கொரோனா பொது முடக்கத்தின் காரணமாகப் பல முறை ஒத்திவைக்கப்பட்ட அமீர்கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறது.
தமிழ் படங்களின் விநியோக உரிமை வாங்குவதில் ஆதிக்கம் செலுத்தி வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது முதன் முறையாக இந்திப்படத்தின் தமிழக உரிமையைப் பெற்றிருக்கின்றார்
இந்தி திரையுலகில் முன்னணி நடிகரான அமீர்கான், அவரது கனவு படைப்பான ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தை, இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடையச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். அதனடிப்படையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘லால் சிங் சத்தா’ படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிடும் என தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி, சாதனை படைத்து வருகிறது. அவரின் உலக அளவிலான ரசிகர்கள், அவரது கதாபாத்திரத்தைத் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்களும் வெளியாகி, இணையத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தி, ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இருக்கிறது. மேலும் படக்குழுவினர், படத்தின் ஆத்மார்த்தமான உணர்வைத் தாங்கியிருக்கும் பாடல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
அமீர்கான் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கிரண் ராவ் மற்றும் வயாகம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ படத்தில், அமீர்கானுடன் கரீனா கபூர் கான், மோனா சிங், சைதன்யா அக்கினேனி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான ‘ஃபாரஸ்ட் கெம்ப்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
இராமானுஜம்*