திருச்சிற்றம்பலம் வெற்றி: சம்பளத்தை உயர்த்தும் தனுஷ் – தயாரிப்பாளர்கள் அதிருப்தி!

சினிமா

யாரடி நீ மோகினி,உத்தம புத்திரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் மீண்டும் தனுஷுடன் இணைந்த திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.

நித்யாமேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஆகஸ்ட் 12 அன்று கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் உருவான விருமன் வெளியானது. இந்தப் படத்திற்கான புரமோஷன் பெரிய அளவில் நடைபெற்றது.

விருமன் வசூலை குவித்துக்கொண்டிருந்த நிலையில் ஆகஸ்ட் 18 அன்று உலகளவில் 600 திரையரங்குகளில் திருசிற்றம்பலம் வெளியானது. தொடக்க காட்சி முதல் இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. இதனால் படம் வெளியான முதல் நாள் சுமார் 10 கோடி மொத்த வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது. இதனால் முதல் நாளை காட்டிலும் இரண்டாவது நாள் வசூல் அதிகரித்தது. தனுஷ் திரையுலக வாழ்க்கையில் குறுகிய நாட்களில் ஐம்பது கோடி மொத்த வசூல் செய்த முதல் படமாக திருச்சிற்றம்பலம் இடம் பிடித்தது.

ஆகஸ்ட் 31 அன்று விக்ரம் நடித்த கோப்ரா, ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என இரண்டு படங்கள் மூன்றாவது வாரத்தின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியானது. அன்றைய தினம் காலைக்காட்சிக்கு மட்டும் வசூல் குறைந்த திருச்சிற்றம்பலம் அடுத்தடுத்த காட்சிகளில் வசூல் அதிகரித்தது. இருவாரங்களில் 100 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்து இருக்கும் திருச்சிற்றம்பலம் கதாநாயகன் தனுஷிடம் கால்ஷீட் கேட்க வழக்கம்போல் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்க தொடங்கியுள்ளனர்.

கோடம்பாக்கத்தில் ஏற்கனவே நடித்த படங்கள் தோல்வி அடைந்திருந்தாலும் ஒரு படம் அதிரிபுதிரியாக ஓடிவிட்டால் கதாநாயகன் தனது தகுதிக்கு மீறி சம்பளம் கேட்பது வாடிக்கையாகிவிட்டது. இந்தியில் அட்ராங்கி, தமிழில் மாறன், ஜகமே தந்திரம் இந்த மூன்று படங்களும் ஓடிடியில் வெளியானது. மிக மோசமான விமர்சனங்களோடு பார்வையாளர்களால் ஓரங்கட்டப்பட்ட படங்களாகி போனது. ”

திருச்சிற்றம்பலம்” படத்தின் வெற்றி தனுஷ் என்கிற கதாநாயகனின் தனிப்பட்ட வெற்றியல்ல என விமர்சகர்கள் கூறினாலும்” கதாநாயகன்” பிம்பத்தை வைத்தே படத்தின் விலையும், தரமும் தீர்மானிக்கப்படுகிறது சினிமா வியாபாரத்தில்.

ஒரு படத்தில் நடிக்க 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் தனுஷ் புதிய படங்களில் நடிக்கவும், ஏற்கனவே நடிக்க ஒப்பந்தமாகி படப்பிடிப்பு தொடங்காமல் இருக்கும் படத்திற்கு குறைந்தபட்சம் 30 கோடி ரூபாய் முதல் 40 கோடி ரூபாய் சம்பளம் கேட்க தொடங்கியுள்ளார், திருச்சிற்றம்பலம் வசூல் கொடுத்த அதிர்ச்சியை காட்டிலும் இது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனுஷ் 30 கோடி சம்பளம் கேட்பது சம்பந்தமாக தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களிடம் கேட்டபோது, “நல்லா கேட்கட்டும் 30 கோடி என்ன ரஜினிகாந்த் போன்று 100 கோடி ரூபாய் கேட்க வேண்டியது தானே.

இங்கு நடிகர்களுக்கு தங்களின் உண்மையான வணிக மதிப்பும், வசூல் நிலவரமும் தெரிவதில்லை. அதனால் ஒரு படம் ஓடியவுடன் 100% சம்பள உயர்வு கேட்க தொடங்கிவிடுகின்றனர். தனுஷ் தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்தவர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தை தயாரித்து நஷ்டம் அடைந்தவர்கள்,நிலவரம் புரியாமல் 100% சம்பள உயர்வு கேட்பதுதான் எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது” என்கின்றனர்.

“திருச்சிற்றம்பலம் குறுகிய நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் முதலீடு செய்த தயாரிப்பாளருக்கு கிடைக்ககூடிய வருவாய் 50 கோடி ரூபாய் மட்டுமே என்பது இங்கு தெரிவதில்லை. திருச்சிற்றம்பலம் படத்தின் பட்ஜெட் 50 கோடி ரூபாய் வெளியீட்டு செலவு, மூலதனத்திற்கான வட்டி என 70 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு கிடைத்த பின்னரே லாபத்தை பற்றி யோசிக்க முடியும், இந்தப் படத்தின் பிற உரிமைகளை விற்பனை செய்வதன் மூலமாக கிடைக்கும் வருவாயை வைத்தே லாபத்தை மதிப்பிட முடியும்.

ஒரு படம் ஓடிவிட்டால் அடுத்த படத்தின் வசூல் அதிகரித்துவிடாது என்பதை கதாநாயக நடிகர்கள் புரிந்துகொண்டால் இப்படி அதிரடியாக சம்பளத்தை உயர்த்தி அடம் பிடிக்க மாட்டார்கள் என்கின்றனர்” தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில்.

இராமானுஜம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0