின் பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக அவருக்குப் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளை இந்திய அரசாங்கம் வழங்கியது.

இதற்கிடையில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ‘தெனாலி படத்தின் போது தான் , கமலுக்கு ‘உலக நாயகன்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

மேலும் பல ஆண்டுகளாக அரசியலில் ஆர்வம் காட்டி வந்த கமல் 2018 ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி மதுரையில் ‘மக்கள் நீதி மையம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

அவர் கட்சி ஆரம்பித்த பின்பும் அவரது ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் அவரை ‘உலக நாயகன்’ என்று அழைத்துவருகிறார்கள்.

இந்த நிலையில் அவர் தனது எக்ஸ் தளத்தில் இன்று(நவம்பர் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில் “என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன்.

உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு. சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான்.

பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது. கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை.

கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது.

அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது.

எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை ’கமல்ஹாசன்’ என்றோ ’கமல்’ என்றோ ’KH’ என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்.

இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். சக மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவி ஏற்றார்!

ஆர்.பி. உதயகுமாரை தாக்க முயற்சி… 6 பேர் மீது வழக்குப்பதிவு!

ஆர்.பி. உதயகுமாரை தாக்க முயற்சி… 6 பேர் மீது வழக்குப்பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share