ஏஆர்எம் : விமர்சனம்!

சினிமா

உதயசங்கரன் பாடகலிங்கம்

இன்னொரு ’மின்னல் முரளி’!?

தற்போது மலையாளத் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகராக, நட்சத்திரமாகத் திகழ்கிற பசில் ஜோசப் இயக்கிய திரைப்படம் ‘மின்னல் முரளி’.

கோவிட் காலத்தில் ஓடிடியில் வெளியான இப்படம் இந்தியாவில் வெளியான ‘சூப்பர்ஹீரோ’ படங்களில் தனித்துவமிக்கதாகத் திகழ்கிறது. இதே வகைமையில் அமைந்த மேற்கத்திய படங்களின் தாக்கம் ஏதுமின்றி, கைலி அணிந்த இரண்டு சாதாரண மனிதர்களுக்கு திடீரென்று ‘அபார சக்தி’ கிடைப்பதையும், இரு வேறு திசைகளில் பயணிக்கும் இருவரும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்வதையும் காட்டியது அப்படம். ‘அட்வெஞ்சர்’ படமென்றால் பெருநகரங்களையே காட்ட வேண்டுமென்ற எழுதப்படாத விதியை உடைத்து, முழுக்கதையும் ஒரு கிராமத்தில் நிகழ்வதாகக் காட்டியது.

‘மின்னல் முரளி’யில் நாயகனாக நடித்த டொவினோ தாமஸ் குஞ்சிக்கேலு, மணியன், அஜயன் என்று மூன்று வேடங்களில் நடித்த ‘ஏஆர்எம்’ தற்போது வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் கதையும் ‘பேண்டஸி அட்வெஞ்சர்’ வகைமையில் அமைந்ததாகக் கூறப்பட்டது.

அது உண்மையா? ‘மின்னல் முரளி’ போன்றதொரு அனுபவத்தை இப்படம் தருகிறதா?

தொடரும் அவப்பெயர்!

கேரளாவின் ஒரு பகுதியில் விண்கல் ஒன்று விழுகிறது. அதனால் அந்த இடமே பெரும்பள்ளமாகக் காட்சியளிக்கிறது. அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அது பற்றிப் பல கதைகள் நிகழ்கின்றன. அங்குள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் அந்த விண்கல்லைத் தம்முடையதாக எண்ணுகின்றனர்.

ஆனால், அருகிலுள்ள எடக்கல் பகுதியை ஆளும் அரசர் அந்த விண்கல்லைக் கைப்பற்றி வரச் சொல்கிறார். அதிலுள்ள மண் துகள்களை அகற்றியபிறகு மிச்சமிருக்கும் உலோகத்தில் ஒரு விளக்கைச் செய்கிறார். அது அம்மன் உருவச் சிலையில் பொருந்தியிருப்பதாக வடிவமைக்கப்படுகிறது. அதனைத் தமது அரண்மனையில் வைக்கிறார்.

அன்று முதல் அந்த விண்கல் எடுக்கப்பட்ட பகுதி ‘சோதிக்காவு’ ஆகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் எடக்கல் அரசரின் உறவினர் ஒருவரை வணிகர் புலிமடம் மம்மத் (கபீர் துஹான் சிங்) சிறைபிடிக்கிறார். அவரை விடுவிக்க வேண்டுமானால், பெரும் நிலத்தைத் தனக்கு ஆளத் தர வேண்டும் என்கிறார். அதனைச் செய்யாமல் ஆங்கிலேயரின் துணையை நாடலாம் என்கின்றனர் அரசரின் ஆலோசகர்கள்.

அப்போது, சோதிக்காவைச் சேர்ந்த குஞ்சிக்கேலு எனும் களரி வீரனை அழைக்கலாம் என்கிறார் ஒரு நபர். அதனைச் செய்ய முடிவெடுக்கிறார் அரசர்.

மம்மத்தை வென்று அரசரின் உறவினரை அழைத்து வருகிறார் குஞ்சிக்கேலு. ‘பதிலுக்கு என்ன வேண்டும் கேள்’ என்று அரசர் கேட்க, அவரோ ‘சோதிக்காவில் இருந்து எடுக்கப்பட்ட விண்கல்லில் செய்யப்பட்ட விளக்கு வேண்டும்’ என்கிறார். அதனைக் கேட்டுத் திகைத்து நிற்கும் அரசர், ‘சரி’ என்கிறார்.

குஞ்சிக்கேலு கொண்டு வந்த விளக்கு, சோதிக்காவு ஊரின் நடுவே வைக்க முடிவு செய்யப்படுகிறது. அது வைக்கப்படும் இடத்திற்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் சென்று வணங்க வேண்டுமென்று அவர் விருப்பப்படுகிறார்.

ஆனால், அந்த நேரத்தில் குஞ்சிக்கேலுவின் காதலி சோதிக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்) அம்மை நோய் தொற்றுகிறது. அவரைத் தனியே அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கும் குஞ்சிகேலுவையும் அது தொற்றுகிறது.

அந்த இடைவெளியில், கோயிலில் அந்த விளக்கு நிறுவப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு அங்கு அனுமதியில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அந்தச் செய்தி குஞ்சிக்கேலுவை வாட்டுகிறது. அந்த நிலையில், அரசரின் உறவினர் ஒரு ரகசியவோலை அனுப்புகிறார். அதில் இருக்கும் தகவல், அவரை நிலைகுலையச் செய்கிறது.

1950களில் சோதிக்காவு வட்டாரத்தையே உலுக்குகிற கொள்ளையனாக இருக்கிறார் மணியன். அவர், குஞ்சிக்கேலுவின் வம்சாவளியில் வந்தவர். கோயிலில் இருக்கும் விளக்கை அவர் திருடியதாகவும் ஊராரால் விரட்டப்பட்டபோது அருவியில் இருந்து குதித்து மரணமடைந்ததாகவும் கதைகள் சொல்லப்படுகின்றன.

தொண்ணூறுகளில் குஞ்சிக்கேலு, மணியன் கதைகளைத் தனது பாட்டியிடம் கேட்டு வளர்கிறார் லட்சுமி (கீர்த்தி ஷெட்டி). அவர், ஊர் தலைவர் போன்றிருக்கும் பரமு நம்பியாரின் மகள். மணியனின் பேரனான அஜயனோடு அவருக்குப் பரிச்சயம் உண்டு.

மணியனின் மகள் (ரோகிணி) வயிற்றுப் பேரனான அஜயனுக்குப் பாட்டி என்றால் உயிர். பாட்டி மாணிக்கம் (சுரபி லட்சுமி) அவருக்குத் தாத்தாவின் திருட்டுகள் பற்றியும் சோதிக்காவு மக்கள் பற்றியும் பல கதைகள் சொல்கிறார்.

ஆனால், தந்தையின் அவப்பெயர் தனது மகனையும் தொற்றுவதை அஜயனின் தாய் விரும்பவில்லை.

சில ஆண்டுகள் கழித்து அஜயன் (டொவினோ தாமஸ்) இளைஞராக வளர்கிறார். அப்போது, லட்சுமிக்கும் அவருக்கும் இடையே காதல் முளைக்கிறது.

சிறு வயதில் தான் வளர்க்கும் காக்கையைக் கொண்டு முதன்முறையாகத் திருடும் அஜயன், தாயிடம் ’மீண்டும் திருட்டில் ஈடுபட மாட்டேன்’ என்று சத்தியம் செய்கிறார். ஆனால், ஊராரோ எப்போதும் அவரை ‘திருடனின் பேரன்’ என்றே விளிக்கின்றனர். அது மட்டுமல்லாமல், ஊரில் எது திருடு போனாலும் அஜயனையே குற்றம் சொல்கின்றனர்.

இந்த நிலையில், சோதிக்காவில் சில வீடுகளில் திருடு நடக்கிறது. மணியன் பாணியில் மணிச்சத்தத்தோடு அந்த திருடன் வந்ததாகச் சொல்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

ஒருமுறை பரமுவின் மகள் லட்சுமியை ரகசியமாகச் சந்திக்கச் செல்கிறார் அஜயன். அப்போது, அந்த திருடன் அந்த வீட்டுக்குள் நுழைகிறார். அதனைப் பார்க்கும் ஒருவர் ‘திருடன் திருடன்..’ என்று கத்துகிறார்.

அஜயன் பதறியடித்துக்கொண்டு ஓட, இன்னொரு புறம் திருடனைத் துரத்திச் செல்கின்றனர் பரமுவின் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் சிலர். அவர்களில் ஒருவர் சுதேவ் (ஹரீஷ் உத்தமன்). அந்த திருடனைப் பிடித்து மிரட்டி, தான் சொல்லும் இடத்திற்கு அஜயனை அழைத்து வருமாறு அவர் சொல்கிறார். அதன்படியே அந்த திருடனும் செய்கிறார். அஜயனும் அவர்கள் திட்டமிட்ட இடத்திற்குச் செல்கிறார்.

அந்த திருடன், அஜயனின் நண்பன் சுரேஷ் (பசில் ஜோசப்). அந்த இடம், ஊரின் நடுவேயுள்ள கோயில்.

கோயிலில் திருடு போனதாக அறிந்து, அதன் கூரை மீது ஏறுகிறார் அஜயன். அதனை சுதேவ் உடன் இருப்பவர்கள் வீடியோ கேமிராவில் படம்பிடிக்கின்றனர்.

’ஊராரிடம் அதனைக் காட்டி, உன்னைத் திருடன் என்று சொல்லிவிடலாமா’ என்று கேட்கிறார் சுதேவ். அதனைக் கேட்டு திகைக்கிறார் அஜயன்.
கோயிலில் இருப்பது உண்மையான விளக்கு அல்ல என்றும், விளக்கைத் திருடிய மணியனுக்குத்தான் அந்த உண்மை தெரியும் என்றும் சொல்கிறார். ’மணியனின் பேரனான நீ அந்த விளக்கைக் கண்டுபிடித்துக் கொடுக்காவிட்டால், வீடியோவை ஊர் மக்களிடம் காட்டுவேன்’ என்று மிரட்டுகிறார்.

கோயில் திருவிழாவின் பத்தாம் நாளன்று அந்த சிலை ஊர் மக்கள் பார்வைக்குத் திறந்துவைக்கப்படும் என்பதால், பத்து நாட்களுக்குள் உண்மையான சிலை தனக்கு வேண்டும் என்கிறார் சுதேவ்.

அதற்கடுத்த நாள் திருவிழா தொடங்கும் நிலையில், அவரது பேச்சு அஜயனை உலுக்குகிறது.

அஜயன் தனது தாத்தா திருடிய உண்மையான விளக்கைக் கண்டுபிடித்தாரா? அதனை சுதேவிடம் கொடுத்தாரா? தாயின் மன வருத்தத்தைப் போக்கும் வகையில் குடும்பத்தைத் தொடரும் அவப்பெயரைக் களைந்தாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

‘அஜயனின் இரண்டாம் திருட்டு’ என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில், ‘அஜயண்ட ரெண்டாம் மோஷணம்’ என்பதன் சுருக்கமாகவே ‘ஏஆர்எம்’ டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கதையில் குஞ்சிக்கேலு பாத்திரம் தொடக்கத்தில் காட்டப்பட, பின்னர் வரும் திரைக்கதையில் மணியன், அஜயன் பாத்திரங்கள் அடுத்தடுத்து காண்பிக்கப்படுகின்றன. அதனைக் குழப்பமில்லாமல் சொல்லியிருப்பது அழகு. அதேநேரத்தில், இப்படத்தில் சில குறைகளும் கண்களுக்குப் புலப்படுகின்றன.

டொவினோவின் ‘ஹீரோயிசம்’!

குஞ்சிக்கேலு ஆக டொவினோ தாமஸ் வரும் தொடக்க காட்சியே, இப்படத்தில் அவரது ஹீரோயிசம் தூக்கலாக இருக்கும் என்பதைச் சொல்லிவிடுகிறது. அதற்கேற்ப படம் முழுக்க அவர் வருகிறார். அதேநேரத்தில், கமர்ஷியல் படத்திற்குத் தேவையான நடிப்பையும் சிறப்பாக வழங்கியிருக்கிறார்.

