த்ரிஷா நடித்துள்ள ராங்கி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் ராங்கி படம் உருவாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதிய இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ராங்கி படத்திற்கு சி. சத்யா இசையமைத்துள்ளார்.
இந்த படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போது 30 காட்சிகள் நீக்கப்பட்டது. இதனால் சமீபத்தில் இந்த படம் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் பேசப்பட்டது.
ஆனால் இதற்கு விளக்கம் அளித்திருந்த இயக்குநர் சரவணன், “சென்சாரில் பல பிரச்சினைகளைச் சந்தித்தோம். வெளிநாட்டுப் பிரச்சனை தொடர்பான காட்சிகள் வருவதால், 30 இடங்களில் கட் மற்றும் மியூட் செய்யப்பட்டது. இருந்தாலும் அது கதையை எந்த இடத்திலும் பாதிக்கவில்லை.
மேலும் இப்படத்தில் நடிகை திரிஷா மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறார்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் ராங்கி படத்தின் டிரைய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லர் காட்சி தொடங்கும் போதே குண்டு வெடிக்கும் காட்சியோடு தான் தொடங்குகிறது.
இப்படத்தில் த்ரிஷா ஆக்ஷன் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். எப்போதும் போல் இல்லாமல் இந்த படத்தில் வித்தியாசமான வேடத்திலும் திமிரு பிடித்த பெண்ணாகவும் நடித்துள்ளார்.
மிகவும் துணிச்சலாக இருக்கும் த்ரிஷா ஏதோ பிரச்சனையில் சிக்கிக் கொண்டு அதில் இருந்து எப்படி வெளியே வருவது என்று யோசிப்பது போலக் காட்சிகள் அமைந்துள்ளது.
மேலும் இப்படத்தில் த்ரிஷா தனது குடும்பத்தில் நடக்கும் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, அது சர்வதேச பிரச்சினைக்கு இழுத்துச் செல்கிறது. அதை எப்படி முறியடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை என்று இயக்குநர் சரவணன் ஏற்கனவே பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராங்கியாக நடித்துள்ள த்ரிஷாவின் படம் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மோனிஷா