திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களை முற்றிலுமாக வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தமிழ்நாடு அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் கவனம் பெற்றுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு அதி தீவிர மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் முக்கிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் நெல்லை தூத்துக்குடியில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் இருக்கக்கூடியவர்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கோரம்பள்ளம் குளம் உடைந்து தூத்துக்குடியை நகரப்பகுதியை நோக்கி நீர் வருவதாக தகவல்…
மக்கள் எச்சரிக்கை..#Tirunelveli #TirunelveliRains #ThoothukudiRains pic.twitter.com/SD3GMOqLcT— Vedhavalli (@vedhavalli_13) December 18, 2023
மேலும் அணைகளின் இருந்து திறக்கப்படும் தண்ணீர், காற்றாற்று வெள்ளப்பெருக்கு, குளம், ஏரி உடைப்பு போன்றவற்றின் காரணமாக பல கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் அடித்து செல்லப்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திருநெல்வேலிக்கு அருகே புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ’பரியேறும் பெருமாள்’, ’கர்ணன்’, ’மாமன்னன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநரான மாரி செல்வராஜ், கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து வேதனையுடன் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (டிசம்பர் 18) பதிவிட்டுள்ள அவர்,
வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது.
ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்கள் மற்றும் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை. வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது.
ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை.
இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அயலான் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி!