ரெட் ஜெயன்ட் நிறுவனத்திலிருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விலகுகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்யின் ’குருவி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பல படங்களை தயாரித்தார். அதன் பிறகு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் என பல முகம் கொண்டவராக வலம் வந்தார்.
அமைச்சர் ஆன உதயநிதி
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார். தீவிர அரசியலில் உதயநிதி இறங்கிய பிறகும் பல படங்களை விநியோகித்து வந்தார்.
முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாது, புதுமுகங்கள் நடித்த குறைந்த அளவிலான பட்ஜெட் படங்களையும் விநியோகம் செய்து வந்தார். இதனால், உதயநிதியின் மீது சில குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டன.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தமிழக அரசியலில் மூத்த அமைச்சர்கள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை எனப் பலரும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி, கடந்த டிசம்பர் 14ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி பதவியேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன். ’மாமன்னன்’ படமே என்னுடைய கடைசிப் படம்’ என்றார்.
ரெட் ஜெயன்ட்டிலிருந்து விலகல்?
அதைத் தொடர்ந்து ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் இருந்தும் அவர் விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக பத்திரிகையாளர் ப்ரியன், ரெட் ஜெயன்ட்டிலிருந்தும் உதயநிதி விலக வேண்டும் என்று நம் மின்னம்பலத்திற்கு சிறப்பு பேட்டியே அளித்திருந்தார். அவருடைய பேட்டியை இந்த லிங்க் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், அமைச்சராக பதவியேற்ற உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் நடிகர் விஜய் தரப்பில் ஆராயப்பட்டது. ஏனெனில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்திருப்பவர் இன்னொரு நிறுவனத்தில் ஊழியராகவோ, பங்குதாரராகவோ, உரிமையாளராகவோ இருக்கக்கூடாது.
ஆபீஸ் ஆஃப் பிராஃபிட் என்ற அடிப்படையில் அரசு சம்பளம் வாங்குபவர் இன்னொரு தனியார் நிறுவனத்திடமிருந்து ஆதாயம் பெற்றால், தனது அமைச்சக அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த தனியார் நிறுவனத்துக்கு அவர் பாரபட்சமாக உதவி செய்வதற்கு வாய்ப்புண்டு என்பதால், எந்த நிறுவனத்திலும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கக்கூடாது.
இது, உதயநிதிக்கும் பொருந்தும். எனவே, ரெட் ஜெயன்ட் நிறுனத்திடம் இருந்து உதயநிதி தன்னை முற்றிலும் விடுவித்துக் கொண்டாரா என்பது பற்றியும் விசாரித்தார் விஜய். இதுகுறித்து நம் மின்னம்பலத்தில் உதயநிதி – விஜய் – அண்ணாமலை: முக்கோண மோதலாகுமா தமிழக அரசியல் என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் வெளியீடுகளில் இனி உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம்பெறாது என தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சராக பதவியேற்றதால் இனி ’ரெட் ஜெயன்ட்’ நிறுவனம் வெளியிடும் படங்களில் ‘உதயநிதி ஸ்டாலின் பெருமையுடன் வழங்கும்’ என்பதற்கு பதிலாக, அவரின் மனைவியும் இந்நிறுவனத்தின் துணை இயக்குநருமான ‘கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் வழங்கும்’ என்கிற புதிய பெயர் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்தப் பெயர் மாற்றம் நிகழும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜெ.பிரகாஷ்