நாயகியான கீர்த்தி ஷெட்டிக்கு இதில் ஆறேழு காட்சிகள் உண்டு. அதில், அவர் அழகுப்பதுமையாக வந்து போயிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இரண்டு காட்சிகளே தரப்பட்டுள்ளன. அதில் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். சுரபி லட்சுமியும் ரோகிணியும் ஆங்காங்கே வந்து திரைக்கதைக்கு உரமூட்டியிருக்கின்றனர்.

இப்படத்தில் பசில் ஜோசப் முக்கியமானதொரு பாத்திரத்தில் வருகிறார். ஆனாலும், துணை பாத்திரமாக மட்டுமே அவருக்குத் திரைக்கதையில் இடம் தரப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டராக வரும் அஜு வர்கீஸுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

இவர்கள் தவிர்த்து ஜகதீஷ், பிரமோத் ஷெட்டி, மதுபால், சஞ்சு சிவராம், சந்தோஷ் கீழாட்டூர், சுதீஷ் என்று பலர் இதிலுண்டு.

வில்லனாக வரும் ஹரீஷ் உத்தமன் பாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அவருக்குத் திரையில் போதிய இடம் தரப்படவில்லை.
குறைந்த பட்ஜெட்டில் (30 கோடி ரூபாய்?!) தயாரிக்கப்பட்டிருந்தாலும், நல்லதொரு ‘பான் இந்தியா’ படமாக சந்தைப்படுத்தும் அளவுக்கு இதில் காட்சியாக்கம் உள்ளது. ஜோமோன் டி ஜானின் ஒளிப்பதிவு அதனைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது.

விஎஃப்எக்ஸுக்கு இடமளித்து சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ‘லாங் ஷாட்’கள் மட்டும் கொஞ்சம் எரிச்சலைத் தருகின்றன. முழுக்க கிராபிக்ஸில் அமைந்த இடங்களும் அதையே வழிமொழிந்திருக்கின்றன. அதேநேரத்தில், காட்சிகளின் தன்மைக்குகும் களங்களுக்கும் ஏற்ப ‘டிஐ’ அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

கோகுல்தாஸின் தயாரிப்பு வடிவமைப்பு, வெவ்வேறு காலகட்டத்தில் நிகழ்வதாகச் சொல்லப்படும் திரைக்கதைக்கு நம்பகத்தன்மை ஊட்டுகிறது. குறிப்பாக, தொண்ணூறுகளில் நிகழ்வதாகவே இக்கதை நிகழும் காலத்தை வடிவமைப்பதற்கு ஏற்பத் திரையில் ஒரு உலகைக் காட்ட உதவியிருக்கிறது அவரது குழு.

ஷமீர் முகம்மதுவின் படத்தொகுப்பில் கதை சீராக நகர்கிறது. அதுவே பெரிதாகக் குழப்பமின்றி திரையை நோக்க வகை செய்கிறது.
திபு நிணன் தாமஸ் இசையில் பாடல்கள் கதையோட்டத்தோடு இணைந்திருக்கின்றன. கேரள கிராமப்புற மரபைப் பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் இருக்கின்றன.

பின்னணி இசை வழக்கமான கமர்ஷியல் படங்கள் போன்று, திரைக்கதையைத் தாங்கிப் பிடிக்கும் வேலையைச் செய்திருக்கிறது.

இப்படத்தின் சண்டைக்காட்சிகளில் அதிக வன்முறை தென்படாதது ஆறுதல். ‘பான் இந்தியா’ படமாக வெளியிட முடிவு செய்தபோதும், அதனைத் திட்டமிட்டுச் செயல்படுத்தியிருப்பது அருமை.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை சுஜித் நம்பியார் எழுதியிருக்கிறார். ஜிதின் லால் இதனை இயக்கியிருக்கிறார். இவர்களது கூட்டணி, திரையில் மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

ஓணம் பண்டிகையையொட்டி வெளிவந்திருக்கும் இப்படம், ரசிகர்களை தியேட்டர்களில் உற்சாகம் கொள்ளச் செய்வதாக உள்ளது. அது இப்படத்தின் யுஎஸ்பி ஆகவும் உள்ளது.

