சர்ச்சை நாயகன் டிடிஎப் வாசன் தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் ஐபிஎல் என்கிற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. சினிமாவில் பிசியாக இருப்பதால், கடந்த சில மாதங்களாக எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்த வாசன், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சமீபத்தில் பாம்பு ஒன்றுடன் இருக்கும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார். இதையடுத்து ,பாம்பை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது வனத்துறை ஆக்ஷன் எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வந்தனர்.
ஆனால், இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் அந்த வீடியோவின் தொடக்கத்திலேயே விளக்கம் அளித்துள்ளார் வாசன்.
“நம் நாட்டில் உள்ள பாம்புகளை தான் வீட்டில் வளர்க்க முடியாது. நான் வளர்ப்பது வெளிநாட்டு பாம்பு. அதை வீட்டில் வளர்க்க அனுமதி உண்டு. லைசென்ஸ் பெற்று அதை வளர்க்கிறேன். சட்ட வல்லுநர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்ற பின்னர் தான் பாம்பை வீட்டில் வளர்த்து வருகிறேன்.

பறக்கும் அணில், அரியவகை குரங்கு ஒன்றையும் வாங்க இருக்கிறேன். விதவிதமான விலங்குகளை வளர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதை நிறைவேற்றும் விதமாக தான் பாம்பு வாங்கி வளர்த்து வருகிறேன்” என்று வாசன் தெரிவித்துள்ளார். அந்த பாம்புக்கு செல்லமாக பப்பி என பெயரிட்டிருக்கிறார் வாசன். அதோடு, அந்த பாம்பை தன் கழுத்தில் போட்டு விளையாடும் வீடியோவையும் வாசன் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. வாசனிடம் பாம்பு வளர்ப்பதற்கான முறையாக லைசன்ஸ் பெற்றிருந்தாலும் அவர் அதை துன்புறுத்தும் விதமாக கையாண்டுள்ளார். இதனால், வனத்துறை அதிகாரிகள் அவரிடத்தில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
பொதுவாக, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து அரியவகை பாம்புகள், குரங்குகள், பல்லிகள் போன்றவை இந்தியாவுக்கு கடத்தி வரப்படுகின்றன. பல பணக்காரர்கள் இத்தகைய பாம்புகளை தங்கள் வீட்டில் வளர்க்க விரும்புவதால் அவை கடத்தி வரப்படுகின்றன. டிடிஎப் வாசனும் தாய்லாந்து போன்ற நாட்டில் இருந்து இந்த பாம்பை வாங்கியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 : ஸ்டாலினுக்கு ராமதாஸ், முத்தரசன் வலியுறுத்தல்!