தமிழ் சினிமாவில் வழக்கத்திற்கு மாறாக பல்வேறு படங்களின் வெளியீட்டு தேதி, படங்களின் பாடல்கள் வெளியீடு, படத்தின் போஸ்டர் வெளியீடு என நேற்றைய தினம் (ஜூலை 19) அறிவிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1. விடாமுயற்சி
அஜித் குமார் நடித்துவரும் ‘விடாமுயற்சி மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டனர். புதிய போஸ்டரை படக்குழு நேற்று (ஜூலை19) வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் அஜித் மற்றும் திரிஷா இடம் பெற்றுள்ளனர். அஜித் – திரிஷா காம்போ ரசிக்க வைக்கிறது. விடாமுயற்சி படப் பிடிப்பில் இயக்குநருக்கும் – திரிஷாவுக்கும் பிரச்சினை, தீபாவளிக்கு படம் வருமா என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அதற்கு பதில் கூறும் வகையில் விடாமுயற்சி போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
2. தங்கலான்
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது.
‘தங்கலான்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘மினிக்கி மினிக்கி’ பாடல் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘தங்கலான்’ எப்போது வெளியாகும் என கேட்கப்பட்டு வந்த நிலையில் ஆகஸ்ட் 15-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக பட குழுவினர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
3. அந்தகன்
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு உள்ளிட்டோர் நடித்த படம் ‘அந்தாதூன்’. 2018-ல் வெளியான இப்படம் அந்த ஆண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக மாறியது. ‘அந்தாதூன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் பிரசாந்தின் தந்தையும், நடிகரும் இயக்குநருமான தியாகராஜன். படத்தை அவரது ஸ்டார் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார்.
அவருடன் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட வருடங்களாக வெளியீட்டுக்கு காத்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை ஒருவழியாக படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4. ராயன்
நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ராயன்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் தனுஷ்டன், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் ஜூலை மாதம் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், புதிய போஸ்டர் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து, படத்தின் முதல் பாடலான ‘அடங்காத அசுரன்’ வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஓ ராயா’ பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு தனுஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஏ.ஆர் ரகுமானுடன் காவ்யா துரைசாமி ஆகியோர் இந்த பாடலை இணைந்து பாடியுள்ளனர்.
5. மெட்ராஸ் காரன்
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம். இவர் தற்போது ‘மெட்ராஸ்காரன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.
இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘மெட்ராஸ்காரன்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் வருகிற 24-ம் தேதி வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
6. சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் ‘கங்குவா’ படத்தின் முதல் பாடல்
சிறுத்தைசிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
3டி தொழில்நுட்பத்தில் சரித்திர படமாக உருவாகும் ‘கங்குவா’ திரைப்படம் 10 மொழிகளில் அக்டோபர் 10 ஆம் தேதிவெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் சூர்யா சூலை 23-ம் தேதி 49வது பிறந்தநாளைகொண்டாட உள்ளார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று படக்குழு நேற்று அறிவித்துள்ளது. அதன்படி ‘பயர் சாங்’ (Fire Song) என்ற பாடல் வருகிற 23-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. ஜமா படத்தின் பாடல் வெளியானது
‘கூழாங்கல்’ திரைப்படத்தை உருவாக்கிய லெர்ன் அண்ட் டெக் தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை, மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை திரைக்கதையாக்கி ‘ஜமா’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவருடன் அம்மு அபிராமி, சேத்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.
‘ஜமா’ என்ற தலைப்பு தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் ‘ஜமா’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ இருக்கும் ஒசரத்துக்கு’ என்ற பாடல் நேற்று காலை வெளியானது.
8. போட் படத்தில் தேவா பாடிய பாடல் வெளியீடு
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் சிம்பு தேவன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
இந்நிலையில், இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த படத்தின் ‘சொக்க நானும் நிக்கிறேன்’ எனும் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில் அடுத்ததாக இசையமைப்பாளர் தேவா பாடியுள்ள ‘தகிட ததிமி’ எனும் இரண்டாவது பாடல் நேற்று வெளியாகியது. கானா பாடல் பாடும் ஒருவர் கிளாசிக்கல் பாடுவது போல இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளதாக தேவா கூறியுள்ளார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குரூப் 2 தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க!
மைக்ரோசாப்ட் பிரச்சனை: 2-வது நாளாக சென்னையில் விமான சேவை பாதிப்பு!
தூத்துக்குடி: தனியார் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு… 21 பேருக்கு மூச்சுத்திணறல்!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு… ஷாக்கான ரஞ்சித்