மீண்டும் படத்தில் நடித்தால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடிப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஜூன் 1) நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விஜய் ஆண்டனி, வெற்றி மாறன், பா. ரஞ்சித், எஸ்.ஜே.சூர்யா, பிரதீப் ரங்கநாதன், ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன், சூரி, கவின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின், ”மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் என்னுடைய கடைசி படம். இந்த படத்தை வெளியிடுவதற்கு ஆவலாக காத்திருக்கிறோம். வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் என ஒரு நல்ல குழுவுடன் இந்த படம் அமைந்ததை நல்ல விஷயமாக பார்க்கிறேன்.
மாரி செல்வராஜ் படத்தில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்களோ அது இந்த படத்தில் இருக்கிறது. இந்த படத்தை ஜூன் 29 அன்று வெளியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இப்போது பாடல்களைக் கேட்டுவிட்டு உங்களது கருத்துகளை சொல்லுங்கள்.
இது தான் கடைசி படம். கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. ஆனால் அமைச்சர் பதவி கொடுத்த பிறகு பணிகள் நிறைய வந்துவிட்டது. இப்படியே படம் நடித்துக் கொண்டிருந்தால் சரியா வராது. நிறைய எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்த ஆடியோ லாஞ்ச் மற்றும் டப்பிங் வேலைகளையே மிகுந்த பணிச்சுமைக்கு இடையில் தான் செய்து கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்து இது தான் கடைசி படமாக இருக்கும். ஒரு நல்ல படமாக அமைந்ததில் சந்தோஷம்.
வடிவேலு இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். மாரி செல்வராஜின் அரசியல் இந்த படத்தில் பேசப்பட்டுள்ளது. அவருக்கும் எனக்குமான புரிதல் நன்றாக இருந்தது. அவர் (மாரி செல்வராஜ்) என்னிடம், அடுத்து படம் நடித்தால் என்னுடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். ஆனால் அடுத்த 3 வருடத்திற்குப் படங்களில் நிச்சயமாக நடிக்க முடியாது. இதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் மீண்டும் நடித்தால் மாரி செல்வராஜ் படத்தில் தான் நடிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளேன்” என்று பேசினார் உதயநிதி ஸ்டாலின்.
மோனிஷா
கோவை : பேனர் விழுந்து மூவர் பலி!
டிஜிட்டல் திண்ணை: கையில் கட்டுடன் சசிகலா… தஞ்சை திருமணத்தில் மூவர் சந்திப்பு நிகழுமா?