what is the meaning of thug life?

கமல் படத்திற்கு டிரெண்டிங் டைட்டில்: ’தக் லைஃப்’ அர்த்தம் என்ன?

சினிமா

தக் லைஃப் என்பதன் பொருள் என்ன என்பதை அறிந்து கொள்ள இணையத்தில் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல எல்லா தரப்பினரும் தேட தொடங்கியுள்ளனர். காரணம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ’தக் லைஃப்” என அறிவிக்கப்பட்டிருப்பதுதான். what is the meaning of thug life?

தீவிரவாதம், காதல், அரசியல் தலைவர்களின் வரலாறு, தொழிலதிபர்களின் வாழ்க்கை, தாதாக்களின் வாழ்க்கை பின்புலத்தில் இருந்து திரைக்கதை எழுதி இயக்கி வந்த இயக்குனர் மணிரத்னத்தின் ’தக் லைஃப்’ என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்கிற அனுமானங்களும், விவாதங்களும் சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது.

தக் லைஃப் என்பதற்கான தமிழ் பெயர் பிண்டாரிகள் என கூறப்படுகிறது. எதுவுமே இல்லாமல் கீழ்நிலையில் இருந்து நியாயமாகவோ அல்லது முறைகேடான வழிகளில் பொருளாதார, சமூக ரீதியாக தன்னை வளர்த்துக்கொள்கிறவனை ‘தக்’ என்று மேலைநாடுகளில் அழைக்கின்றனர்.

இழப்பதற்கு எதுவுமில்லாத, எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் இவர்களின் வாழ்வை ‘தக் வாழ்க்கை’ என்றும் மேலை நாடுகளில் கூறுகிறார்கள்.

இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது. இதற்கு அர்த்தம் என்ன என்பதை இணையத்தில் தேடிப்பார்த்தால், ’தக்’ என்ற சொல்லின் மூலம், இந்தியாவில் உருது மொழியின் ‘தாக்’ என்பதில் காணக் கிடைக்கிறது.

தக் என்பதை உலகிற்கு அறிமுகம் செய்தது இந்தியாதான். வட இந்தியாவில் புழக்கத்தில் இருந்த தாக் என்ற சொல் ‘பின்விளைவை நினைத்துப் பார்க்காத, துணிவான, மோசடிக்காரன்’ என குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவை 1800-களில் ஆக்கிரமித்து அதிகாரம் செலுத்த தொடங்கிய பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஆங்கில மொழியில் ‘தக் என்கிற’ வார்த்தை நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தியாவை ஆக்கிரமிக்க தொடங்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதிகாரத்தையும், அடக்குமுறைகளையும் அமல்படுத்த தொடங்கிய ஆங்கிலேய அரசு சந்தித்த எதிர்விளைவுகளின் கதாநாயகர்களாக ‘தக்’ மனிதர்கள் தங்கள் வீரத்தை காட்டியுள்ளனர்.

ஆங்கிலேயர்களை விரட்டி விரட்டி ஓட விட்டவர்கள் தாக்குகள். 1800 ஆரம்பத்தில், இந்திய நெடுஞ்சாலைகளில், பல்லாயிரக்கணக்கான பயணிகளை, வெகு சாதாரணமாக கழுத்தை நெரித்து கொன்று, உடமைகளை கொள்ளையடித்த குற்றவாளி கும்பல் ஒன்று நடமாடியதாக ஆங்கிலேயர் பதிவு செய்திருக்கும் ஆவணங்களில் பதிவாகியுள்ளது. இவர்கள்தான் தக்குகள் எனவும் ‘பிண்டாரிகள்’ எனவும் அரசின் ஆவணங்களில் பதிவாகியுள்ளது.

கொள்ளை அடிப்பது, அதற்கு தடையாக இருப்பவர்களை கொலை செய்வதை தங்கள் தொழிலாக கொண்டவர்களின் வாழ்க்கை முறை தக் என கருதப்பட்டது என ஆங்கிலேயர்கள் பதிவு செய்திருக்கும் ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது.

