கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (டிசம்பர் 14) காலை சிறையில் இருந்து வெளியே வந்தார்.
நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஸ்மிகா மந்தானா நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியானது.
இதன் சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு கடந்த 4ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுன் வந்தார்.
அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 39 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.
அவரது மகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிக்கப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தியேட்டர் உரிமையாளர் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து இவ்வழக்கில் அல்லு அர்ஜுன் பெயரும் சேர்க்கப்பட்டது. தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் கடந்த 11ஆம் தேதி அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணையில் இருந்த நிலையில் நேற்று (டிசம்பர் 13) அல்லு அர்ஜுன் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
அப்போது அவர் அணிந்திருந்த ஸ்வெட்ஷர்ட்டில், “புஷ்பானா பிளவர்னு நினைச்சியா பயர் டா” என்ற புஷ்பா 2 படத்தின் டயலாக் இடம்பெற்று இருந்தது.
போலீசார் தனது கணவரை கைது செய்ய வந்ததையடுத்து, கண்கலங்கி நின்ற தனது மனைவியை பார்த்த அல்லு அர்ஜுன், அவரது முகத்தில் முத்தமிட்டு ஆறுதல் கூறி பின்னர் போலீஸ் வாகனத்தில் ஏறி சென்றார்.
தொடர்ந்து அங்குள்ள காந்தி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அல்லு அர்ஜுன் பிற்பகல் 3.30 மணி அளவில் நாம்பள்ளி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்ட நிலையில் இதை எதிர்த்து அல்லு அர்ஜுன் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஹைதராபாத் நீதிமன்றம், நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
எனினும் நேற்று மாலை அல்லு அர்ஜுனால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.
ஜாமீன் ஆவணங்கள் தாமதமாக வந்ததால் நேற்று இரவை அவர் சிறையிலேயே கழித்தார்.
இந்நிலையில் இன்று(டிசம்பர் 14) காலை, அவரது தரப்பில் உத்தரவாத பத்திரமும், 50 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகையும் செலுத்தப்பட்ட பின்னர் சஞ்சல்குடா சிறையில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அல்லு அர்ஜூன் கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளாக எனது படங்களை பார்க்க சென்று வருகிறேன். ஆனால் இதுபோன்று ஒருமுறை கூட நடந்ததில்லை. நான் எப்போதும் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்பேன். மீண்டும் அப்பெண்ணின் மறைவுக்கு இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சம்பவம் முற்றிலும் எதிர்பாராத விதமாக தான் நடந்தது. எனக்காக நின்ற அனைவருக்கும் நன்றி ” என்று கூறினார்.
அல்லு அர்ஜூன் மீது போலீஸ் எடுத்த நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சந்தியா திரையரங்கில் நடந்த அசம்பாவிதம், அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் மோசமான ஏற்பாடுகளின் தெளிவான எடுத்துக்காட்டு. இப்போது, பழியை திசை திருப்ப, இதுபோன்ற விளம்பர ஸ்டண்ட்களில் ஈடுபடுகின்றனர்” என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசை விமர்சித்துள்ளார்.
“திரையுலகப் பிரமுகர்களைத் தொடர்ந்து தாக்குவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். அன்றைய தினம் ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு தண்டனை கொடுங்கள்” என்றும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
திருவண்ணாமலை தீப விழா : பக்தர்கள் கூட்டம் குறைவு – ஏன்?
டாப் 10 செய்திகள் : தலைமை செயலாளர்களின் தேசிய மாநாடு முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வரை!