தனுஷின் ‘பலம்’: தாமதமாய் உணர்ந்த சன் பிக்சர்ஸ்

Published On:

| By Aara

தமிழ் சினிமா திரைக்கலைஞர்கள் சன் தொலைக்காட்சியை எப்போதுமே புறக்கணிக்க மாட்டார்கள். தயாரிப்பாளர்களும் அப்படித்தான்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் சன் தொலைக்காட்சி சினிமாவில் ஆதிக்க மனநிலையுடன் செயல்பட்டு வருகிறது என்ற  குமுறல்கள்  ஒருபக்கம் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

சன் பிக்சர்ஸ் தொடங்கப்பட்டு, ’காதலில் விழுந்தேன்’ படத்தை தமிழகம் முழுவதும் நேரடியாக வெளியிட்டபோது தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களின் சிரமம் என்ன என்பதை நேரடியாக உணர்ந்தது அந்நிறுவனம்.

ஆனாலும்… ரஜினிகாந்த் நடிப்பில் “எந்திரன்” படத்தை தயாரித்தபோதும் அதன் தொடர்ச்சியாக படங்களை தயாரித்து வெளியிட்டபோதும்  ஊடகங்களை மதிக்கவில்லை. பத்திரிகையாளர்களுக்கான பிரத்யேக காட்சிகள் கூட  திரையிடப்படுவதில்லை.

இதனால் சம்பந்தப்பட்ட படத்தில் நாயகனாக நடித்த நடிகர்களே ஊடகங்களுக்கு சொந்தப் பொறுப்பில் படத்தை திரையிட்டு, உபசரித்து தன்னையும், படத்தையும் புரமோட் செய்துகொண்டனர்.

இப்போது அதே நிலைதான் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

திருசிற்றம்பலம் படத்திற்கான புரமோஷன் விஷயங்களில் சன் பிக்சர்ஸ் எந்தவிதமான முன் முயற்சியையும், ஆர்வத்தையும் காட்டவில்லை.

கர்ணன் படத்திற்கு பின் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், மாறன் என இரண்டு தமிழ் படங்களும் ஓடிடியில் வெளியானது. 

இன்றைய சூழலில் தனுஷ் என்கிற நடிகனுக்கு குறைந்தபட்ச வெற்றி தேவைப்பட்டது.  அதனால் திருச்சிற்றம்பலம் படம் சம்பந்தமான ஊடக ஒருங்கிணைப்பு, அதற்கான செலவுகளை நடிகர் தனுஷ் தனது சொந்தப் பணத்தில் செய்தார். 

முதல் நாள் தமிழக திரையரங்குகள் மூலம் சுமார் 9 கோடி ரூபாய், இரண்டாம் நாள் 10 கோடி ரூபாய் என மொத்த வசூல் கணக்குகள் சன் பிக்சர்ஸ்க்கு வந்து சேர்ந்தபோது அவர்களே அதிர்ந்து போனார்கள்.

ஏகப்பட்ட பில்டப்புகளுடன் வந்த விருமன் முதல் நாள் மொத்த வசூல் 8.20 கோடி ரூபாய் தான்.  எந்த பரபரப்பும் இல்லாமல் முதல் நாள் அதைவிட அதிக  மொத்த வசூலை எடுத்துக் கொடுத்திருக்கிறது திருச்சிற்றம்பலம். 

இதையடுத்து சன் பிக்சர்ஸ் சார்பில் தங்களது தொலைக்காட்சியில் திருச்சிற்றம்பலம் பட புரமோஷன் நிகழ்ச்சிக்கு தனுஷ் பேட்டி கொடுக்க கேட்டுள்ளனர்.

“படம் வெளியாகும் முன் என்னையும், நான் நடித்த படத்தையும் ஏளனமாக பார்த்தீர்கள். இப்பொழுது வெற்றி அடைந்த உடன் கூப்பிட்டால் உடனே வந்து உங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டுமா”  என்று கடும் கோபத்தில் கூறியுள்ளார் தனுஷ்.

இது சன் பிக்சர்ஸுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் திருசிற்றம்பலம் வட்டாரத்தில். சமாதான முயற்சிகள் தொடர்கின்றன.

இராமானுஜம்

திருச்சிற்றம்பலம்: தனுஷ் கேரக்டர் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.