இயக்குநர் மணிகண்டன் வீட்டில் தேசிய விருதுகளை திருடிச்சென்ற திருடர்கள், அதை மீண்டும் கொண்டு வந்து அவரது வீட்டு வாசலில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
‘காக்கா முட்டை’ படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மணிகண்டன் தொடர்ந்து ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது தன்னுடைய அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் சென்னையில் தங்கி இருந்தபோது அவரது சொந்த ஊரான உசிலம்பட்டியில் உள்ள அவரது வீட்டில், கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பூட்டை உடைத்து திருடர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
இதில் 5 பவுன் தங்கநகை, 1 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றுடன் அவரது இரண்டு தேசிய விருதுகளையும் திருடர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து மணிகண்டன் கொள்ளை சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பமாக மன்னிப்பு கடிதத்துடன் கொள்ளையடித்த தேசிய விருதுகளையும், மணிகண்டன் வீட்டின் வாசலில் நேற்றிரவு (பிப்ரவரி 12) திருடர்கள் வைத்து விட்டு சென்றுள்ளனர்.
அந்த மன்னிப்பு கடிதத்தில், ”அய்யா எங்களை மன்னித்து விடுங்கள். உங்கள் உழைப்பு உங்களுக்கு” என்று எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
‘காக்கா முட்டை’, ‘கடைசி விவசாயி’ படங்களுக்காக மணிகண்டன் தேசிய விருதுகளை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Video : ஹாலிவுட் விருதுக்கு ’ஜவான்’ பரிந்துரை : அட்லீ பெருமிதம்!
அதிரடியாக குறைந்த தங்கம் விலை!