படப்பிடிப்பு தளத்தில் நடிகை துனிஷா ஷர்மா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற இடத்தில் நேற்று (டிசம்பர் 24) அலி பாபா தஸ்தான் இ காபூல் தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.
படப்பிடிப்பு தளத்தில் உள்ள கழிவறைக்கு சென்ற நடிகை துனிஷா ஷர்மா நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த படக்குழுவினர் கழிவறை கதவை உடைத்து பார்த்தபோது, துனிஷா ஷர்மா தூக்கில் தொங்கியபடி இருந்தார். உடனடியாக அவரை மீட்டு படக்குழுவினர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
துனிஷா ஷர்மா தற்கொலை செய்துகொண்டதாக படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் கூறினாலும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக வாலிவ் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துனிஷா ஷர்மா இறந்தது குறித்து அவரது தாய் வாலிவ் காவல்துறையில் அளித்த புகாரில், அலி பாபா தஸ்தான் இ காபூல் தொடரில் துனிஷாவுடன் நடிக்கும் ஷீசன் முகமது கான் துனிஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது புகார் அளித்துள்ளார்.
டிசிபி சந்திரகாந்த் ஜாதவ் துனிஷா மரணம் குறித்து கூறும்போது, “அலி பாபா தஸ்தான் இ காபூல் படப்பிடிப்பு தளத்தில் துனிஷா ஷர்மா தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடன் பணிபுரியும் சக நடிகரான ஷீசன் முகமது கான் மீது துனிஷாவின் தாயார் புகார் கொடுத்துள்ளார். அவரது புகார் குறித்து ஷீசன் கானிடம் விசாரணை நடத்தப்படும்.” என்றார்.
துனிஷா ஷர்மா சோனி தொலைக்காட்சியில் மஹாரானா பிரதாப் என்ற வரலாற்று தொடரில் சந்த் கன்வர் வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார்.
இதனை தொடர்ந்து அவர் பல சின்னத்திரை தொடர்கள் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார். கத்ரினா கைஃப் படங்களில் குழந்தை கதாபாத்திரமாக அவர் நடித்திருந்தார். சக்ரவர்த்தி அஷோகா சாம்ராட், கப்பர் பூன்ச்வாலா, ஷெர் – இ – பஞ்சாப், மகாராஜா ரஞ்சித் சிங், இண்டர்நெட் வாலா லவ் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் அவர் நடித்துள்ளார்.
இறப்பதற்கு சில நேரங்களுக்கு முன்பாக துனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து, “தாங்கள் சாதித்தே ஆக வேண்டும் என்ற வேட்கையால் உந்தப்படுபவர்கள் ஒருபோதும் நிற்கமாட்டார்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.
துனிஷா ஷர்மா மரணம் இந்தி திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
அடுத்த 3 மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!