துணிவு படத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வசனம் இடம்பெற்றிருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று (ஜனவரி 11) உலகம் முழுவதும் வெளியானது.
ஹெச். வினோத் இயக்கத்தில் இதற்கு முன்பாக வெளியான வலிமை திரைப்படம் அஜித் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், துணிவு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
இன்று அதிகாலை 1 மணியளவில் துணிவு திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியானது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்று காலை படம் வெளியானதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குநர் வினோத் தனது படங்களில் சமூகம் சார்ந்த விஷயங்களை தொடர்ச்சியாக பேசி வருகிறார். குறிப்பாக அவரது முதல் படமான சதுரங்க வேட்டை திரைப்படத்தில், ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு போன்ற மக்களை ஏமாற்றும் நபர்களின் உத்திகளை தோலுரித்து காட்டியிருப்பார். மேலும் வர்க்க அரசியல் குறித்தும் பேசியிருப்பார்.
அதன்பிறகு வெளியான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட தீரன் அதிகாரம் படத்தில் பவாரியா கொள்ளை கூட்டத்தை தமிழகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் துணிச்சலாக பிடிப்பது குறித்தும், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் பெண்ணுரிமை குறித்தும் பேசியிருப்பார்.
சமீபத்தில் துணிவு திரைப்படத்திற்கான நேர்காணலில் தொகுப்பாளர், “தமிழகமா? தமிழ்நாடா?” என்று ஹெச்.வினோத்திடம் கேள்வி கேட்டபோது,” “தமிழ் நாடு” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், துணிவு திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் காட்சியில், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி, மத்திய அரசு அதிகாரி ஒருவரிடம், “ரவீந்தர் இது தமிழ் நாடு…உங்க வேலையை இங்க காட்டாதீங்க…” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வசனம் தமிழ் நாடு ஆளுநர் ஆர். என். ரவியை மறைமுகமாக விமர்சிப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். தமிழக ஆளுநர் முழு பெயர் ரவீந்திர நாராயண ரவி என்பதால் ரசிகர்கள் இந்த கருத்தை முன்வைக்கின்றனர்.
கடந்த ஜனவரி 9 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் வெளிநடப்பு செய்ததது அரசியல் அரங்கில் பெரும் விவாதப்பொருளாக மாறியது.
அவரது இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் துணிவு திரைப்படத்தில் ஆளுநருக்கு எதிரான வசனம் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
சட்டம், ஒழுங்கு பிரச்சினை: ஸ்டாலின் எடப்பாடி காரசார விவாதம்!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா வாரிசு? ட்விட்டர் விமர்சனம் இதோ!