udhayanidhi stalin answers pa.ranjith

பராசக்தி – மாமன்னன் : பா.ரஞ்சித்திற்கு உதயநிதி பதில்!

சினிமா

பராசக்தி தொடங்கி மாமன்னன் வரை கலைவடிவங்களில் சமூகநீதியை தொடர்ந்து உயர்த்தி பிடித்து வருகிறோம் என்று பா.ரஞ்சித்துக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் மாமன்னன் படத்தை பாராட்டி வெளியிட்டிருந்த அறிக்கையில்,

“திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் (உதயநிதி ஸ்டாலின்) அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்தும், கேள்விகளுக்கு பதில் அளித்தும் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “மாமன்னன் திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் – ஏற்றத்தாழ்வும் கழகத்தில் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம்.

ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் சமூகநீதியை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது திமுக அரசு. அண்ணா, கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவரும் இப்பணியைத் தொடர்கிறார்.

பராசக்தியில் தொடங்கி மாமன்னன் வரை கலைவடிவங்களிலும் சமூகநீதியைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம்.

ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுக்கால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும் கூட.
ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம்.

பெரியார், அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்.

இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் ரஞ்சித்துக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

மோனிஷா

எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் தேதி மாற்றம்: காரணம் என்ன?

“மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது” – துரைமுருகன்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *