ஈர்ப்பை விதைக்கும் ஒரு ‘த்ரில்லர்’!
கொரோனா காலகட்டத்தில் ஓடிடி தளங்களில் திரைப்படங்களும் வெப்சீரிஸ்களும் வெளியானபோது ரசிகர்கள் பெரும் வரவேற்பு தந்தார்கள். அதே போன்ற வெற்றியைப் பெறும்விதமாகத் தற்போது பல படைப்புகள் ஓடிடியில் வெளியாகின்றன. ஆனாலும், நட்சத்திர அந்தஸ்து கொண்ட கலைஞர்கள் இல்லாததால் அவை போதிய கவனிப்பைப் பெறாத நிலையே நிலவுகிறது அல்லது ரொம்பவே தாமதமாகக் கவனிக்கப்படுகின்றன. அவற்றை எதிர்கொள்ளும் வகையில் தற்போது முன்னணி நட்சத்திரங்களை வெப் சீரிஸ்களில் நடிக்க வைக்கும் உத்தியைப் பெரும்பாலான ஓடிடி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அந்த வரிசையில் தெலுங்கில் தயாராகியுள்ள ‘பிருந்தா’வில் நடித்திருக்கிறார் நடிகை த்ரிஷா. சூர்யா மனோஜ் வங்கலா இதனை இயக்கியிருக்கிறார். சக்திகாந்த் கார்த்திக் இசையமைத்துள்ளார்.
சோனி லிவ் தளத்தில் இது வெளியாகியுள்ளது. ‘பிருந்தாவில்’ இந்திரஜித் சுகுமாரன், அனந்த் சாமி, ரவீந்திரா விஜய், ஜெயபிரகாஷ், ஆமனி, அஞ்சனா உட்படப் பலர் நடித்துள்ளனர்.
‘பிருந்தா’வின் ட்ரெய்லரே அது ஒரு த்ரில்லர் என்பதனைச் சொன்னது. சரி, எந்தளவுக்கு இருக்கிறது இது தரும் காட்சியனுபவம்?!
சில கதைகள்!
ஒரு காட்டில் தனது சகோதரன் சத்யாவைத் தேடுகிறார் சிறுமி சின்னி. சலனமின்றித் தரையில் கிடக்கும் சத்யாவைப் பார்த்ததும் சின்னி அழுகிறார். உடனே கண் விழிக்கும் சத்யா, ‘சும்மா ஏமாத்தினேன்’ என்கிறார். தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் அக்குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் வாழும் பழங்குடியினக் கிராமத்தில் திடீரென்று ஒரு நோய் பரவுகிறது. அதிலிருந்து தப்பிக்க, தெய்வத்திற்கு ஒரு குழந்தையைப் பலி கொடுக்க வேண்டும் என்கிறார் பூசாரி. சின்னியை அதற்காகத் தேர்வு செய்கிறார்.
அதனைக் கேட்டதும், அவரது தாய் பதறுகிறார். சின்னியையும் சத்யாவையும் அழைத்துக்கொண்டு, அங்கிருந்து வெளியேற முயற்சிக்கிறார். அந்த முயற்சியில் சின்னி தப்பிவிட, ஊர் மக்களிடம் மாட்டிக் கொள்கிறார் தாய். அவரைக் கொல்வதோடு, இன்னொரு சிறுமியைப் பலி கொடுக்கிறார் பூசாரி.
சில நிமிடங்கள் கழித்து அந்த இடத்திற்கு வரும் சத்யா, நடந்ததை அறிந்து ஆவேசம் கொள்கிறார். தாயுடன் சின்னியும் இறந்துபோனதாகக் கருதுகிறார். அதற்குப் பழிவாங்கும் வகையில், அந்த ஊரிலுள்ள அனைவரையும் எரித்துக் கொலை செய்கிறார்.
மலைக்கிராமத்தைப் பற்றிய தீயைத் தொலைவில் இருந்து ஒரு நபர் காண்கிறார். தன் கண்களுக்கு ஜோதி தெரிந்ததாக மகிழ்ச்சி கொள்கிறார்.
இந்த சம்பவத்தில், ஊர் மக்களைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட சத்யா சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்படுகிறார். இது ஒரு கதை. இன்னொரு கதை, சின்னி எனும் பிருந்தாவைச் சுற்றி நிகழ்கிறது.
லாரியில் ஏற்றப்பட்டதன் மூலம் ஊர் மக்களின் கொலையாவேசத்தில் இருந்து தப்பிய சின்னியைக் காண்கிறார் குரு பிரசாத் (ஜெயபிரகாஷ்) எனும் போலீஸ் அதிகாரி. அவரைத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். மனைவி வசுந்தராவிடம் (ஆமனி), இவர் நமது மகள் என்கிறார். அவருக்குப் பிருந்தா (த்ரிஷா) என்று பெயரிடுகிறார்.
பிருந்தாவின் பதின்ம வயதில், குருபிரசாத் கொலையாகிறார். பிறகு தாய் வசுந்தரா, தங்கை நைனியைச் சுற்றியே பிருந்தாவின் வாழ்க்கை சுழல்கிறது. குரு பிரசாத் போன்றே அவரும் போலீஸ் பணியில் சேர்கிறார். சப் இன்ஸ்பெக்டர் ஆகிறார்.
யாரிடமும் அதிகமாகப் பேசாத, தனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிற பிருந்தாவின் இயல்பு, காவல் நிலையத்தில் உடன் வேலை பார்ப்பவர்களுக்கு வினோதமாகத் தெரிகிறது. அவரை யாரும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
இந்த நிலையில், ஒருநாள் ஆற்றில் ஒரு சடலம் கிடைத்ததாக தகவல் கிடைக்கிறது. அந்த இடத்திற்குச் செல்லும் பிருந்தா, அந்த நபர் கொலை செய்யப்பட்டதாகச் சொல்கிறார். ‘இது தற்கொலை’ என்று இன்ஸ்பெக்டர் சாலமோன் (கோபராஜு) சொன்ன நிலையில், அதற்கெதிராக அவர் கருத்து சொல்வது சக போலீசாருக்கு ஆச்சர்யம் ஏற்படுத்துகிறது. அவர்களில் எஸ்ஐ சாரதியும் (விஜய் ரவீந்திரா) ஒருவர்.
அடுத்த நாள் வெளியாகும் பிரேதப் பரிசோதனையில் பிருந்தா சொன்ன தகவல்களே இடம்பெற்றிருக்கின்றன.
அதன்பிறகு, இன்னொரு நீர்நிலையில் ஒரு சடலம் கிடைக்கிறது. தலையில் முடி மழிக்கப்பட்டு, மார்பில் வினோத காயங்களுடன் அது இருப்பது முந்தைய வழக்கை நினைவூட்டுகிறது. அதனைக் கண்டதும், ஒரே நபர் தான் இக்கொலைகளைச் செய்ததாகச் சொல்கிறார் பிருந்தா.
அந்த வட்டாரத்தில் இதே போன்று கிடைத்த வேறு சடலங்களை, அது தொடர்பான வழக்குகளைத் தேடியெடுக்கிறார். அப்போது, மிகத்திட்டமிட்டு அந்த கொலைகள் நிகழ்த்தப்பட்டதைக் கண்டறிகிறார். அந்த கொலையாளியைப் பிருந்தாவும் போலீசாரும் தேடுவது இன்னொரு கதையாக விரிகிறது.
இன்னொரு புறம், உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த தாகூர் சிறு வயது முதலே ஊர்க்காரர்களால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார். அவர் பிறந்தபோது தாய் இறந்த காரணத்தால், பாட்டி அவரை வெறுக்கிறார். தாத்தா மட்டுமே அவருக்கு ஆதரவாக இருக்கிறார். தாத்தாவின் மரணத்திற்குப் பிறகு, அவரைக் கொல்ல முடிவெடுக்கின்றனர் ஊர் மக்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் தாகூரை மீண்டும் ஊராரிடம் பிடித்துக் கொடுக்க முடிவு செய்கிறார் பாட்டி. அப்போது, அவரைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடும் தாகூரை போலீசார் கைது செய்கின்றனர். இத்தனை கதைகளோடு மிகச்சில மனிதர்களைத் தேடித் தேடி தாகூர் கொலை செய்வது நிகழ்காலத்தில் நடக்கிறது.
பிருந்தா தேடும் கொலையாளி தான் தாகூர். ஆனால், அதற்கான சாட்சியங்கள் மட்டுமல்லாமல் அவர் குறித்த அடையாளங்களும் கூட யார் கையிலும் கிடைப்பதில்லை. இந்த நிலையில், பிருந்தாவால் தாகூரைப் பிடிக்க முடிந்ததா? பிருந்தாவின் சகோதரர் என்னவானார்? இது போன்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு எபிசோடிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பதில்களைத் தருகிறது ‘பிருந்தா’.
இந்தக் கதைகள் அனைத்தையும் ஆங்காங்கே சொல்லிச் சென்றிருக்கிறது திரைக்கதை. இறுதி எபிசோடு மட்டும் சரியாகத் திட்டமிடப்படாதது போன்று தோற்றமளிக்கிறது. அதைத் தவிர, ‘பிருந்தா’வில் இருக்கும் கதை சொல்லலில் நம்மால் குறைகள் கண்டறிவது கடினம்.
தெரியாத முகங்கள்!
இதில் முதன்மை பாத்திரம் ஏற்று நடித்திருக்கும் த்ரிஷா, கிட்டத்தட்ட ‘ராங்கி’யில் வந்த தனது பாத்திரத்தை மீளாக்கம் செய்திருப்பதாகவே தோன்றுகிறது. போலீஸ் உயரதிகாரிகளோடு மல்லுக்கட்டுவதாக அமைந்த காட்சிகளில் மட்டும் அவரது நடிப்பில் ‘சினிமாத்தனம்’ எட்டிப் பார்க்கிறது.
ரவீந்திரா விஜய் இதில் விதவிதமான உணர்வுகளை வெளிக்காட்டும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார். மனைவியாக வரும் அஞ்சனாவோடு அமைந்த காட்சிகளில் அவரது நடிப்பு அருமை.
’வர்ணஜாலம்’ போன்ற தமிழ் படங்களில் நாம் கண்ட அனந்த் சாமி, இதில் வெகுளித்தனம் நிறைந்த கொலையாளியாக நடித்திருக்கிறார். அவரது இருப்பில் குறை ஏதும் இல்லை என்றபோதும், தொடர்ந்து இதே மாதிரியான வாய்ப்புகள் அவருக்கு அமைந்துவிடுமோ என்ற பயமும் எழாமல் இல்லை.
’பிருந்தா’வில் இந்திரஜித் ஏற்றிருக்கும் பாத்திரத்தை இதுவரை நாம் கண்டதில்லை என்று சொல்ல முடியாது. ஆனால், ’இவர் ஏதோ செய்யப் போகிறார்’ என்ற எண்ணத்தை உண்டுபண்ணும் வகையில் அவரது வில்லத்தனம் திரையில் தெரிகிறது. அதேநேரத்தில், அவரது பாத்திரத்தை இன்னும் செறிவாக வடிவமைத்திருக்கலாம் என்ற எண்ணமும் நம்முள் எழாமல் இல்லை.
இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ள கோபராஜு, எரிச்சலைக் காட்டும் இடங்களில் அசத்தியிருக்கிறார். இனி அடிக்கடி இவரைத் தமிழ், தெலுங்கு படங்களில் பார்க்கலாம்.
த்ரிஷாவின் பெற்றோராக இதில் ஜெயபிரகாஷ் – ஆமனி நடித்துள்ளனர். அவர்கள் நடிப்பில் புதுமை இல்லை என்றபோதும், அவர்களது இருப்பே நம்மைத் திரையில் இருந்து கண்களை அகலவிடாமல் தடுக்கிறது.
நைனியாக வரும் யஷ்னா முதுலரி, தனது ஆண் நண்பர்களோடு அடிக்கும் லூட்டிகள் ‘க்ளிஷே’வாக உள்ளன. அவையனைத்தும் த்ரிஷா பாத்திரத்தின் ஆக்ஷன் பில்டப்புக்கானவை என்பது முதல் பார்வையிலேயே தெரிந்துபோகிறது.
இன்னும் ரவீந்திராவின் மனைவியாக வரும் அஞ்சனா உட்பட சுமார் நாற்பது பேராவது இதில் தங்கள் முகத்தைக் காட்டியிருப்பார்கள்.
வெவ்வேறு மொழிகளைச் சார்ந்த நடிப்புக்கலைஞர்களை இதில் பங்கேற்கச் செய்திருப்பதன் மூலமாக, ‘பான் இந்தியா’ புகழைப் பெற விரும்பியிருக்கிறார் இயக்குனர் சூர்யா மனோஜ் வங்கலா.
ஒளிப்பதிவாளர் தினேஷ் கே.பாபுவின் கைவண்ணத்தில் ஒவ்வொரு பிரேமும் செறிவுமிக்கதாகத் தென்படுகிறது. டிஐ, விஎஃப்எக்ஸ் பணிகளும் அதற்கு ஒத்துழைப்பைத் தந்திருக்கின்றன.
டைட்டிலுக்கு முன்பாக வரும் பிளாஷ்பேக், பின்னே வரும் சமகாலத்திய விவரணைகளைச் சரியாகப் பிரித்து, பார்வையாளர்களுக்குக் குழப்பம் வராமல் கதை சொல்ல உதவியிருக்கிறார் படத்தொகுப்பாளர் அன்வர் அலி.
இசையமைப்பாளர் சக்திகாந்த் கார்த்திக்கின் டைட்டில் இசையும் சரி, சில காட்சிகளில் அமைந்துள்ள பின்னணி இசையும் சரி, நம்மை இப்படைப்போடு பிணைப்பதாக உள்ளன.
தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா, ஒலி வடிவமைப்பு மற்றும் ஆடியோகிராபியைக் கையாண்டிருக்கும் சாய் மனீந்தர் ரெட்டி, தபஸ் நாயக், ஆக்ஷன் கொரியோகிராபர்களான சேத்தன் டிசௌசா, ஜீவன் குமார் மற்றும் படப்பிடிப்பில் முக்கியப் பங்காற்றிய ஆடை வடிவமைப்பு, ஒப்பனை உள்ளிட்ட இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று பலரும் ஒன்றிணைந்து, ‘பிருந்தா’ செறிவான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தோற்றம் தரப் பணியாற்றியிருக்கின்றனர்.
’பிருந்தா’வின் கதையை எழுதி, இயக்கியிருக்கிறார் சூர்யா மனோஜ் வங்கலா. திரைக்கதையைப் பத்மாவதி மல்லாடியும் வசனத்தை ஜெய் கிருஷ்ணாவும் கையாண்டுள்ளனர்.
கடவுளை வணங்காதவர்கள், வணங்குபவர்கள் பற்றிய வேறுபாடுகளைச் சொல்லுமிடம் திரைக்கதையில் உள்ளது. அதனை ‘ஓவர் டிராமா’ ஆக்காமல் மெலிதாகக் கையாண்டிருப்பது அழகு.
இதில் சத்யா, சின்னி, நைனி பாத்திரங்களை வெவ்வேறு வயதுகளில் காட்ட வெவ்வேறு குழந்தைகளை நடிக்க வைத்திருக்கின்றனர். அது மிகச்சரியான முடிவு என்றபோதும், சட்டென்று அக்காட்சிகளோடு ஒன்றிப்போகத் தோதாக இல்லை.
அதேபோல சாரதி, அவரது மனைவி லேகா இடையிலான காட்சிகளில் இன்னும் அழுத்தம் கூட்டியிருக்கலாம். ‘பிருந்தா’ திரைக்கதையில் கிளைக்கதைகள் சில இருந்தாலும், அவற்றுக்கும் முதன்மைக் கதைக்குமான தொடர்பு ரொம்பவும் இறுக்கமானதாக இல்லை. அனைத்துக் கதைகளும் ஒன்றோடொன்று பிணைந்திருக்கின்றன என்பதோடு நிறுத்திக் கொண்டிருப்பது ஒரு குறையாகத் தெரிகிறது.
போலவே, கிளைமேக்ஸில் பரபரப்பையும் ஆவேசத்தையும் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைக்கிறது. அந்த பகுதியை இன்னும் கொஞ்சம் சீர் செய்திருக்கலாம்.
த்ரிஷாவின் இருப்பு ‘பிருந்தா’வை நோக்கிப் பார்வையாளர்களின் கவனத்தைத் திருப்புகிறது. சுமார் 4 மணி நேரம் ஓடக்கூடிய ஒரு வெப்சீரிஸை தொடர்ந்தாற்போலப் பார்க்கச் செய்வது அரிதானதொரு காரியம். அதையும் ‘பிருந்தா’ சாதித்திருக்கிறது. தெலுங்கு ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட இக்கதையைத் தமிழ் மட்டுமல்லாமல் வேறு மொழியைச் சார்ந்தவர்களும் ரசிக்க முடியும். அதற்கேற்ற ஒரு பொதுத்தன்மை இதிலுள்ளது. அது, கடவுள் நம்பிக்கையாளர்களுக்கும் அதனை மறுப்பவர்களுக்கும் இடையே நிலவிவரும் முரண் தான்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் தர வேண்டும்: சச்சின் கோரிக்கை!
4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!