2023ம் ஆண்டு சினிமாவிற்கு ஒரு பொன்னான ஆண்டாகவே அமைந்துள்ளது. ஹாலிவுட் துவங்கி பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை, திரைப்படங்கள் வசூலை அள்ளிக்குவித்துள்ளது. குறிப்பாக, தமிழ் சினிமாவில் 2 படங்கள் இந்த ஆண்டு ரூ.600 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு கோலிவுட்டில் அதிகம் வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் இதோ!
1. லியோ
தளபதி விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் என பல நட்சத்திரங்கள் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ‘LCU இருக்கா? இல்லையா?’ என்ற மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘லியோ’, உலகம் முழுவதும் ரூ.618.5 கோடி வசூல் செய்து, அதிக வசூலை குவித்த தமிழ் திரைப்படங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.
2. ஜெயிலர்
சூப்பர்-ஸ்டார் ரஜினிகாந்த் உடன், மோகன் லால், சிவராஜ் குமார் என மலையாளம் மற்றும் கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில், ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு பின் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு ஒரு கம்-பேக் திரைப்படமாக அமைந்த ‘ஜெயிலர்’ ரூ.605.8 கோடி வசூல் செய்துள்ளது.
3. பொன்னியின் செல்வன் – 2
இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கொண்ட திரைப்படமாக வெளியான ‘பொன்னியின் செல்வன் – 2’, ரூ.344 கோடி வசூலை பெற்றுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, சோபிதா, பிரகாஷ் ராஜ், லால் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர்.
4. வாரிசு
தளபதி விஜய் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் முழுக்க முழுக்க ஒரு பேமிலி என்டர்டெய்னராக வெளியான வாரிசு திரைப்படம், ரூ.303 கோடி வசூல் செய்து இப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இப்படத்தில், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5. துணிவு
இந்த பட்டியலின் 5வது இடத்தில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘துணிவு’ இடம்பெற்றுள்ளது. மஞ்சு வாரியார், ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம், உலகம் முழுவதும் ரூ.200.4 கோடி வசூலை பெற்றுள்ளது.
6. வாத்தி
நடிகர் தனுஷ், சம்யுக்தா மேனன் ஆகியோர் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான ‘வாத்தி’ (SIR) திரைப்படம், ரூ.118.2 கோடி வசூலுடன் இப்பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது.
7. மார்க் ஆண்டனி
விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில், எதிர்பார்ப்புகளை தகர்த்து விஷாலுக்கு ரூ.100 கோடி வசூலை தந்த முதல் படமான ‘மார்க் ஆண்டனி’, இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இப்படம், மொத்தமாக ரூ.104.1 கோடி வசூலை பெற்றுள்ளது.
8. மாவீரன்
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் ஆகியோர் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் தயாராகி, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற ‘மாவீரன்’ திரைப்படம், ரூ.81.1 கோடி வசூலை பெற்றுள்ளது.
9. மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மானின் அற்புதமான இசையில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம், இப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்த படம் ரூ.72 கோடி வசூல் செய்துள்ளது.
10. ஜிகர்தண்டா டபிள் X
கார்த்திக் சுப்புராஜின் மாறுபட்ட இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியாகி, ரசிகர்களிடம் மிகுந்த பாராட்டை பெற்ற ‘ஜிகர்தண்டா டபிள் X’ திரைப்படம் ரூ.67.2 கோடி வசூலை பெற்று இப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.
சந்திரமுகி – 2, விடுதலை – 1 மற்றும் போர் தொழில் ஆகிய படங்கள், இப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: IMDb
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…