காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 ஆகிய படங்களுக்குப் பிறகு அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் டைகர் நாகேஸ்வர ராவ்.
தெலுங்கு திரையுலகில் ‘மாஸ் மகாராஜா’ என்று அழைக்கப்படும் ரவி தேஜா நடித்துள்ள இப்படத்தில் காயத்ரி பரத்வாஜ், நூபுர் சனோன் என இரண்டு கதாநாயகிகளுடன் ரேணு தேசாய், அனுபம் கெர், நாசர், ஜிஷீ சென்குப்தா, ஹரீஷ் பெராடி ஆகியோர் நடித்துள்ளனர்.
கிட்டு உன்னடு ஜகர்தா, ஜக்கண்ணா போன்ற தெலுங்கு படங்களை இயக்கிய இயக்குனர் வம்சி, டைகர் நாகேஸ்வர ராவ் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசரும் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது படக் குழு.
யார் இந்த டைகர் நாகேஸ்வர ராவ்?
இந்தியா வரலாற்றில் 1970-களில் பெரும் திருடனாக பதிவு செய்யப்பட்டுள்ளவர்களில் ஸ்டூவர்ட் புரம் டைகர் நாகேஸ்வர ராவ். பெரும் அதிகாரப் பசி, பெண்களின் மீது பேராசை, பண ஆசை. ஒருவரைத் தாக்கும் முன் அல்லது எதையாவது கொள்ளையடிக்கும் முன் எச்சரிக்கை கொடுக்கும் குணாம்சம் கொண்டவராக வரலாற்றில் அறியப்படுகிறார் நாகேஸ்வரராவ்.
அவரது உண்மை கதையை பின்புலமாக கொண்டு இந்த ஆண்டில் தெலுங்கில் தயாரிக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திரைப்படம் டைகர் நாகேஸ்வர ராவ். இப்படத்தின் விளம்பர நிகழ்வும், டிரெய்லர் வெளியீட்டு விழாவும் மும்பையில் நடைபெற்றது.
இந்தியாவின் மிகப்பெரிய திருடனான டைகர் நாகேஸ்வர ராவுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை கதைக்களமாக கொண்டு பக்கா ஆக்சன் என்டர்டைனராக உருவாகியுள்ளது ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ்.
டிரெய்லர் எப்படி இருக்கு?
களவுத் தொழிலுக்கு தைரியம் மட்டும் போதாது கொஞ்சம் புத்திசாலித்தனமும் தேவை என்று நாசர் பேசும் வசனத்துடன் தொடங்குகிறது டிரெய்லர். அப்படியான துணிச்சலும், புத்திசாலித்தனமும் கொண்ட திருடனாக வருகிறார் ரவிதேஜா. இந்தியாவின் மிகப் பெரிய திருடன் என்ற அடைமொழி படத்தின் தலைப்புக்கு கீழேயே கொடுக்கப்பட்டுள்ளது.
ரவி தேஜா என்றாலே மாஸ் ஆக்சன் தான், அதற்கு ஏற்றவாறு ஆக்சன் காட்சிகளில் எந்தக் குறையும் இல்லை என்பது டிரெய்லரைப் பார்க்கும்போதே தெரிகிறது.
சமீபகால கேங்ஸ்டர் படங்களில் எழுதப்படாத விதியாக தவறாமல் இடம்பெறும் ‘கேஜிஎஃப்’ பாணி ஒளிப்பதிவு, புழுதி பறக்கும் ஸ்லோமோஷன் காட்சிகள், சைடு கேரக்டர்கள் இழுத்து இழுத்துப் பேசும் வசனங்களும் இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. டீசரில் படு சுமாராக இருந்த கிராபிக்ஸ் இதிலும் அப்படியே இருக்கிறது. எந்த மாற்றமும் இல்லை.
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை ஈர்க்கிறது. சரியான திரைக்கதையும், விறுவிறுப்பான காட்சியமைப்பும் படத்தில் இருந்தால் மிகச்சிறந்த பொழுதுபோக்கு படமாக பார்வையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் டைகர் நாகேஷ்வரராவ்.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 20 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…