ஹேவேயில் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் மீது மொத்தம் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்று (செப்டம்பர் 19) அவரை கைது செய்துள்ளனர்.
பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமாக வலம் வருபவர் டிடி எஃப் வாசன். இவர் அம்பத்தூரில் இருந்து மகாராஷ்டிராவிற்கு தனது விலையுயர்ந்த பைக்கில் கடந்த 17ஆம் தேதி சென்றுள்ளார்.
அப்போது காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூரு சாலையில் வீலிங் சாகசம் செய்ய முயன்ற நிலையில் பைக் கட்டுப்பாட்டை இழந்ததால் டிடிஎஃப் வாசனுக்கு கை முறிவு ஏற்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதற்கிடையே டிடிஎஃப் வாசனின் பைக் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது IPC 279, 336 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழக போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் மீது IPC 308, 184, 188 உள்ளிட்ட மேலும் 3 பிரிவுகளின் கீழ் ஜாமினில் வரமுடியாதபடி இன்று வழக்குப்பதிவு செய்த காஞ்சிபுரம் போலீசார், அவரை கைதும் செய்துள்ளனர்.
டிடிஎஃப் வாசன் மீது இந்த நடவடிக்கையை எடுக்கக்கோரி தமிழக போலீசாருக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரை இன்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
டிடிஎஃப் வாசன் லைசென்ஸ் ரத்து?
தண்ணீருக்காக ஊருக்குள் வரும் வனவிலங்குகள்: பொதுமக்கள் அச்சம்!