நடிகர் விஜய்யை கைது செய்ய கோரி இன்று (ஜூலை 6) டிஜிபி சங்கர் ஜிவாலிடம் நேரடி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘நா ரெடி’ வெளியானது.
இப்பாடல் வெளியான நாள் முதலே சிறந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாடல் வரிகளுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இந்நிலையில் தற்போது லியோ பட பாடலுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியாவும் இன்று டி.ஜி.பி அலுவலகத்திற்கு சென்று நேரடியாக புகார் மனு அளித்துள்ளார்.
அதில், “நா ரெடி” பாடல் வெளியான நிலையில் அதில் இடம்பெற்ற பாடல் வரிகள் குறித்து நான் தனியார் இணையதள சேனலில் பேட்டி அளித்திருந்தேன்.
விஜய்க்கு சமூக சிந்தனை இல்லை
அந்தப் பேட்டியில் புகை மற்றும் மது குறித்த வரிகளைப் பற்றி “பாட்டிலில் பத்தாது நான் குடிக்க அண்டாவில் கொண்டு வா சியர்ஸ் அடிக்க”
“பத்த வச்சு புகைய இழுத்தா பவர் கிக்கு” “விரலுக்கு இடையில் தீபந்தம் நான் ஏத்தட்டா”“மில்லி உள்ள போனா கில்லி வெளியே வருவாண்டா” போன்ற வரிகளை எழுதிய அசல் கோளாறு மற்றும் பாடலை பாடிய நடிகர் விஜய்க்கு சமூகத்தைப் பற்றிய சிந்தனை இல்லை என்பதனை குறிப்பிட்டு இருந்தேன்.
மேலும் இந்தப் பாடலை பார்த்து ஒரு இளைஞனோ அல்லது ஒரு மாணவனோ பாதிக்கப்பட்டால் அதற்கு நடிகர் விஜய் அவர்களோ அல்லது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களோ பொறுப்பு ஏற்பார்களா? என்று கேள்வி கேட்டிருந்தேன். அந்த வீடியோ 70 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றது.
அதன் பின்னர் தான் விஜய் ரசிகர்கள் அவர்களது அசிங்கமான நடவடிக்கைகளை ஆரம்பித்தார்கள். இணையதளம் முழுவதும் மீம்ஸ்கள், கேளிகள், கிண்டல்கள், ஆபாச பேச்சு, சித்திகரிக்கப்பட்ட ஆபாச விடியோக்கள் மற்றும் பல அலைபேசி அழைப்புகள் தவறான குறுஞ்செய்திகள் என்று தொடர்ந்து பல்வேறு ஆபாச தரக்குறைவான பெண்களை மிக மோசமாக இழிவுபடுத்தும் வகையிலான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு கேவலமான சமூகத்தில் வாழ்கிறோம் என்பது எனக்கு அவமானமாக உள்ளது.
ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கே…
பெண்கள் அரசியல் களத்தில் தனது பங்களிப்பினை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக எனது வெளிநாட்டு வாழ்க்கையை துறந்து தாய் நாட்டிற்கு
திரும்பியவள் நான். சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் நான் பல போராட்டங்கள் செய்தேன்.
வருங்கால தலைமுறையினர் மீது உள்ள அதீத அக்கறையின் அடிப்படையிலேயே லியோ பட பாடலில் இடம்பெற்றுள்ள சமூகத்தை சீரழிக்க கூடிய வரிகளுக்கு எதிர்ப்பு
தெரிவித்தேன்.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராக செயல்பட்டு வரும் எனக்கே இவ்வளவு ஆபாச அச்சுறுத்தல்கள் என்றால் ஒரு சாமானிய பெண் தனது கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் திரைப்பட நட்சத்திரங்களுக்கு எதிராக குரல் எழுப்பினால் எந்த நிலைக்கு தள்ளப்படுவாள் என்பதனை நினைத்தே பார்க்க முடியவில்லை.
விஜய் உத்தரவின் பேரில் அச்சுறுத்தல்
மேலும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரிலேயே இவ்வாறான அச்சுறுத்தல்கள் வருகின்றன. ஏனென்றால் இவ்வாறான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் இணையதள கணக்குகள் அனைத்தும் பெரும்பாலும் விவரம் இல்லாத டிவிட்டர் கணக்குகளாகவே உள்ளன.
அவ்வாறு இயங்கும் கணக்குகள் நடிகர் விஜய் அவர்களை டேக் செய்தே ஆபாசமான பதிவுகளை இடுகின்றனர். எனவே நடிகர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரிலேயே இது போன்ற பதிவுகள் பதிவிடப்படுகின்றது என்பதனை டேக் செய்வதன் மூலம் உணர முடிகிறது. இவ்வாறு தன்னுடைய பண பலத்தை பயன்படுத்தி சமூகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்களை முடக்கும் வண்ணம் ஆபாச அச்சுறுத்தல்களால் மிரட்டி வரும் நடிகர் விஜய் அவர்களை உடனடியாக கைது செய்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புகார் மனு அளித்து விட்ட வந்த ராஜேஸ்வரி பிரியாவிடம், ”நடிகர் விஜய் தான் அவரது ரசிகர்களுக்கு காசு கொடுத்து பதிவு போட வைத்ததற்கான ஆதாரம் உள்ளதா? விஜய் குறித்து புகார் அளித்து விளம்பரம் தேடி கொள்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினர்.
அதற்கு ராஜேஸ்வரி பிரியா, அதனை போலீசார் தான் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என கூறி அங்கிருந்து ராஜேஸ்வரி பிரியா அவசர அவசரமாக புறப்பட்டு சென்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அமைச்சர் ரகுபதிக்கு ஆளுநர் பதில்!
விண்ணில் பாயும் சந்திராயன் – 3: தேதியை அறிவித்த இஸ்ரோ