‘இல்லஸ்ட்ரேஷன்ஸ் ஆஃப் தி ஹிஸ்டரி அண்ட் பிராக்டிஸஸ் ஆஃப் தக்ஸ்’ (Illustrations of the history and practices of the Thugs 1837) என்ற நூலில் “இந்தியாவில் ஏராளமான பரம்பரை தொழில்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் கொள்ளை, கொலை செய்வது ‘தக்’குகளின் தொழில் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘தக்’குகள், அழித்தொழிப்பின் தெய்வமான காளியை வணங்குபவர்கள் என்பதும், ‘பிறவி குற்றவாளிகள்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளனர்.

‘தக்’குகளின் கொள்ளை, கொலை வழக்கம் ஆங்கிலேயர்களை திகைப்பில் ஆழ்த்தியது. ‘இந்த கூட்டத்தை வேருடன் ஒழிக்கவேண்டும். இல்லையேல் இந்தியாவில் ‘ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை தொடரமுடியாது’ என 1830-ல் இங்கிலாந்துக்கு அறிக்கை அனுப்பப்பபட்டதாக ஆவணங்களில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து தக்குகளை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது ஆங்கிலேய அரசு .

‘கூண்டோடு இவர்களை அழிக்கும்’ வேலையை முன்னின்று செய்தவர்கள், இந்தியாவின் அப்போதைய பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் ‘லார்ட் வில்லியம் பெண்டின்க்’ மற்றும் ‘கேப்டன் வில்லியம் ஸ்லீமன்’ ஆகியோர்தான். ஏறக்குறைய 4,000 தக் வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சுமார் 2,000 பேருக்கு மரண தண்டனை. மற்றவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.

கேப்டன் ஸ்லீமன் இந்தியாவில் ‘தக்’குகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக’ லண்டனுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். பிலிப் மெடோஸ் டெய்லர் எழுதிய ‘ஒரு ‘தக்’கின் வாக்குமூலம்’ நூற்றாண்டின் மிக பிரபலமான நூல். (Confessions of a #Thug-1839) “தக்” என்ற இந்திய வார்த்தை உலக வழக்கானது இப்படித்தான். ‘தக்’ என்பவர்கள் இந்தியாவிலிருந்து ஒழிக்கப்பட்டதாக அறிவித்த 50 வருடங்கள் கழித்து ஆங்கிலேயர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

தென்தமிழகத்தில் கடலோரம் அமைந்துள்ள ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டம், அதனையொட்டி இருக்கும் மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளில் தக்குகள் அசுர வளர்ச்சியில் இருந்தனர். இவர்களின் பெயர்கள் பிற்காலத்தில் குற்றப்பரம்பரையினராக மாற்றம் கண்டுள்ளது. தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பிறர் சொத்தை கொள்ளையடித்து வாழ்வதை தொழிலாக கொண்ட ஒரு கூட்டம் அடிமை இந்தியாவில் மட்டுமல்ல சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்து வந்திருக்கிறது.

இவற்றை விஜய்சேதுபதி அறிமுகமான ’தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படத்தில் இயக்குநர் சீனுராமசாமி பதிவு செய்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தயாராக உள்ள ’தக் லைஃப்’ இவர்களைப் பற்றியதா என்பதை அனுமானிக்க முடியாது என்றாலும் படத்தின் தலைப்பு அறிமுகத்திற்காக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் ”என் பேரு ரங்கராயர் சக்திவேல் நாயக்கர், காயல்பட்டினக்காரன்” என்று கமல்ஹாசன் பேசியிருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான நாயகன் படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரம் சக்திவேல், வேலு நாயக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. கதைகளம் இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கி இந்தியா முழுவதும் பயணிக்க போகிறதா என்பதை படம் வெளியாகும் போதுதான் தெரியவரும். what is the meaning of thug life?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

50MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான Poco C65: சிறப்பம்சங்கள் என்ன?

நெருங்கும் தீபாவளி: நவ.10 வரவு வைக்கப்படும் உரிமைத் தொகை?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *