உதயசங்கரன் பாடகலிங்கம்
சிங்கமாகக் கர்ஜிக்கிற குரலைக் கொண்டிருந்தாலும், கொஞ்சு தமிழில் பல திரையிசைப் பாடல்களைத் தந்து கொண்டிருக்கும் உதித் நாராயண் பிறந்தநாள் இன்று. அவர் பாடிய பாடல்களில் சில பட்டிமன்றப் பேசுபொருளாகியிருக்கின்றன. அந்த அளவுக்கு அவை எதிர்ப்புகளையும் விவாதங்களையும் உண்டாக்கியிருக்கின்றன. சில பாடல்கள் அவரது மேதைமையைக் கொண்டாடும் விதமாக இருந்திருக்கின்றன. அவ்விரண்டையும் தாண்டி, அந்தப் பாடல்களை வேறு பாடகர்கள் பாடினால் கேட்கச் சுமாராகத் தெரிவதே அவரது பலம்.
அறுபத்தொன்பது வயதை நிறைவு செய்து எழுபதில் நுழைந்திருக்கும் உதித் நாராயண், இன்றும் இளமை துள்ளுகிற குரலில் பாடுகிறார். உலகமெங்கும் இசைப்பயணம் மேற்கொண்டு பலரை ஆட்டுவிக்கிறார். இந்தியில் பின்னணி பாடகராகப் புகழ் பெற்றிருந்தாலும், அதற்கு இணையாகத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி, பெங்காலி, ஒடியா, அஸ்ஸாமி மொழிப் படங்களிலும் அவர் பாடியிருக்கிறார். தன் தாய்மொழியான நேபாளியிலும் அவர் பல பாடல்களைத் தந்திருக்கிறார்.
ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கும் உதித், தமிழ் ரசிகர்களை ஆட்டுவிக்கும் விதமாகச் சிலவற்றில் தன் குரலை இழைய விட்டிருக்கிறார். அவற்றைக் கேட்கும் எந்த வயதினரும் துள்ளலை உணர்வது நிச்சயம்.
ஒரு தொடக்கம்!
’காதலன்’ படத்தில் வரும் ‘காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்’ பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதன்முறையாகத் தமிழில் பாடினார் உதித் நாராயண். அவரோடு இணைந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், அவரது மகள் பல்லவியும் பாடியிருந்தனர். இன்றும் துள்ளலை விதைக்கிற பாடல் அது.
தொடர்ந்து ரஹ்மான் இசையில் ‘குலுவாலிலே முத்து வந்தல்லோ’, ‘ரோமியோ ஆட்டம் போட்டா’, ’சோனியா சோனியா’, ’அய்யோ பத்திகிச்சே’, ’சஹானா’ பாடல்களைப் பாடினார். இந்தியிலும் இதர மொழிகளிலும் கூட அவரது இசையில் பங்களிப்பைத் தந்திருக்கிறார்.
வித்யா சாகர் இசையில் உதித் நாராயண் பாடிய பாடல்கள் அனைத்தும், தமிழ் ரசிகர்களிடத்தில் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தன.
‘கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்குப் பொண்ணு கிடைச்சா’ பாடல் அவருக்கு விசிட்டிங் கார்டு என்றால், சர்ச்சைகளை எழ வைத்தது ‘ரன்’ படத்தில் இடம்பெற்ற ‘காதல் பிசாசே’. அதில் அவரது தமிழ் உச்சரிப்பு தவறாக இருந்தபோதும், மழலைக்குரலாக ரசித்தனர் ரசிகர்கள். ‘வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா’, ‘கொக்கரகொக்கரகோ’, ‘பம்பரக்கண்ணு பச்சமிளகா’ ஆகிய பாடல்களும் அந்த வரிசையில் சேரும். ’குருவி’யில் இடம்பெற்ற ‘தேன் தேன்’ பாடல் துள்ளலை மட்டுமல்லாமல் காதலையும் நம்முள் ஊற வைக்கக்கூடியது.
யுவன், ஸ்ரீகாந்த் தேவா இசையில்..!
யுவன்சங்கர் ராஜா, தேவா இசையமைப்பில் உதித் நாராயண் பாடிய பாடல்களே இன்றும் அவரைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டாட வைக்கின்றன என்றால் அது மிகையல்ல.
யுவனின் தொடக்க காலத்தில் ‘வேலை’ படத்தில் வரும் ‘குன்னூரு பூச்சாண்டி’ பாடல் ‘அண்டர்ரேட்டட்’ ரகத்தில் அமைந்திருக்கும். இன்றைய தலைமுறையும் ‘ரீல்ஸ்’ போடுகிற வகையில் அதில் உதித் குரலில் ஒலித்திருக்கும்.
சில ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, ’வின்னர்’ படத்தில் மீண்டும் அந்த கூட்டணி ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தியது. ‘எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பாராய்’ மெலடி மெட்டாக இருந்தாலும், அதிலும் உரத்த குரலில் ஒலித்திருக்கும் உதித்தின் குரல்.
அதற்கு எதிர்த்திசையில் ‘கோழி கொக்கர கோழி’யை பாடியிருப்பார். யுவன் இசையில் ‘கேடி பையா’, ‘எங்கேயோ பார்த்த மயக்கம்’, ’ஒரு வானவில்லின் பக்கத்திலே’, ’அலைபாயும் நெஞ்சிலே’ பாடல்களில் வெவ்வேறுவிதமாகப் பாடியிருப்பார்.
தேவாவின் இசையில் ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்தில் ‘ஈஸ்வரா’ பாடலை முதல்முறையாகப் பாடிய உதித் நாராயண், பின்னர் பகவதி’யில் இடம்பெற்ற ‘அள்ளு அள்ளு’ உட்படச் சில பாடல்களைப் பாடினார்.
ஸ்ரீகாந்த் தேவாவுக்குப் பிடித்த பாடகர் என்று சொல்லும் அளவுக்கு, அவர் இசையில் குறிப்பிடத்தக்க அளவிலான பாடல்களைப் பாடியிருக்கிறார்.
‘அர்ஜுனா அர்ஜுனா’, ‘ஐய்யோ ஐய்யோ’, ‘அட என்னத்த சொல்வேனுங்கோ’, ’பம்பரக்கண்ணாலே’, ‘திருவாரூர் தேரே’ உள்ளிட்ட பாடல்கள் நம்மை ஆட்டுவிக்கும் பிளேலிஸ்டில் இடம்பெறுபவை.
சபேஷ் முரளி இசையமைத்த ‘ஏரோப்ளேன் பறக்குது பார் மேலே’, தினா தந்த ‘வண்டார்குழலி’, எஸ்.ஏ.ராஜ்குமாரின் ‘வேணாம் வேணாம்’ போன்ற பாடல்களும் இந்த வரிசையில் அமைந்தவை தான். இவை தவிர்த்து விஜய் ஆண்டனி, இமான், ஜி.வி.பிரகாஷ், தமன் என்று அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியிருக்கிறார் உதித்.
இதற்கு நடுவே ‘அச்சச்சோ புன்னகை’, ’ராங்கி ரங்கம்மா’, ‘வா செல்லம் வா வா செல்லம்’ பாடல்களில் அவரது குரலை வேறுவிதமாகப் பயன்படுத்தியிருப்பார் மணி சர்மா.
நினைவில் நிற்பவை!
தொண்ணூறுகளின் பிற்பாதியில் கார்த்திக் ராஜா தன்னிசையால் அடுத்த தலைமுறையை ஆட்டுவித்த காலத்தில் அவரது இசையில் சில பாடல்களைப் பாடினார் உதித் நாராயண்.
காதலா காதலா, உள்ளம் கொள்ளை போகுதே, நாம் இருவர் நமக்கு இருவர் என்று அப்படங்களில் நகைச்சுவையே பிரதான இடத்தைப் பிடித்திருக்கும். அது தரும் கலகலப்பை வேறுவிதமாகப் பிரதிபலித்திருக்கும் அவரது குரல்.
’காசு மேல காசு வந்து’, ‘ஐலேசா ஐலேசா’, ’ஹலோ எந்தன் காதலா’, ‘புயலே புயலே’, ‘பொல்லாத கிறுக்கு’ ஆகிய அந்தப் பாடல்கள் என்றும் நினைவில் நிற்கும் ரகத்தில் அமைந்தவை.
இந்த வரிசையில் சில மலையாளம், தெலுங்கு, இந்திப் பாடல்களும் கூடச் சேரும் அவரவர் திரையிசை ரசனையைப் பொறுத்து.
விதவிதமாக உணர்வுகளைத் தனது பாடலின் வழியே வெளிப்படுத்தினாலும், கொண்டாட்டத்திற்கு ஏற்ற குரலாகவே உதித்தின் பாடல்கள் பெரிதும் நோக்கப்படுகின்றன. மேடையில் அவற்றைப் பாடுகிறபோது, அவரது முகமும் உடல்மொழியும் கூட மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிற வகையில் அமைந்திருக்கும். அப்போது, அந்த உணர்வு அவருக்குள் ஊற்றெடுத்து, பன்மடங்காகப் பெருகி, நம்முள் தொற்றும் எண்ணம் ஏற்படும்.
உதித்தின் குரலும் அது உருவாக்கும் துள்ளலும் தொடரட்டும் இனி வரும் காலங்களிலும்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’விஜய் வருகையால் பயமில்லை’ : லண்டனில் இருந்து திரும்பிய அண்ணாமலை பேட்டி!