பொங்கல் பண்டிகையையொட்டிய விடுமுறை நாட்களைக் குறிவைத்து படங்கள் வெளியான நிலையில், அதற்கடுத்த வாரமே திரைப்படங்கள் வெளியாவதில் சிறிது சுணக்கம் தென்படும். சில படங்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு அதற்கான தடையாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு அப்படிப்பட்ட வெற்றிகள் அமைந்ததா இல்லையா என்ற கேள்விக்குத் தமிழ் திரை வர்த்தக உலகம் தான் பதில் சொல்ல வேண்டும். அதே நேரத்தில், வரும் 24ஆம் தேதியன்று ஆறு படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருப்பதை அதற்கான பதிலாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆறு தமிழ் படங்கள்!

குட்நைட், லவ்வர் தந்த சூட்டோடு மணிகண்டன் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘குடும்பஸ்தன்’. நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் புகழ் ராஜேஷ்வர் காளிசாமி இதனை இயக்கியிருக்கிறார். சான்வே மேஹானா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன், பாலாஜி சக்திவேல், நக்கலைட்ஸ் தனம், ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன், நிவேதிதா ராஜப்பன் உட்படப் பலர் நடித்துள்ளனர். வைசாக் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், லொள்ளுசபா மாறன், ஆண்டனி, பாரி இளவழகன் உட்படப் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘பாட்டல் ராதா’. இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

யோகிபாபு, செந்தில், சரவணன், லிசி ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிப்பில், ஷங்கர் தயாள் இயக்கத்தில் வெளியாகிறது ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’. சாதகப்பறவைகள் சங்கர் இதற்கு இசையமைத்திருக்கிறார். இது முழுமையான நகைச்சுவைப் படமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

’ஜம்ப்கட்ஸ்’ யூடியூப் புகழ் ஹரி பாஸ்கர், லாஸ்லியா, இளவரசு, ஆர்ஜே ஷரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகிறது ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’. அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஓஷோ வெங்கட் இசையமைத்திருக்கிறார். ‘மெர்சல்’ படத்திற்குப் பிறகு ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் இது.

மர்டர் மிஸ்டரி த்ரில்லர் வகைமையில் அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது ’வல்லான்’ திரைப்படம். சுந்தர்.சி, தான்யா ஹோப், ஹெபா படேல், கமல் காமராஜ், அபிராமி வெங்கடாச்சலம், சாந்தினி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார்.
இது போக ‘பூர்விகம்’ என்றொரு படமும் வெளியாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வேற்று மொழிப் படங்கள்!
வரும் 23ஆம் தேதியன்று ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ மலையாளத் திரைப்படம் வெளியாகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் முதன்முறையாக இயக்கும் இம்மலையாளத் திரைப்படத்தை மம்முட்டி கம்பெனி தயாரித்திருக்கிறது. தர்புகா சிவா இதற்கு இசையமைத்திருக்கிறார். மம்முட்டி, கோகுல் சுரேச்கோபி, வினீத், ஷைன் டாம் சாக்கோ உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
அர்ஜுன் அசோகன் நடிக்கும் ‘அன்போடு கண்மணி’ வரும் 24ஆம் தேதியன்று வெளியாகிறது.
கன்னடத்தில் ராயல், ஃபாரஸ்ட், ருத்ர கருடபுராணா, ரைடு ஆகிய படங்கள் வெளியாகின்றன.
இந்தியில் அக்ஷய் குமார், சாரா அலிகான் நடிப்பில் சந்தீப் கெலானி இயக்கியுள்ள ‘ஸ்கை ஃபோர்ஸ்’ வரவிருக்கிறது. ’ராமாயணா: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ எனும் அனிமேஷன் திரைப்படம் இந்தி, தமிழ், ஆங்கிலம் மொழிகளில் வெளியாகிறது.

இது போக சம்மோ காம் – போ ஹங் நடிக்கும் ஹாங்காங் திரைப்படமான ‘டுவிலைட் ஆஃப் தி வாரியர்ஸ் வால்டு இன்’, தமிழில் ‘ஹாங்கார் வாரியர்ஸ்’ என்ற பெயரில் ஆக்ஷன் பட பிரியர்களை மகிழ்விக்கவிருக்கிறது.
இந்தப் படங்களில் வெற்றியைப் பெறுபவை எவை என்பதை எவராலும் கணிக்க முடியாது. ஆனால், எவையெல்லாம் கவனக்குவிப்பை உடனடியாகப் பெறும் என்பதை மேற்சொன்னவற்றில் இருந்து அறிந்து கொள்ள முடியும்!