எஞ்சாயி எஞ்சாமி சர்ச்சை : புறக்கணிக்கப்படுகிறாரா அறிவு..? பாடகி தீ விளக்கம்!

Published On:

| By christopher

எஞ்சாயி எஞ்சாமி பாடல் குறித்து பாடகர் அறிவு மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் ஏற்கெனவே விளக்கமளித்த நிலையில் தற்போது பாடகி தீ தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

பிரபல தமிழ் ராப் பாடகர் தெருக்குரல் அறிவு. புரட்சி கலந்து இவர் எழுதி, பாடிய சுயாதீன எனப்படும் தனியிசை மற்றும் சினிமா பாடல்கள் பலவும் பலரால் பாராட்டப்பட்டது. கடந்தாண்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் தயாரிப்பில் அறிவு எழுதி, பாடகி தீயுடன் இணைந்து பாடிய ’எஞ்சாயி எஞ்சாமி’ தனியிசை பாடல் இணையத்தில் ஹிட்டோ ஹிட்டு. யூடீயுபில் இதுவரை 400 மில்லியனுக்கும் மேல் பார்வைகளை பெற்றுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் அப்பாடலை பாடகி தீ மற்றும் மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் ஆகியோர் பாடி அசத்தியிருந்தார்கள். இதில் பாடகர் அறிவு பங்கேற்கவில்லை. செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் அவர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டாரா என்ற கேள்வி சமூகவலைதளங்களில் எழுப்பப்பட்டது.

இந்நிலையில் அறிவு, தான் புறக்கணிக்கபடுவது குறித்த உருக்கமான பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் நேற்று காலை பகிர்ந்திருந்தார். அந்த பதிவு பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு, தொடர்ந்து இணையத்தில் வைரலானது. இதனால் அறிவின் பதிவுக்கு விளக்கமளிக்கும் வகையில் சந்தோஷ் நாராயணன் தனது பக்க விளக்கத்தை பதிவிட்டிருந்தார்.

நேரம் கிடைத்தால் தயவுசெய்து படியுங்கள்!

இதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணனின் மகளும், பாடகியுமான தீ, ’நேரம் கிடைத்தால் தயவு செய்து இதனை முழுமையாக படியுங்கள்’ என்று தனது விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், ”வணக்கம்! எல்லோரும், ஆரோக்கியமாக நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். எனது இசைப் பயணத்தில் தொடர்ச்சியாக நீங்கள் அளித்துவரும் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றிகள். எனக்கு சொல்ல முடியாத அளவு மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றியுடன் இருக்கிறேன். நான் இப்போது எஞ்சாயி எஞ்சாமி குறித்து பேச விரும்புகிறேன்.

therukural arivu dhee explain

எஞ்சாயி எஞ்சாமி பாடல் நம்மைச் சுற்றியுள்ள அனைவரது வாழ்க்கையையும் நெருக்கமாகக் கொண்டுவரும் உன்னதமான நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. அங்கீகரிக்க, கொண்டாட மற்றும் பாதுகாக்க இயற்கையோடு ஒன்றி பஞ்சபூதங்களை வழிபட்டு, மனிதப் பிரிவினைகளால் (சாதி, மதம், முதலியன) வந்த இன்னல்களின்றி வாழ்ந்த பழங்காலத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றியதே பாடலின் மையக்கரு. அவர்கள் நம் வேர்கள். இந்தப் பாடல் அவர்களைப் ஒரு நினைவூட்டல். இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது, பூமியையும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதென்பது நமது கூட்டுப் பொறுப்பு. இந்தப் பாடல் நம் வேர்களைக் கண்டடைவதற்கும் அவற்றைத் தழுவுவதற்கும் வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் இருவரையும் குறிப்பாக அறிவு குறித்து பெருமையுடன் பேசியுள்ளேன். அவர்கள் இருவரின் முக்கியத்துவத்தை எந்தக் கட்டத்திலும் நான் குறைத்து மதிப்பிட்டது கிடையாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மேடையிலும் இருவரின் பங்களிப்பை முன்னிலைப்படுத்துவதை செய்துவருகிறேன். அதேநேரம், எங்களது பணி குறித்து மற்றவர்களால் பகிரப்படும் விளம்பரங்களில் எனக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

therukural arivu dhee explain

மூவருக்கும் சம உரிமை!

இயக்குனர் மணிகண்டனும், அவரின் `கடைசி விவசாயி’ திரைப்படமும் ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் உருவாக்கத்துக்கு பெரிய உந்து சக்தியாக அமைந்தது. ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் வரிகளும், அதன் உருவாக்கமும் எங்களது அணியால் விவாதிக்கப்பட்டே செம்மைப்படுத்தப்பட்டது. பாடல் வெளியாகும் வரை நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில்தான் இருந்தோம். பாடலுக்கான அர்த்தங்கள் மற்றும் அதன் கதைகள் பெரும்பாலானவற்றை பாடல் வெளியான பின் அறிவின் ஒவ்வொரு இன்டெர்வியூ மூலமாக நான் தெரிந்துகொண்டேன். அறிவு சொன்னது மிகவும் முக்கியமானது மட்டுமல்ல முதன்மையானது என நம்பி, அறிவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பினேன். பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம் மற்றும் உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன. ‘எஞ்சாயி எஞ்சாமி’ எட்டிய உயரங்களை அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து அனுபவிக்கவே ஆசைப்பட்டேன். ஏதேனும் ஒரு வாய்ப்பு அதில் சமத்துவமின்மையாக இருந்தால் ​​நிச்சயம் அதன் ஒரு பகுதியாக நான் இருக்கமாட்டேன்.

therukural arivu dhee explain

ரோலிங் ஸ்டோன் அட்டைப்படம் – எஞ்சாயி எஞ்சாமிக்கு அல்ல!

கடந்த ஆண்டு வெளியான ரோலிங் ஸ்டோன் இந்தியா இதழின் அட்டைப்படத்தில் நானும், ஷானும் இடம் பெற்றிருந்தோம். அது நான் மற்றும் ஷான் இணைந்து பாடி அடுத்து வரவுள்ள ஆல்பத்துக்கான அட்டைப்படம். அது எஞ்சாயி எஞ்சாமி அல்லது நீயே ஒலி பாடல்களுக்கானது அல்ல. அந்த அட்டைப் படத்திலும் அந்த பாடல் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. மேலும் அறிவு, சந்தோஷ் நாராயணன் மற்றும் மஜா கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளை ரோலிங்ஸ்டோன் வெளியிட இருக்கிறது என்பது எனக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களின் அட்டைப்படம் வெளியாகும் முன்பே ரோலிங் ஸ்டோன் இதழ் ஒரு ட்வீட்டில் அறிவித்தது. அப்போது அதனைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.

therukural arivu dhee explain

செஸ் ஒலிம்பியாட் சர்ச்சை!

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் எஞ்சாயி எஞ்சாமி பாடலை பாடுவதற்கு என்னையும், அறிவையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகினர். ஆனால் அறிவு அமெரிக்காவில் இருந்ததால் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனால் அடுத்து அவர் குரலை நிகழ்ச்சியில் பயன்படுத்திக் கொண்டோம். இதுகுறித்து ஒரு தலைசார்பற்ற நடுவருடனோ, ஊடகங்களுடனோ அல்லது இல்லாமலோ பகிரங்கமாகவோ அல்லது தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் அமர்ந்து உரையாடுவதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.

உண்மை எப்போதும் வெல்லும்!

தனது குரலுக்காகவும், பாடலில் அவரின் பங்களிப்புக்காகவும் நிகழ்வில் அறிவு பேசப்பட்டார். ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடலை உருவாக்கியதற்காக சந்தோஷ் நாராயணன், அறிவு, மஜ்ஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவின் ஆதரவிற்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பிரபஞ்சம் மற்றும் வாழ்க்கையின் மீது கொண்டுள்ள அன்பு, மரியாதையின் பொருட்டால் சக கலைஞர்களால் ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் பிறந்தது. என்னைப் பொறுத்தவரை, அது எப்போதும் அப்படியே இருக்கும். உண்மை எப்போதும் வெல்லும்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

தி லெஜண்ட்: நான்கு நாள் மொத்த வசூல் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share