முழுமையான திருப்தி இல்லை!

’ஏஆர்எம்’ படத்தில் டொவினோ மூன்று வேடங்களில் வந்து போயிருக்கிறார். இதில் குஞ்சிக்கேலு பாத்திரத்திற்குச் சம முக்கியத்துவம் தரப்படவில்லை.

மணியன் பாத்திரத்தின் வாழ்வு திரைக்கதையில் ஆங்காங்கே சொல்லப்பட்டிருப்பது திருப்பங்களுக்கு வழி வகுத்திருக்கிறது.

இந்தக் கதையில் கீர்த்தி ஷெட்டி, அஜு வர்கீஸ், பசில் ஜோசப் உட்பட சில கலைஞர்களுக்கு இன்னும் கொஞ்சம் இடம் தரப்பட்டிருந்தால், திரைக்கதை ஒரு திருப்திகரமான காட்சியனுபவத்தைத் தந்திருக்கும். நேர அளவைக் கருத்தில் கொண்டு அது தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

பிற பாத்திரங்களின் மனப்பாங்கை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் பெரிதாக இல்லை. குறிப்பாக, ஹரீஷ் உத்தமனுக்குக் காட்சிகள் கொடுக்கப்பட்டிருந்தால், வில்லனின் இருப்பு வலுவாக அமைந்திருக்கும். அது குறைவென்பதால், ஹீரோவின் ‘ஒன்மேன் ஷோ’வாகவே இப்படம் உள்ளது.

சுஜித் நம்பியார், ஜிதின் லால் அக்குறைகளை மனதில் கொள்ளாமல், நிறைகள் மட்டுமே ‘கமர்ஷியல் வெற்றி’க்குப் போதும் என்று நினைத்திருக்கின்றனர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலரைக் கோயிலுக்குள் அனுமதிக்காததில் தொடங்கி, அவர்களது பிரவேசத்தை ஆர்ப்பாட்டமாகச் சொல்கிறது இப்படம். முழுக்கதையும் அதனைச் சுற்றியே வலம் வருகிறது.

இப்படத்தின் தொடக்கத்தில், பிரபஞ்ச வெளியின் குரலாக மோகன்லால் பேசும் வசனங்கள் ஒலிக்கின்றன. தமிழில் இதனை விக்ரம் பேசியிருக்கிறார். அது இக்கதைக்கு ஒரு உருவம் தருகிறது என்றபோதும், அதில் சமூக நீதிக் கருத்துகளும் இடம்பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதனால், வெறுமனே கொண்டாட்டத்தை நிகழ்த்துகிற ஒரு படமாக மட்டும் ‘ஏஆர்எம்’மை கருத முடியாது. இக்கதையின் அடிநாதத்தை ஏற்காதவர்களால், இப்படத்தின் மீது வெறுப்பு கொட்டப்படவும் வாய்ப்புள்ளது.

தொடக்கத்தில் சொன்னது போன்று, இப்படத்தை இன்னொரு மின்னல் முரளியாகக் கருதுவது கடினம். ஆனால், அதே போன்று ‘ஏஆர்எம்’மும் கிராமத்துப் பின்னணியில் ஒரு ‘சாகச’ படத்தைக் காட்ட முடியும் என்று காட்டியிருக்கிறது.

அந்த வகையில், இது ‘பான் இந்தியா’ வெளியீடாகவும் பெரியதொரு கவனிப்பைப் பெறும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“அன்னபூர்ணா உரிமையாளரிடம் ஆணவத்தில் பதிலளித்த நிர்மலா சீதாராமன்”: ராகுல், கார்கே கண்டனம்!

“டோன்ட் கிவ் மி  தட்”… இளைஞரிடம் ஆவேசமடைந்த நிர்மலா சீதாராமன்

உலகின் மிக அழகான பாடி பில்டர்… 36 வயதில் வந்த அட்டாக்… இப்படி உயிர் போச்சே!

அன்னபூர்ணா உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தோமா? – வானதி சீனிவாசன் பேட்டி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *